ஐபிஎல்லின் 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றாக உள்ளது. இவ்வணி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்புத் தொடரின்போது கோப்பையை முதல்முறையாகக் கைப்பற்றி உச்சி முகர்ந்தது. இந்தச் சூழலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளும் இவ்வணியில் இடம்பிடித்துள்ளார். இவர் மீது, பெண் ஒருவர் திருமண மோசடிப் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த அந்தப் பெண், முதலமைச்சரின் ஆன்லைன் குறை தீர்க்கும் போர்டல், ஐஜிஆர்எஸ் மூலம் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் தனது புகாரில், கடந்த ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் வீரருடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் மனரீதியாகவும், உடலரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கிரிக்கெட் வீரர் அவரது குடும்பத்தினருக்கு தன்னை மருமகள் என்று அறிமுகப்படுத்தியதாகவும், இது அவரை முழுமையாக நம்ப வைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து பதிலளித்துள்ள தயாள், “உடல்ரீதியாகவும் வன்முறை மற்றும் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக என் மீது அவர் குற்றமசாட்டியுள்ளார். உறவின்போது, புகார்தாரர் உணர்ச்சி ரீதியாகவும், நிதி ரீதியாகவும் அவரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர், அந்த பெண் மற்ற ஆண்களுடனும் இதேபோன்ற உறவுகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்தேன்” என விளக்கம் அளித்துள்ளார்.
காவல் துறை இந்த வழக்கைச் சரியாகக் கையாளாத காரணத்தினாலேயே அவர் முதல்வரின் தனிப் பிரிவை நாடியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆதாரங்களையும் பாதிக்கப்பட்ட பெண் புகார்தாரர் வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. இதையடுத்தே இந்த விஷயத்தை உடனடியாகவும் பாரபட்சமின்றியும் விசாரித்து, குற்றம்சாட்டப்பட்டவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, நடப்பு ஐபிஎல் தொடரின் யாஷ் தயாளின் பங்களிப்பு அளப்பரியது. அவர் 15 போட்டிகளில் 13 விக்கெட்களை எடுத்திருந்தார்.