2025 ஐபிஎல் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலமானது சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற்றுவருகிறது.
நவம்பர் 24ம் தேதியான நேற்று ஏலம் முதல் நாள் நடந்த நிலையில் மிகப்பெரிய ஏலத்திற்கு இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் ரூ.27 கோடி, ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடிக்கு சென்றனர்.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலமானது நவம்பர் 25ம் தேதியான இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஏலத்தில் பல சுவாரசியமான பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் ரூ.75 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு வந்த ஆப்கானிஸ்தான் வீரரான அல்லா கசன்ஃபர் ரூ.4.80 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் 18 வயது இளம் ஸ்பின்னரான அல்லாஹ் கசன்ஃபருக்கு ஆர்சிபி, கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடுமையாக போட்டிப்போட்டன.
75 லட்சம் அடிப்படை விலையிலிருந்த அவரை ரூ.4.80 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது. அதற்கு முன் பட்டியலிடப்பட்ட கேசவ் மஹாராஜ், முஜுப் உர் ரஹ்மான் மற்றும் அடில் ரசீத் போன்ற ஸ்டார் ஸ்பின்னர்களுக்கு எந்த அணியும் செல்லாத நிலையில், 18 வயது வீரரான அல்லா கசன்ஃபருக்கு சென்றது கவனத்தை பெற்றுள்ளது.
2006-ல் பிறந்த 18 வயதான ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர் அல்லா கசன்ஃபர், இந்த மாத தொடக்கத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு ஆப்கானிஸ்தானின் அடுத்த பெரிய வீரராக வருவார் என்ற பாராட்டை பெற்றுள்ளார்.
அல்லா கசன்ஃபர் இடம் இருக்கும் ஷார்ப்பான பவுன்சர்கள் மற்றும் கேரம் பந்துகள் அவரை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முஜுப் உர் ரஹ்மானுடன் ஒப்பிட வழிவகுத்துள்ளது.
சமீபத்தில் வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியகோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி கோப்பையை வென்றது. அந்த தொடரில் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு பிரிவில் நம்பிக்கை வீரராக அல்லா கசன்ஃபர் விளங்கினார். இதுவரை 16 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், 5.71 எகானமியுடன் 29 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 2024 ஐபிஎல் ஏலத்தில் இதுவரை டிரென்ட் போல்ட் ரூ.12.5 கோடி, தீபக் சாஹர் ரூ.9.25 கோடி, நமன் திர் (ஆர்டிஎம் மூலம் ரூ. 5.25 கோடி), ராபின் மின்ஸ் (ரூ. 65 லட்சம்), கர்ன் ஷர்மா (ரூ. 50 லட்சம்), ரியான் ரிக்கல்டன் (ரூ. 1 கோடி) முதலிய வீரர்களை விலைக்கு வாங்கியுள்ளது.