Ben Stokes
Ben Stokes  File Image
T20

CSK Auction Strategy | ஜெரால்ட் கொட்சியா இந்த 'சென்னைக்கும்' ஆடுவாரா..?

Viyan

டிரேட் செய்யப்பட்ட வீரர்கள்

இந்த ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் யாரையும் டிரேட் செய்யவில்லை. ஏலத்துக்குப் பின் மும்பையோடு டிரேட் நடக்கப் போகிறது என்று பல வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. சூப்பர் கிங்ஸ் மற்ற அணிகளைப் போல் அவ்வளவு பெரிய டிரேட் செய்யுமா என்பது கேள்விக்குறிதான். இருந்தாலும், அது ஏலத்துக்குப் பின்பான தலைவலி.

ரிலீஸ் செய்த வீரர்கள்

இந்த ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் மொத்தம் 7 வீரர்களை ரிலீஸ் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு ஏலத்தில் 16.25 கோடி ரூபாய் கொடுத்து பென் ஸ்டோக்ஸை வாங்கியிருந்தது சிஎஸ்கே. ஆனால் அவர் இந்த தொடரில் பங்கெடுக்கப்போவதில்லை என்று சொல்லியிருந்தார். அதனால் அவரை ரிலீஸ் செய்திருக்கிறது சூப்பர் கிங்ஸ். அவரோடு கைல் ஜேமிசன், சிசாண்டா மகாலா, டுவைன் பிரிடோரியஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்களையும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். போக, ஆகாஷ் சிங், சுப்ரான்ஷு சேனாபதி, பகத் வர்மா ஆகிய இந்திய வீரர்களையும் கழட்டிவிட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் போக, முன்னணி இந்திய பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு ஓய்வு பெற்றிருக்கிறார். ஆக, கடந்த ஆண்டு ஸ்குவாடில் இருந்தவர்களில் எட்டு பேர் இந்த சீசன் இல்லை.

எத்தனை வீரர்கள் தேவை? எவ்வளவு இருக்கிறது?

ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் - 7
ஓய்வு பெற்ற வீரர் - 1
ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள் - 19
நிரப்பவேண்டிய மொத்த ஸ்லாட்கள் - 6
நிரப்பவேண்டிய வெளிநாட்டு ஸ்லாட்கள் - 3
ஏலத்துக்கு மீதமிருக்கும் தொகை - 31.4 கோடி ரூபாய்

பிளேயிங் லெவன் எப்படி இருக்கிறது

1. ருதுராஜ் கெய்க்வாட்
2. டெவன் கான்வே*
3. அஜிங்க்யா ரஹானே
4. ஷிவம் தூபே
5. மொயின் அலி*
6. ரவீந்திர ஜடேஜா
7. எம் எஸ் தோனி
8. தீபக் சஹார்
9. மஹீஷ் தீக்‌ஷனா*
10. முகேஷ் சௌத்ரி
11. மதீசா பதிரானா*

இம்பேக்ட் பிளேயர்: துஷார் தேஷ்பாண்டே

எந்தெந்த வீரர்களை அந்த அணி டார்கெட் செய்யும்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை அவர்களின் 'கோர்' டீமை அப்படியே ரீடெய்ன் செய்திருக்கிறார்கள். கடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடிய வீரர்கள் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள். அவர்களின் முக்கிய இலக்காக இருக்கப்போவது அம்பதி ராயுடுவின் இடத்தை நிரப்புவது தான். நம் ரசிகர்கள் மனிஷ் பாண்டே, கருண் நாயர் ஆகியோரை வாங்குவார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலரும் தமிழக வீரர் ஷாரூக் கானை டார்கெட் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர் நிச்சயம் நல்ல தேர்வாக இருப்பார். ஷாரூக் கானை வாங்கும்பட்சத்தில் சூப்பர் கிங்ஸின் மிடில் ஆர்டர் பன்மடங்கு பலமடையும். ஸ்பின்னை சிறப்பாக ஆடும் தூபே கொஞ்சம் மேலே வந்தால் மிடில் ஓவர்களில் அவரால் நன்கு ஸ்கோர் செய்ய முடியும்.

Shahrukh Khan

அதேசமயம் ஸ்டோக்ஸின் இடத்தையும் அவர்கள் நிரப்ப நினைப்பார்கள். டிராவிஸ் ஹெட் போன்ற ஒரு வீரரை வாங்கி மொயின் அலியின் இடத்தை அப்கிரேட் செய்ய நினைக்கலாம். முரட்டு ஃபார்மில் இருக்கும் ஹெட் நிச்சயம் பெரும் தொகைக்கு விலை போவார். ஆனால் சூப்பர் கிங்ஸ் நிறைய தொகை வைத்திருப்பதால் நிச்சயம் அவர்கள் டார்கெட் செய்தால் வாங்க முடியும். ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியொரும் கூட அவர்களின் இலக்காக இருக்க வாய்ப்புண்டு.

முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ்பாண்டே ஆகியோரின் இடத்தையும் கூட அவர்கள் அப்கிரேட் செய்ய முயற்சி செய்யலாம். முன்னாள் வீரர் ஷர்துல் தாக்கூர் இந்த ஏலத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ஹர்ஷல் படேல் சேப்பாக்க மைதானத்துக்கு ஏற்ற வீரராக இருப்பார். இவர்களில் ஒருவரை சூப்பர் கிங்ஸ் பெரும் தொகைக்கு வாங்கினால் அவர்களின் பௌலிங் பன்மடங்கு பலம் பெறும்.

வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் ஒருவரையும் சூப்பர் கிங்ஸ் டார்கெட் செய்யக்கூடும். ஒருவேளை இந்திய பௌலர்களில் அதிகம் முதலீடு செய்யவில்லை என்றால் ஜெரால்ட் கொட்சியா போன்ற ஒரு பௌலருக்கு பெரும் தொகையை செலவளிக்கலாம். அவர் ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா டி20 லீக் தொடர்களில் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காகத்தான் விளையாடிக்கொண்டிருக்கிறார். அதனால் அதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம்.