Charlotte Edwards
Charlotte Edwards Mumbai Indians
T20

WPL டீம் பிரிவ்யூ: மீண்டும் இரண்டாவது கோப்பையை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்..!

Viyan

வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது. 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் எப்படி இருக்கிறது. அதன் பலம், பலவீனம் என்னென்ன? ஓர் அலசல். இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்.

WPL 2023 செயல்பாடு

கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ். பேட்டிங், பௌலிங் என அனைத்து ஏரியாவிலும் அசத்தியது அந்த அணி. உலகத் தர ஆல்ரவுண்டர்கள் நிரம்பி இருந்ததால், 7-8 வீரர்களின் செயல்பாடே அந்த அணிக்குப் போதுமானதாக இருந்தது. ஹேலி மேத்யூஸ், நேட்-சிவர் பிரன்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து அசத்தினார்கள். இளம் ஓப்பனர் யஸ்திகா பாடியாவும் தொடர்ந்து நல்ல தொடக்கம் கொடுத்தார். இவர்கள் நால்வருமே 200+ ரன்கள் விளாசினார்கள். பந்துவீச்சிலும் நேட் சிவர்-பிரன்ட், ஹேலி மேத்யூஸ், இஸி வாங், அமீலியா கெர், சைகா இஷாக் என 5 வீராங்கனைகள் 10+ விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்கள். லீக் சுற்றின் முடிவில் இரண்டாவது இடம் பிடித்திருந்த அந்த அணி, எலிமினேட்டரில் உபி வாரியர்ஸை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் 1 ஓவர் மீதம் வைத்து டெல்லி கேபிடல்ஸை வென்று சாம்பியன் பட்டம் வென்றது அந்த அணி.

2024 ஏலத்தில்

இந்த ஆண்டுக்கான ஏலத்துக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி 4 பேரை ரிலீஸ் செய்தது. ஹெதர் கிரஹம், தாரா குஜ்ஜர், நீலம் பிஷ்ட், சோனம் யாதவ் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரையும் ரீடெய்ன் செய்தது அந்த அணி. இந்த ஏலத்தில் ஆனபெல் சதர்லேண்டுக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியோடு கடுமையாகப் போட்டியிட்டது மும்பை. ஆனால் அவரை வாங்க முடியவில்லை. இருந்தாலும் 1.2 கோடி ரூபாய் கொடுத்து சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயிலை வாங்கியிருக்கிறது அந்த அணி. மற்ற இடங்களுக்கு அமன்தீப் கௌர், ஃபாதிமா ஜாஃபர், சஜனா சஜீவன் ஆகியோரை வாங்கியிருக்கிறது. தமிழக ஆல்ரவுண்டர் கீர்த்தனா பாலகிருஷ்ணனை அவர் அடிப்படை விலையான 10 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது MI.

பலம்

கடந்த ஆண்டு இருந்த அந்த அணி இப்போது அப்டேட் ஆகவே செய்திருக்கிறது. யஸ்திகா பாடியா, ஹேலி மேத்யூஸ், நேட் சிவர்-பிரன்ட் என அந்த அணியின் டாப் ஆர்டர் அட்டகாசமாக இருக்கிறது. ஹர்மன்ப்ரீத் கௌர், அமீலியா கௌர் ஆகியோர் மிடில் ஆர்டரை வலுவாக்குகிறார்கள். அவர்கள் போக இந்திய ஆல்ரவுண்டர்கள் பூஜா வஸ்திரகர், அமஞ்சோத் கௌர் ஆகியோர் பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே கைகொடுப்பார்கள். ஸ்பின், பேஸ் என இரண்டு பௌலிங் யூனிட்டுமே அதே பலத்தோடு இருக்கிறது. சொல்லப்போனால் இஷ்மாயிலின் வருகையில் அவர்கள் பௌலிங் யூனிட் இன்னும் மெருகேறியிருக்கிறது. கடந்த சீசன் ஃபைனலில் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வென்ற இஸி வாங்குக்கே பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பலவீனம்

அந்த அணிக்கு பலவீனம் என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. யஸ்திகா பாடியாவுக்கு சரிசமமான மாற்று இல்லாததை வேண்டுமானால் ஒரேயொரு பலவீனம் என்று சொல்லலாம். பிரியங்கா பாலா மட்டுமே அணியில் இருக்கும் இன்னொரு கீப்பர்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்

1. ஹேலி மேத்யூஸ்
2. யஸ்திகா பாடியா (விக்கெட் கீப்பர்)
3. நேட் சிவர்-பிரன்ட்
4. ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்)
5. அமீலியா கெர்
6. பூஜா வஸ்த்ரகர்
7. அமஞ்சோத் கௌர்
8. ஹுமைரா காஸி
9. ஜிந்திமனி கலிதா
10. ஷப்னிம் இஷ்மாய்ல்
11. சைகா இஷாக்