பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் விமானப் படையும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்களைத் துல்லியமாக அழித்தது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவமும், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்திய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கிப் போரைத் தொடங்கியது. இதை இந்தியா வழிமறித்து அழித்தது. இதனால் இருதரப்பிலும் போர் தீவிரமாய் நடைபெற்று வந்தது.
இந்த சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அமெரிக்காவின் நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் முழுமையாகவும், உடனடியாகவும் சண்டையை நிறுத்த ஒப்புதல் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ர்மப் தெரிவித்திருந்தார். அதனை இந்திய அரசும் உறுதிசெய்தது.
அமெரிக்கா தலையீடு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் போர் நிறுத்தம் அறிவிப்பு என இன்று மாலை 5 மணியிலிருந்து இரண்டு நாடுகளுக்கு இடையே தாக்குதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் குறித்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டினார். அதேநேரத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த சூழலில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக், “Kutte ki dum tedi ki tedi hi rehti hai” என பதிவிட்டு கடுமையாக சாடியுள்ளார். இதன்பொருள் ‘என்ன செய்தாலும் நாயின் வாலை நிமிர்த்த முடியாது, அது அப்படியே தான் இருக்கும்’ என்பதாக ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.
விரேந்திர சேவாக்கை தொடர்ந்து ராகுல் திவேத்தியா, யுஸ்வேந்திர சாஹல் முதலிய இந்திய வீரர்களும் ”Kutte ki dum tedi ki tedi hi rehti hai” என்ற வாசகத்தை பதிவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.