விஷ்ணு விஷால், தோனி எக்ஸ் தளம்
T20

CSK தொடர் தோல்வி | "தனி நபரை விட விளையாட்டே முக்கியம்” - தோனியை காட்டமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

”எந்த ஒரு தனி நபரும் விளையாட்டைவிடப் பெரிது அல்ல” என தோனியை மறைமுகமாக விமர்சித்து நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.

Prakash J

இந்தியாவில் நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, தற்போது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இதில் 10 அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்புத் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக, சென்னை சேப்பாக்கத்தில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக பெருத்த தோல்வியைச் சந்தித்தது. தவிர மோசமான சாதனைகளையும் படைத்தது. இதனால் அவ்வணி மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தவிர சமூக வலைதளங்களும் சென்னை அணியைக் கிண்டல் அடித்து மீம்ஸ்களைத் தெறிக்கவிட்டு வருகின்றன.

இந்த நிலையில் சென்னை அணியின் தோல்வி குறித்தும், அதன் கேப்டன் தோனி குறித்தும் நடிகர் விஷ்ணு விஷால் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். இதுகுறித்து விஷ்ணு விஷால் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில், ”நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைத் தவிர்த்துவிட்டேன். நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால் இது அராஜகம். ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் இறங்கவேண்டும். எந்த ஒரு விளையாட்டும் வெற்றி பெறுவதற்காக விளையாடப்படுவதில்லையா? இது இப்போது ஒரு சர்க்கசைப் பார்ப்பது போல உள்ளது. எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல” எனப் பதிவிட்டுள்ளார்.