UP warriorz
UP warriorz UP warriorz
T20

WPL 2024 | நிறைய பேட்டர்கள், எக்கச்சக்க ஸ்பின்னர்கள்... UP வாரியர்ஸ் தாக்குப்பிடிக்குமா?

Viyan

வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது. 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் எப்படி இருக்கிறது. அதன் பலம், பலவீனம் என்னென்ன? ஓர் அலசல். இந்த எபிசோடில் உபி வாரியர்ஸ்

WPL 2023 செயல்பாடு

உபி வாரியர்ஸ் அணி கடந்த சீசனில் 8 போட்டிகளில் நான்கில் வென்றது. நான்கில் தோற்றது. 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்து எலிமினேட்டருக்கு முன்னேறியது அந்த அணி. ஆனால் அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தோல்வியடைந்தது. பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலுமே அந்த அணிக்கு வெளிநாட்டு வீராங்கனைகள் தான் கைகொடுத்தார்கள். அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் தாலியா மெக்ரா 302 ரனகள் விளாசினார். மொத்தம் 4 அரைசதங்கள் அடித்து அசத்தினார். அலீஸா ஹீலி, கிரேஸ் ஹேரிஸ் ஆகியோரும் 200+ ரன்கள் எடுத்தனர். பந்துவீச்சில் சோஃபி எகில்ஸ்டன் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்ப்பிள் கேப் வீழ்த்தினார். தீப்தி ஷர்மா, கிரன் நவ்கிரே என அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனைகள் சொல்லிக்கொள்ளும்படி செயல்படவில்லை.

2024 ஏலத்தில்...

உபி வாரியர்ஸ் அணி ஏலத்துக்கு முன்பாக 4 வீராங்கனைகளை ரிலீஸ் செய்தது. தேவிகா வைத்யா, ஷிவாலி ஷிண்டே, சிம்ரன் ஷேக் ஆகியோருடன் உலகின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஷப்னிம் இஸ்மாய்லும் ரிலீஸ் செய்யப்பட்டார். கடந்த சீசனில் அவர் தொடர்ந்து பிளேயிங் லெவனில் இடம்பெறாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த ஏலத்தில் அவர் இடத்தை பௌலரைக் கொண்டு நிரப்பாமல், ஒரு பேட்டரை வாங்கியது அந்த அணி. இங்கிலாந்து ஓப்பனர் டேனி வயாட்டை 30 லட்ச ரூபாய்க்கு அவர்கள் வாங்கினார்கள். ஆனால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது வ்ரிந்தா தினேஷ். இந்திய இளம் டாப் ஆர்டர் பேட்டரை 1.3 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது உபி வாரியர்ஸ். இவர் போக, கௌஹர் சுல்தானா, பூனம் கெம்னர், சைமா தாகோர் ஆகியோரையும் வாங்கியிருக்கிறார்கள். ஏலத்துக்குப் பிறகு அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் லாரன் பெல் தேசிய அணிக்கு ஆடுவதற்காக விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக சமாரி அத்தபத்துவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

பலம்

அவர்களின் பலம் அந்த வெளிநாட்டு வீரர்கள் தான். முன்பே சொன்னதுபோல் கடந்த சீசனில் அவர்கள் தான் அந்த அணிக்குக் கைகொடுத்தார்கள். இப்போதும் அவர்களே அந்த அணியின் பெரிய பலம். கேப்டன் அலீஸா ஹீலி, இப்போது ஆஸ்திரேலிய அணிக்கும் கேப்டன். கிரேஸ் ஹேரிஸ், சோஃபி எகில்ஸ்டன், தாலியா மெக்ரா என இந்த நால்வரும் அவர்கள் பிளேயிங் லெவனில் முக்கிய அங்கமாக இருப்பார்கள். அதுபோக, இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து வேறு இருக்கிறார். பேட்டிங், பௌலிங் என அசத்தக்கூடியவர். ஆனால், அவருக்குப் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான். அது இல்லாமல் டேனி வயாட் வேறு! சோஃபி எகில்ஸ்டன், தீப்தி ஷர்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட், பார்ஷவி சோப்ரா என அவர்களின் ஸ்பின் யூனிட்டும் பெரிய தாக்கம் ஏற்படுத்தும்.

பலவீனம்

அந்த அணியின் வேகப்பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருக்கிறது. இஸ்மாய்லை ரிலீஸ் செய்த அந்த அணி, லாரன் பெல் விலகியதால் அந்த இடத்தில் பலவீனம் ஆகியிருக்கிறது. அதனால் இளம் வீராங்கனை அஞ்சலி சர்வானி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அது அதிக நெருக்கடியையும் ஏற்படுத்தும். சுழல் எடுபடாத பட்சத்தில் அந்த அணியின் நிலை கவலைக்கிடம் தான்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்

1. அலீஸா ஹீலி
2. ஷ்வேதா செராவத்
3. வ்ரிந்தா தினேஷ்
4. தாலியா மெக்ராத்
5. கிரேஸ் ஹாரிஸ்
6. கிரன் நவ்கிரே
7. தீப்தி ஷர்மா
8. சோஃபி எகில்ஸ்டன்
9. அஞ்சலி சர்வானி
10. பார்ஷவி சோப்ரா
11. ராஜேஷ்வரி கெய்க்வாட்