ashwin - suryavanshi ipl
T20

AGE 14.. SIX 24! சரித்திரம் படைத்த சூர்யவன்ஷி.. மோசமான வரலாறு படைக்கவிருக்கும் CSK!

2025 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 10வது தோல்வியை பதிவுசெய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Rishan Vengai

இன்றைய ஐபிஎல் போட்டியில் 10வது இடத்திலிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 9வது இடத்திலிருக்கும் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

மிடில்ஆர்டர் தூணாக மாறும் பிரேவிஸ்..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, 2வது ஓவரிலேயே டெவான் கான்வே மற்றும் உர்வில் பட்டேல் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றிய ராஜஸ்தான் அணி அதிர்ச்சி கொடுத்தது.

என்னதான் விரைவாகவே 2 விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் 8 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிக்கொண்டே இருந்த ஆயுஸ் மாத்ரே ரன்வேட்டை நடத்தினார். உடன் 1 சிக்சர் பவுண்டரி என விளாசிய அஸ்வின் நம்பிக்கை கொடுத்தார்.

ஆனால் ஆயுஸ் மாத்ரே 43 ரன்னிலும், அஸ்வின் 13 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற, அடுத்துவந்த ஜடேஜாவும் 1 ரன்னுக்கு நடையை கட்டி அணியை மோசமான நிலைமைக்கு எடுத்துச்சென்றார். 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அடிக்குமேல் அடிகொடுத்த யுத்விர் சிங் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

78 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தாலும் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெவால்ட் பிரேவிஸ் மற்றும் ஷிவம் துபே இருவரும் அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என பிரேவிஸ் ஒருபுறம் துவம்சம் செய்ய, 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகளை பறக்கவிட்ட துபே மிரட்டிவிட்டார். பிரேவிஸ் 42 ரன்களும், துபே 39 ரன்களும் அடிக்க ஒரு கட்டத்தில் சிஎஸ்கே 200 ரன்களை எட்டிவிடும் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது. ஆனால் கடைசியாக வந்த தோனி 17 பந்துக்கு 16 ரன்களை அடித்து மந்தமாக விளையாட, 20 ஓவர் முடிவில் 187 ரன்களை மட்டுமே எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

மிரட்டிவிட்ட 14 வயது சூர்யவன்ஷி..

188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விரட்டி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தினார். ஒருபுறம் ஜெய்ஸ்வால் மிரட்ட, மறுமுனையில் 4 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என நாலாபுறமும் சிதறடித்த சூர்யவன்ஷி 27 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். அறிமுக ஐபிஎல் சீசனிலேயே சதம் மற்றும் அரைசதம் என அடித்து 14 வயதில் தன் பெயரை முத்திரை பதித்துள்ளார் சூர்யவன்ஷி.

மறுமுனையில் சஞ்சு சாம்சன் 41 ரன்கள், துருவ் ஜுரல் 31 ரன்கள் என துவம்சம் செய்ய 17.1 ஓவரிலேயே இலக்கை எட்டி பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அபாரமாக பந்துவீசி டெவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே மற்றும் தோனி 3 பேரின் விக்கெட்டையும் வீழ்த்திய ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டியின் முக்கிய நிகழ்வுகள்..

சூர்யவன்ஷி - இந்த போட்டியில் 4 சிக்சர்களை அடித்த 14 வயதேயான சூர்யவன்ஷி, நடப்பு சீசனில் மட்டும் 24 சிக்சர்களை அடித்து மிரட்சியை ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 20 வயதுக்குள் அதிக சிக்சர்கள் அடித்த ஐபிஎல் வீரராக மாறி சரித்திரம் படைத்துள்ளார்.

அஸ்வின் - மறுமுனையில் நடப்பு சீசனில் வெறும் 7 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், 2009 ஐபிஎல் சீசனில் 2 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியதற்கு பிறகு நடப்பு சீசனில் 7 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி இரண்டாவது மோசமான சீசனை பதிவுசெய்துள்ளார்.

சூர்யவன்ஷி

நூர் அகமது - அதேநேரத்தில் சிஎஸ்கே அணிக்கு ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்பின்னர்கள் பட்டியலில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை பின்னுக்கு தள்ளி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் நூர் அகமது.

மோசமான சாதனை நோக்கி சிஎஸ்கே - 18 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணி இதுவரை ஒரு சீசனில் கூட 10வது இடத்தில் முடித்ததே இல்லை என்ற சாதனையை கொண்டுள்ளது. ஆனால் நடப்பு சீசனில் 10 தோல்விகளுடன் சுமாரான ரன்ரேட்டை கொண்டிருக்கும் சிஎஸ்கே அணி, ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக 10வது இடத்தில் முடிக்கும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.