உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்காக இருந்துவரும் ஐபிஎல் தொடர் 2008 முதல் விளையாடப்பட்டு வருகிறது. 17 வெற்றிகரமான சீசன்களை கடந்து 18வது சீசானாக 2025 ஐபிஎல் தொடர் நடத்தப்பட உள்ளது.
இதில் மிகவும் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளங்கிவருகிறது. தோனி தலைமையில் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 17 சீசன்களில் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும், 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதிபெற்று வலுவான அணியாக விளங்குகிறது.
அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்று சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மும்பை அணி 6 முறை ஐபிஎல் ஃபைனலுக்கு சென்று 5 முறை கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.
மற்ற அணிகளை பொறுத்தவரையில் 3 கோப்பைகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது இடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத், டெக்கான் சார்ஜர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் முதலிய அணிகள் தலா 1 முறை கோப்பை வென்று அசத்தியுள்ளன.
உலகின் சிறந்த டி20 கிரிக்கெட் லீக்காக பார்க்கப்படும் ஐபிஎல் தொடரின் 18வது சீசனில் எந்த அணி கோப்பை வெல்லப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.
18வது ஐபிஎல் சீசனானது நாளை மார்ச் 22ம் தேதிமுதல் தொடங்கி மே 25-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்த்து விளையாட உள்ளது.
2024 சாம்பியன்ஸ் டிராபியை வென்றபிறகு வெற்றியோடு ஐபிஎல்லில் கால்பதிக்கும் விராட் கோலியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலோடு தொடக்க போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நாளை நடைபெறவிருக்கும் தொடக்க போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றி உள்ள பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அப்பகுதியில் மழைபெய்ய 70-90% வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி மழைபெய்யும் பட்சத்தில் போட்டி தாமதாக நடத்தப்படும் அல்லது போட்டி ரத்துசெய்யப்பட்டால் ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்படும்.