சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர் PT
T20

Rohit-ன் அந்த 2 நகர்த்தலும் மாஸ்டர் கிளாஸ்! அதையே தோனி செய்திருந்தால் புகழ்ந்திருப்பார்கள்!-கவாஸ்கர்

Rishan Vengai

ஐபிஎல் என்ற மாபெரும் கிரிக்கெட் தொடரின் சிறந்த கேப்டன்கள் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டால், தோனி மற்றும் ரோகித் சர்மா என்ற இரண்டு சிறந்த ஆளுமைகளின் பெயர்கள் தான் அதிகமாக கூறப்படும். அதிலும், அவர்கள் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி வந்தால், அதற்கு பதில் கூறுவதென்பது நிச்சயம் முடியாத காரியமாகவே இருக்கும். ஏனென்றால், அந்தளவு அவர்கள் இருவரும் அவரவர்களுடைய டேக்டிக்ஸ் மற்றும் சிந்தனைகளில் சிறந்தவர்கள்.

தோனியா? ரோகித்தா? யார் சிறந்த கேப்டன்?

ரோகித் சர்மவை பொறுத்தவரையில் அவர் ஒரு அனாலிடிக்ஸ் கேப்டன், அதாவது போட்டியில் எந்த இடத்தில் எந்த சூழல் ஏற்படும், அப்படி ஏற்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளோடு தான் களத்திற்கே வருவார். ஒரு போட்டியில் எந்த வீரர் இம்பேக்ட் வீரராக இருப்பார் என்ற அவருடைய திட்டமிடுதல், போட்டியில் 90% அவருக்கு வெற்றியையே தேடித்தருகிறது. அதனால் தான் அவரால் 5 கோப்பைகளை வெல்ல முடிந்தது.

Rohit

தோனியை பொறுத்தவரையில் களத்தில் என்ன நடக்கிறது என்பதற்கு ஏற்ப, போட்டியின் போது சரியான முடிவுகளை எடுக்கக்கூடியவர். அதனால் தான் சிறுசிறு பீல்டிங் நிறுத்தத்தை கூட ஒரு பந்துக்கு ஒருமுறை என்று மாற்றிக்கொண்டே இருப்பார். களத்தில் பேட்ஸ்மேன் என்ன யோசிக்கிறார் என்பதை 90% அவரால் கணித்துவிட முடிகிறது. விக்கெட் கீப்பராக இருப்பது அவருடைய டேக்டிக்ஸிற்கு மேலும் பலம் சேர்க்கிறது. வீரர்களின் பலம் மற்றும் ஆடுகளத்தின் தன்மையை அறிந்துகொள்வதில் கெட்டிக்காரராக இருப்பதால், அதிகளவு அவர் முடிவுகளில் வெற்றியையே பெறுகிறார்.

MS Dhoni

இந்நிலையில், இந்த இரண்டு கேப்டன்களில் யார் சிறந்தவர் என்பது நிச்சயம் கடினமான ஒரு கேள்வியாகவே இருந்துவருகிறது. ஆனால் சிறந்த கேப்டன்சிக்காக தோனிக்கு கிடைக்கும் பாராட்டுகளை ஒப்பிட்டுப்பார்த்தால், ரோகித் சர்மாவின் கேப்டன்சிக்கு கிடைக்கும் பாராட்டுகள் என்பது மிகைக்குறைவாகவே இருக்கிறது என முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த 2 நகர்த்தலில் ரோகித்தின் சிறந்த கேப்டன்சி வெளிப்பட்டது!

5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மும்பை வீரர் ஆகாஷ் மத்வால், ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த பவுலிங்கை எடுத்துவந்து அசத்தியிருந்தார். போட்டியின் முடிவுக்கு பிறகு பேசிய அவர், தன்னுடைய சிறந்த பந்துவீச்சுக்கான காரணம் கேப்டன் ரோகித் சர்மா தான் என்று கூறியிருந்தார். ஆகாஷ் மத்வாலின் கூற்றை மேற்கோள் காட்டி பேசிய சுனில் கவாஸ்கர், “நிச்சயமாக ரோகித் சர்மாவின் கேப்டன்சியை பாராட்டியே ஆகவேண்டும். அவருடைய திறமைக்கும் குறைவாக தான் அவருக்கான பாராட்டு கிடைத்துவருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து பட்டங்களை வென்று கொடுத்துள்ளார்.

Akash Madhwal

ரோகித்தின் சிறந்த கேப்டன்சிக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். மத்வால் ஓவர் தி விக்கெட்டிலிருந்து பந்துவீசி ஆயுஷ் பதோனியை போல்டாக்கினார். பின்னர் இடது கை ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரனை வெளியேற்ற, ரவுண்ட் தி விக்கெட்டிலிருந்து வீசினார். அது பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது. நிறைய பந்துவீச்சாளர்கள் அதைச் செய்யவே மாட்டார்கள், ஏனென்றால் ஒரு இடது கை பேட்டருக்கு எதிராக நேர் எதிராக ஓடி வந்து பந்தை வெளியில் எடுத்துச்செல்லவே நினைப்பார்கள். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் மத்வால் ஒரு சிறப்பான மூவில் பூரனை வெளியேற்றி அசத்தினார். அந்த இடத்தில் ரோகித்தின் அற்புதமான கேப்டன்சி சிறந்த நிலையில் இருந்தது.

Nehal Wadhera

அதே போல் இம்பேக்ட் வீரராக நேஹல் வதேராவை களமிறக்கியது மிகச்சிறந்த நகர்த்தலாக இருந்தது. பொதுவாக ஒரு அணி முதலில் பேட்டிங் செய்யும்போது பேட்டர்களை இம்பாக்ட் வீரராகப் பயன்படுத்துவதில்லை. ஆனால் லக்னோ அணிக்கு எதிராக ரோகித் சர்மா வதேராவை பயன்படுத்தினார். இந்த இரண்டு சிறந்த நகர்த்தல்கள் தான் மும்பை அணிக்கு வெற்றியை மிகவும் எளிதாக மாற்றியது. அதற்கான பாராட்டை ரோகித் சர்மாவிற்கு கொடுங்கள்” என்று கூறினார்.

தோனியாக இருந்தால் இந்நேரம் பாராட்டுமழை பொழிந்திருக்கும்!

மேலும், “ஒருவேளை ரோகித் சர்மா செய்ததையே தோனி செய்திருந்தால், அவரை கொண்டாடி தீர்த்திருப்பார்கள். தோனியின் கேப்டன்சி எப்படி இருந்தது தெரியுமா, பூரனை தன்னுடைய தந்திரத்தால் தான் தோனி வெளியேற்றினார் என்றெல்லாம் பரபரப்பாக இருந்திருக்கும். அதிகளவிலான பாராட்டுக்கள் கிடைத்திருக்கும்.

Sunil Gavaskar

நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், மத்வாலை ஓவர் தி விக்கெட்டிலிருந்து பந்து வீசச் சொன்னதற்கும், வதேராவை இம்பேக்ட் வீரராக களமிறக்கியதற்கும் ரோகித் சர்மாவுக்கு போதுமான பாராட்டுக்கள் கிடைக்கவில்லை" என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.