சண்டிகரில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆர்சிபி அணி 157 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.
158 ரன்கள் அடித்தால் வெற்றி என பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில், அதிரடியாக விளையாடிய படிக்கல் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 61 ரன்கள் அடித்தார். இறுதிவரை நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 73 ரன்கள் அடிக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது ஆர்சிபி அணி.
73 ரன்கள் அடித்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அந்த விருதை படிக்கலுக்கு வழங்கியிருக்க வேண்டும் என கோலி தெரிவித்தார்.
ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய விராட் கோலி, “இந்த சீசனில் எங்களுடைய அணி நிர்வாகம் ஏலத்தில் சிறந்தவேலையை செய்தது. எப்போதும் இல்லாதவகையில் ஒருவர் போனால் ஒருவர் என ரஜத் பட்டிதார், படிக்கல், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட் போன்ற வீரர்கள் கேம் வின்னர்களாக செயல்பட்டுவருகின்றனர். இன்றைய போட்டியில் கூட படிக்கல் ஆட்டத்தை மாற்றும் ஒரு பேட்டிங்கை வெளிப்படுத்தினார், அவருக்கு தான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும், எதற்காக எனக்கு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை” என்று பேசினார்.
கடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்தில் 26 ரன்கள் அடித்த தோனி ஆட்டநாயகன் விருதை பெற்றார். அப்போது பேசிய தோனி, எனக்கு பதிலாக நூர் அகமதுவிற்கு இந்த விருதை கொடுத்திருக்க வேண்டும், அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் என்று தெரிவித்திருந்தார்.