David Warner
David Warner  Vijay Verma
T20

DC Auction Strategy | 11 வீரர்கள் அவுட்... 28.95 கோடி... என்ன செய்ய வேண்டும் டெல்லி..?

Viyan

டிரேட் செய்யப்பட்ட வீரர்கள்

டெல்லி கேபிடல்ஸ் யாரையும் டிரேட் செய்யவில்லை

ரிலீஸ் செய்த வீரர்கள்

2023 ஐபிஎல் தொடரில் தங்கள் அணியில் இருந்த 11 வீரர்களை கழட்டி விட்டிருக்கிறது டெல்லி கேபிடல்ஸ். வெளிநாட்டு வீரர்களான ரைலி ரூஸோ, ஃபில் சால்ட், ரோவ்மன் பவல், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகியோரை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். சேத்தன் சகாரியா, மனீஷ் பாண்டே, சர்ஃபராஸ் கான் போன்ற இந்திய வீரர்களும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்

எத்தனை வீரர்கள் தேவை? எவ்வளவு இருக்கிறது?

ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் - 11
ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள் - 16
நிரப்பவேண்டிய மொத்த ஸ்லாட்கள் - 9
நிரப்பவேண்டிய வெளிநாட்டு ஸ்லாட்கள் - 4
ஏலத்துக்கு மீதமிருக்கும் தொகை - 28.95 கோடி ரூபாய்

பிளேயிங் லெவன் எப்படி இருக்கிறது

1. டேவிட் வார்னர்*
2. பிரித்வி ஷா
3. மிட்செல் மார்ஷ்*
4. ரிஷப் பண்ட்
5.
6. அக்‌ஷர் படேல்
7.
8. ஏன்ரிச் நார்கியா*
9. கலீல் அஹமது
10. குல்தீப் யாதவ்
11. முகேஷ் குமார்
இம்பேக்ட் பிளேயர்: லலித் யாதவ்

எந்தெந்த வீரர்களை அந்த அணி டார்கெட் செய்யும்?

ஏலத்துக்கு முன்பாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஒரு மிகப் பெரிய நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. விபத்தால் அடைந்த காயத்தின் காரணமாக கடந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இருந்த கேப்டன் ரிஷப் பண்ட், 2024 ஐபிஎல் தொடரில் களம் காண்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அந்த அணிக்கு மிகப் பெரிய பலமாக அமையும்.

ஏலத்தைப் பொறுத்தவரை டெல்லி கேபிடல்ஸ் ஒருசில இடங்களை சிறந்த வீரர்களை வைத்து நிரப்பவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலே இருக்கும் பிளேயிங் லெவன்படி பார்த்தாலே, அவர்களுக்கு லெவனில் ஆடுவதற்கான 2 வீரர்கள் தேவை. அதுமட்டுமல்லாமல் கலீல் அஹமதுவை அனைத்து போட்டிகளிலும் நம்ப முடியாது என்பதால், முன்னணி இந்திய பௌலர் ஒருவரை எடுப்பதும் அவசியம் ஆகிறது.

அக்‌ஷர் படேல், மிட்செல் மார்ஷ் என டாப் 7ல் இரு பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதால், அந்த அணி அந்த இரண்டு இடங்களையுமே பேட்ஸ்மேன்களை வைத்து நிரப்ப நினைக்கலாம். மிடில் ஆர்டரில் ஆடக்கூடிய அந்த வெளிநாட்டு வீரராக அவர்கள் டேரில் மிட்செல், ஜாஷ் இங்லிஸ், ஹேரி புரூக் ஆகியோரைக் கருதலாம். இவர்களுக்கு டெல்லி அணி கடுமையாகப் போட்டியிட்டால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஜாஷ் இங்லிஸ் இந்தியாவில் ஓரளவு சிறப்பாக ஆடியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், விக்கெட் கீப்பராகவும் இருப்பதால் அது நிச்சயம் டெல்லி நிர்வாகத்தை ஈர்க்கும். ஆஸ்திரேலியர் என்பதால் நிச்சயம் பான்டிங்கும் அவரை எடுக்க விருபப்படுவார்.

ஏற்கெனவே வார்னர், பண்ட், அக்‌ஷர் என இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால், டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பக்கம் போகாமல் இருப்பது நல்லது.

டாப் 3 இடங்களில் இரண்டை வெளிநாட்டு வீரர்கள் ஆக்கிரமித்திருக்கும் நிலையில் மிடில் ஆர்டரில் ஆடக்கூடிய நல்ல இந்திய வீரர்கள் இருப்பது மிகவும் அவசியம். அதனால் அந்த அணி பெரும் தொகை கொடுத்து ஷாரூக் கானுக்கு போட்டியிடலாம். அந்த அணிக்கு சமீப காலமாக கிடைத்திடாத ஃபினிஷராக அவர் இருப்பார். அதுமட்டுமல்லாமல் ஆஃப் ஸ்பின் ஆப்ஷனும் கொடுப்பார்.

2023 சீசனுக்கு முன்பு ஷர்துல் தாக்கூரை நைட்ரைடர்சுக்கு டிரேட் செய்திருந்தது டெல்லி கேபிடல்ஸ். இந்த ஏலத்தில் அவரை மீண்டும் அணிக்குக் கொண்டுவர அவர்கள் நினைக்கலாம். அவர் இருந்தால் பேட்டிங் டெப்த் கூடும். மேலும் கலீல் அஹமதுவை பேக் அப் ஆப்ஷனாக மாற்றிடலாம். ஷர்துல் இரண்டாவது செட்டில் சீக்கிரமே வந்துவிடுவார் என்பதால், மற்ற காம்பினேஷன்கள் பற்றி யோசிக்காமல் வழக்கம்போல் டெல்லி அணி போட்டியிடக்கூடும். ஷர்துல் இல்லாவிட்டால் ஹர்ஷல் படேலும் அந்த இடத்தை நிரப்பலாம். அதனால் இருவருக்குமே டெல்லி போட்டிபோடும். (பிகு: டெல்லி உரிமையாளர் அத்தனை வீரர்களுக்கும் கையைத் தூக்குவார் என்பது தனிக்கதை)

இவைபோக, அந்த அணிக்கு நிறைய பேக் அப் ஆப்ஷன்களும் தேவைப்படுகிறது. எப்போதுவேண்டுமானாலும் காயம் அடையக்கூடிய வீரர்களான நார்கியா, மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கு சரியான மாற்று வீரர்களை அந்த அணி வாங்கவேண்டும். பிரித்வி ஷாவின் நிலை எப்படிவேண்டுமானாலும் மாறும் என்பதால் பேக் அப் ஓப்பனிங் ஆப்ஷனும் முக்கியம். குறைந்தபட்சம் 2 அல்லது 3 இந்திய பேட்டர்களையாவது அந்த அணி வாங்கவேண்டும்.