எப்படி பந்துவீச்சாளர்களுக்கு பந்தின் அளவு அளக்கப்பட்டு வழங்கப்படுகிறதோ, அதேபோல பேட்ஸ்மேன்களின் பேட் அளவும் அளக்கப்பட்ட பிறகே விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு முன்னெடுப்பாக 2025 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா, பிலிப் சால்ட், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரன் ஹெட்மயர் போன்ற வீரர்களின் பேட்டின் அளவு சரிபார்க்கப்பட்ட பின்னரே விளையாட அனுமதிக்கப்பட்டதை நம்மால் பார்க்கமுடிந்தது.
இது புதிய விதிமுறையா என்றால் இல்லை, ஏற்கனவே பேட்ஸ்மேன்கள் போட்டிக்கு முன்னதாக அவர்களுடைய டிரெஸ்ஸிங் அறையில் வைத்து அவர்களின் பேட்டின் அளவை சமர்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மறைமுகமாக நடந்துவந்த விதிமுறை தற்போது நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் பகிரங்கமாக மைதானத்தில் நடத்தப்படுகிறது.
இதற்கு காரணம் ஐபிஎல் மட்டுமில்லாமல் டி20 கிரிக்கெட் அனைத்துமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் மாறியுள்ளது. அதிலும் கடந்த ஐபிஎல் சீசனில் 3 முறை 250 ரன்களுக்கு மேல் அடித்து புதிய அட்டாக்கிங் கிரிக்கெட்டை சன்ரைசர்ஸ் அணி அறிமுகப்படுத்திய நிலையில், நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதிலும் அனைத்து அணிகளும் 200 ரன்களுக்கு மேல் மட்டுமே அடித்துவருகின்றனர்.
இந்த சூழலில் பவுலர்களின் நிலைமை என்பது இம்பேக்ட் பிளேயர் என்ற விதிமுறை வந்ததற்கு பிறகு மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனால் பேட்ஸ்மேன்கள் பேட்டின் அளவை மேலும் அதிகமாக்கி கொண்டுவந்து விளையாட கூடாது என்பதற்காக பேட் அளவை சரிபார்க்கும் முடிவை பிசிசிஐ முன்னெடுத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக யூடியூப் சேனலில் பேசியிருந்த அஸ்வின், டி20 கிரிக்கெட்டில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை என்பது அதிகரித்த பிறகு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் விளையாடும்போது பவுலர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இது அனைத்து பவுலர்களுக்கும் நிச்சயம் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும், கொஞ்ச நாளில் பவுலர்களுக்கு உளவியல் சார்ந்த சிகிச்சை அளிக்கப்படும் நிலைமையும் ஏற்படலாம் என தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் சமீபத்தில் பவுலர்களின் மோசமான நிலைமை குறித்து பேசியிருந்த ரபாடா, “பேட் மற்றும் பந்துக்கு இடையில் சமநிலை இல்லையென்றால், இந்த விளையாட்டை கிரிக்கெட் என்று அழைக்காமல் பேட்டிங் என்று மட்டும் கூறுங்கள்” என கூறியிருந்தார்.
பேட்ஸ்மேன்களின் பேட்டிங் அளவு சரிபார்ப்பது குறித்து பேசியிருந்த நடுவர் ஒருவர், “பேட்டர்கள் தங்களிடம் நிறைய பேட்களை வைத்துள்ளதால், மைதானத்திற்கு வரும்போது சமநிலையற்ற பேட்டை எடுத்துவந்துவிட வாய்ப்பு இருக்கிறது. அதனால் பேட்டின் அளவு சரிபார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
பேட்ஸ்மேன்களின் பேட்டின் அளவை கேஜ் (Gauge) கொண்டு நடுவர்கள் அளக்கிறார்கள். விதிமுறையின் படி பேட்டின் அகலமானது 4.25 இன்ச்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், அது கேஜ் வழியாக சுதந்திரமாக செல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றன.
பேட் அளவானது ‘அகலம் (Width): 4.25 இன்ச் / 10.8 செமீ, ஆழம் (Depth): 2.64 இன்ச் / 6.7 செமீ, விளிம்பு (Edge): 1.56 இன்ச் / 4.0 செமீ’ என்ற அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அது கேஜ் வழியாக எளிதாக செல்லவேண்டியது அவசியம்.