ஐபிஎல் தொடரின் 18வது சீசன் அடுத்த மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கப்போகிறது. இந்த சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடக்கவிருக்கிறது. இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் நடக்கிறது இந்த ஏலம். அதில் ஒவ்வொரு அணியும் என்ன திட்டத்துடன் வருவார்கள் என்பது பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்ன திட்டங்களோடு வரும் என்பது பற்றி அலசுவோம்.
லக்னோ அணி இந்த ஏலத்துக்கு முன்பாக 5 வீரர்களைத் தக்கவைத்திருக்கிறது. அதிலும் அவர்களின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரனுக்கு 21 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்திருக்கிறார்கள். அவர்களின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோயையும், இளம் வேகப்புயல் மயாங்க் யாதவையும் தலா 11 கோடிக்கு ரீடெய்ன் செய்திருக்கிறார்கள். அன்கேப்ட் வீரர்களான ஆயுஷ் பதோனி, மோசின் கான் இருவரையும் தலா 4 கோடி ரூபாய்க்கு தக்கவைத்திருக்கிறது அந்த அணி. இந்த 5 வீரர்களுக்கு மொத்தம் 61 கோடி ரூபாய் செலவு செய்திருக்கும் நிலையில், அவர்களுக்கு இப்போது கையில் 69 கோடி ரூபாய் இருக்கிறது. போக, 1 RTM கார்டும் இருக்கிறது.
அந்த அணிக்கு இருக்கும் முக்கியக் கேள்வி அவர்களுக்குக் கேப்டன் தேவையா இல்லை பூரனையே கேப்டனாக்கப்போகிறார்களா என்பது. ஒருவேளை ஷ்ரேயாஸ் ஐயரை குறைவான தொகைக்கு வாங்கினால் அவர்களுக்கு ஒரு சாம்பியன் கேப்டன் கிடைத்துவிடுவார். பேட்டிங்கையும் அது பன்மடங்கு பலப்படுத்தும். அதனால் அந்த அணி நிச்சயம் அதற்கு முயற்சி செய்யும்.
அடுத்ததாக இருக்கும் முக்கிய இலக்கு, அந்த அணி கையில் இருக்கும் RTM கார்டைப் பயன்படுத்தி மார்க்கஸ் ஸ்டோய்னிஸை மீண்டும் வாங்கிடவேண்டும். நான்காவது கேப்ட் வீரரை ரீடெய்ன் செய்திருந்தால் 18 கோடி ரூபாய் கொடுத்திருக்கவேண்டும் என்பதால், அவரை அவர்கள் தக்கவைக்காமல் இருந்திருக்கலாம். அவரை நிச்சயம் அதற்குக் குறைவான தொகைக்கு எடுக்க முடியும். மிகவும் தரமான ஆல்ரவுண்டரான அவர் அவர்களுக்கு நல்ல பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். மேலும், பேட்டிங்கில் எந்த இடத்திலும் அவரால் ஆடமுடியும். அதனால் அது அவர்கள் மற்ற வீரர்களை வாங்குவதையும் எளிதாக்கும்.
பதோனி, ஸ்டோய்னிஸ், பூரன் என மிடில் ஆர்டர் பலமாகிவிட்டால், அவர்களின் முக்கிய இலக்கு ஓப்பனர்களை வாங்குவதாக இருக்கும். ராகுல் ஆடியபோது அவர்களுக்கு ஸ்டிரைக் ரேட் பிரச்சனை இருந்தது. டி காக் கூட எதிர்பார்த்த அளவுக்கு பெரிய பங்களிப்பைக் கொடுக்கவில்லை. அதனால் நிச்சயம் அவர்கள் அதிரடி காட்டக்கூடிய இரு ஓப்பனர்களைக் களமிறக்க நினைப்பார்கள். அதனால் ஒரு அதிரடி வெளிநாட்டு ஓப்பனரை எடுப்பது அவர்களின் பிரதான திட்டமாக இருக்கும். இந்திய ஓப்பனர்கள், அதிரடி என்று வரும்போது இஷன் கிஷன் அவர்களுக்கு ஏற்ற ஆளாக இருக்கக்கூடும். போக, இரண்டாவது விக்கெட் கீப்பிங் ஆப்ஷனும் கிடைத்துவிடும். இஷன் கிஷன் + ஒரு அதிரடி வலது கை பேட்டிங் வெளிநாட்டு ஓப்பனர் நல்ல காம்பினேஷனாக இருக்கும். அதற்காக அவர்கள் ஃப்ரேஸர் மெக்கர்க், ஃபில் சால்ட், வில் ஜேக்ஸ் போன்றவர்களை குறிவைக்கலாம்.
அடுத்ததாக அவர்கள் ஃபினிஷிங்கிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். பெரும்பாலான போட்டிகளில் அவர்கள் பூரனையே நம்பி இருக்கவேண்டியதாக இருந்தது. அதேசமயம் ஒரு வெளிநாட்டு பௌலரை வாங்க நினைத்தால், அவர்களால் இங்கு வெளிநாட்டு பேட்ஸ்மேனைக் களமிறக்க முடியாது. எனவே நல்ல இந்திய ஃபினிஷர்களை அவர்கள் குறிவைக்கவேண்டும். நேஹல் வதேரா, நமன் தீர், அஷுதோஷ் ஷர்மா போன்ற வீரர்கள் நிச்சயம் சிறந்த தேர்வாக இருப்பார்கள். போக, அவர்களின் ஆஸ்தான ஆல்ரவுண்டர் குருனால் பாண்டியாவையும் அவர்கள் மீண்டும் வாங்க முற்படலாம். ஒருவேளை அவரைத் தவறவிட்டால் வாஷிங்டன் சுந்தரை இரண்டாவது ஸ்பின்னராக எடுக்க முயற்சிக்கலாம்.
பௌலிங்கில் அவர்களுக்கு நிச்சயம் ஒரு அட்டகாசமான வெளிநாட்டு வீரர் தேவை. மோசின் கான், மயாங்க் யாதவ் என அவர்களின் இரு பௌலர்களும் அனுபவம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களை வழிநடத்தக் கூடிய ஒரு பௌலர் தேவை. மயாங்க் யாதவ் மிடில் ஓவர்களுக்குத்தான் பொறுத்தமாக இருப்பார் என்பதால் அந்த பௌலர் பவர்பிளே, டெத் என இரண்டு ஏரியாவிலும் பந்துவீசுபவராகவும் இருக்கவேண்டும். எனவே ஸ்டார்க், ரபாடா, ஆர்ச்சர் போன்ற ஒரு பெரிய பெயரை வாங்குவது அவர்களுக்கு முக்கியம். அதுதான் வேகப்பந்துவீச்சை சற்றேனும் பலப்படுத்தும். அந்த இளம் பௌலர்களுக்கும் அந்த சீனியர்களால் உதவ முடியும்.