தோனி ஆடுகளத்தில் இறங்கி வந்து பந்தை கடினமாக தாக்கினார், அதை பிடிக்க முயன்ற பந்துவீச்சாளரின் கைகளில் பட்டு பந்து சென்றது. பின்னர் பவுலர் பந்தை தான் எடுக்க ஓடுகிறார் என்று நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் அவர் பந்தை தாண்டி பெவிலியன் நோக்கி ஓடி கொண்டிருந்தார்”இப்படித்தான் தோனியை முதல்முறையாக பார்த்தேன் என்று கூறியுள்ளார் ராபின் உத்தப்பா.
உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு முதல்தர கிரிக்கெட் டி20 லீக் தொடராக சென்று சேர்ந்துள்ளது, இந்தியன் பிரீமியர் லீக். அப்படி உலக கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என்பதை எல்லாம் தாண்டி, ஒவ்வொரு நாட்டின் தேசிய அணிக்குள் நுழைய எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கும் புதிய இளம் கிரிக்கெட் வீரர்கள் ஐபில் தொடரை ஒரு சிறந்த களமாகவே பார்த்து வருகின்றனர். அந்தவகையில் அனைவரும் கொண்டாடும் ஒரு திருவிழாவாக பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இன்று மாலை தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என இரண்டு சாம்பியன் அணிகள் இன்று முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2023 ஐபில் தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அணிக்கு எதிராக எம்எஸ் தோனி விளையாட தகுதியாக இருக்கிறாரா? என்ற கேள்வி தற்போது அதிகமாக சமூக வலைதளத்தில் உலாவி வருகின்றன. ஆனால் முதல் போட்டியில் தோனி பங்கேற்பாரா, இல்லையா என்பதற்கான பதில் எதுவாக இருந்தாலும் சரி, இந்த புதிய ஐபிஎல் சீசன் முழுவதும் அனைவரும் விரும்பக்கூடிய ஒரு கேப்டனாக சிஎஸ்கேவை தோனி வழிநடத்தவிருக்கிறார் என்பதைப் பார்க்கவே உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்று கூறினால் அதை மறுப்பதற்கில்லை. தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் சீசனாக பார்க்கப்படும் நிலையில், 2019-க்குப் பிறகு முதல் முறையாக சென்னையில் உள்ள நம் சேப்பாக் மைதானத்தில் தோனி விளையாடவிருக்கிறார்.
இந்நிலையில் தான் 16ஆவது ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக, தோனியின் நண்பரும் முன்னாள் இந்திய மற்றும் சிஎஸ்கே அணி வீரருமான ராபின் உத்தப்பா, தோனியுடனான தனது முதல் சந்திப்பின் நினைவை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். கடந்த ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த உத்தப்பா, பெங்களூரில் நடந்த பயிற்சி முகாமின் போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராமின் விரல்களை தோனி எப்படி உடைத்தார் என்பதைப் பகிர்ந்தார்.
தோனி குறித்து ராபின் பேசுகையில், “2003ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள என்சிஏவில் நடந்த இந்தியா A அணிக்கான கேம்ப் ஒன்றில் தான் தலைநிறைய முடியோடு பரட்டை மண்டையோடு இருக்கும் ஒருவரை பார்த்தேன். அவர் சின்னசாமி ஸ்டேடியத்தின் நடுவில் இருந்து முனாஃப் பட்டேலுக்கு எதிராக பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
தொடர்ந்து அந்த வீரர் முனாஃப் பட்டேல், ஆவிஷ்கர் சால்வி போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அபாரமான சிக்ஸர்களை பறக்கவிட்டுக்கொண்டே இருந்தார். அப்போது தான் அவர் ஹெலிகாப்டர் ஷாட்டை வெளியே கொண்டு வந்தார். அதற்கு பிறகு பல பந்துகள் மைதானத்திற்கு வெளியே பறந்து போய் விழுந்தன. அது தான் எம்எஸ் தோனி, அவரை முதன்முதலாக அப்படித்தான் பார்த்தேன்” என்று உத்தப்பா கூறினார்.
மேலும், உண்மையை சொல்லவேண்டும் என்றால் தோனி முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீதரன் ஸ்ரீராமைக் காயப்படுத்தினார். இடது கை ஸ்பின்னரான ஸ்ரீதரன் ஸ்ரீராம், தோனிக்கு எதிராக பந்துவீச வந்தார். அப்போது அந்த பந்து இறங்கி வந்து கடினமாக ஹிட் செய்த தோனி, பந்து வீச்சாளருக்கு நேராகவே பந்தை அடித்து நொறுக்கினார். மின்னல் வேகத்தில் சென்ற பந்தைப் பிடிக்க, ஸ்ரீராம் அவரது கையை வெளியே நீட்டினார், அப்போது பந்து அவரை கடினமாகத் தாக்கியது.
பின்னர் கைகளில் பட்டு சென்ற பந்தை எடுப்பதற்காக தான் ஸ்ரீராம் ஓடுகிறார் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் அவர் பந்தை கடந்து டிரஸ்ஸிங் ரூமை நோக்கி ஓடினார். தோனி வேகமாக அடித்த பந்து கையை உடைத்துவிட்டதை அவர் உணர்ந்துவிட்டார். அவருடைய இரண்டு விரல்கள் உடைந்த நிலையில் இருந்தது, அப்போது தான் எம்எஸ் பந்தை எவ்வளவு கடினமாக அடிக்கிறார் என்பதே எங்களுக்குத் தெரிந்தது. அப்போதே அவர் நிச்சயம் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று எனக்குத் தெரிந்தது" என்று மேலும் கூறினார்.
உத்தப்பாவும் தோனியும் இந்தியாவுக்காகவும், பின்னர் சிஎஸ்கேக்காகவும் நிறைய போட்டிகள் விளையாடி உள்ளனர். 2007 டி20 கோப்பை வென்ற இந்திய அணியில் உத்தப்பா வெற்றி கேப்டனுக்காக தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டார். பின்னர் மஞ்சள் படையில் இருந்து வெளியேறுவதற்கு முன் உத்தப்பா இரண்டு சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். வலது கை விக்கெட் கீப்பர்-பேட்டரான தோனி, தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் எப்படி நெருங்கிய நண்பராக இருந்தார் என்பதை ராபின் வெளிப்படுத்தினார்.
இருவருக்கும் இடையேயான நட்பு குறித்து பேசிய ராபின், " நானும் தோனியும் 2004-ல் நண்பர்களானோம். ஆனால் இருவரும் அப்போது ஒன்றாக விளையாடவில்லை, ஏனென்றால் நான் U19 வீரராக இருந்தேன், தோனி இந்தியா A அணியில் விளையாடிக்கொண்டிருந்தார். அவ்வப்போது இருவரும் சேலஞ்சர்ஸ் தொடரின் போது சந்தித்துக்கொள்வோம். அபுதாபியில் முதல்முறையாக சுற்றுப்பயணம் செய்தபோது, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டோம். அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நிறைய நேரம் ஒன்றாக பகிர்ந்துகொண்டோம்.
நானும் தோனியும் ஆடைகளை அதிகமாக விரும்பும் ஆட்கள். அதனால் அதிகமாக ஒன்றாக ஷாப்பிங் செய்வோம். பின்னர் ஒன்றாக சாப்பிடுவது, ஒன்றாக சுத்துவது என நான், தோனி, சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், ஆர்.பி. சிங், பியூஷ் சாவ்லா, முனாஃப் படேல் எல்லாமே ஒரு டீம். உணவு விஷயத்தில் எம்.எஸ் மிகவும் இறுக்கமானவர்.
நாங்கள் உணவு ஆர்டர் செய்யும் போது, அவர் சிக்கன் இல்லாமல் பட்டர் சிக்கன் சாப்பிடுவார். சிக்கனை தவிர்த்துவிட்டு கிரேவியில் மட்டும் திருப்தியாக சாப்பிடுவார். அவர் இப்போதுவரை கொஞ்சம் கூட மாறவில்லை. நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோது எப்படி இருந்தாரோ, அதேபோல தான் இப்போதும் இருக்கிறார். அவர் மிகவும் சிக்கலில்லாத எளிமையான ஒருவர்" என்றார் உத்தப்பா.