’நீங்கலாம் மனுசங்களே இல்ல தெரியுமா’ என கூறுமளவு டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நம்பமுடியாத ஆதிக்கத்தை செலுத்திவருகிறது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி. ஐபிஎல் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் அதிகமுறை 250 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே அணியாக வரலாற்று சம்பவம் செய்துள்ளது சன்ரைசர்ஸ் அணி.
2025 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிளேஆஃப் செல்லக்கூடிய அணியாகவும், டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களை அடிக்கக்கூடிய அணியாகவும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களின் முக்கியமான வீரர்கள் அனைவரும் ஃபார்ம் அவுட்டாக, 2025 ஐபிஎல் சீசனானது சுமாரான ஒரு தொடராகவே அவர்களுக்கு முடிந்துள்ளது.
முதல் 5 போட்டிகளில் நான்கில் தோற்ற சன்ரைசர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்தது. ஆனால் இறுதியில் தங்களுடைய திறமையை வெளிக்காட்டிய அவ்வணி, 14 போட்டிகள் முடிவில் 6 வெற்றிகளை பெற்று 6வது இடத்தில் முடித்துள்ளது.
இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து களம்கண்டது ஹைத்ராபாத் அணி. டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஹைத்ராபாத் அணி கொல்கத்தாவை பந்துவீசுமாறு அழைத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த SRH அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்த, 7 ஓவரிலேயே ஒரு விக்கெட்டைகூட இழக்காமல் 90 ரன்களை குவித்து அசத்தியது. 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என மிகப்பெரிய டோட்டலுக்கு பிள்ளையார் சுழி போட்ட அபிஷேக் சர்மா 32 ரன்னில் வெளியேற, தொடர்ந்து கொல்கத்தா பவுலர்களை அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என பறக்கவிட்டு பேட்டிங்கில் ஒரு சூறாவளியையே சுழற்றினார்.
டிராவிஸ் ஹெட்டின் அதிரடியால் 11 ஓவரிலேயே 160 ரன்களை எட்டிய சன்ரைசர்ஸ் அணி 300 ரன்கள் என்ற டோட்டலை நோக்கி நகர்ந்தது. ஆனால் சதத்தை நோக்கி சென்ற டிராவிஸ் ஹெட்டை 76 ரன்னில் வெளியேற்றிய சுனில் நரைன், ஸ்பீட் பிரேக்கர் ஓவரை வீசி ரன்வேகத்தை கண்ட்ரோல் செய்தார்.
என்னதான் டிராவிஸ் ஹெட் வெளியேறினாலும் மறுமுனையில் பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடிய கிளாசன், 37 பந்தில் 9 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என பறக்கவிட்டு சதமடித்து அசத்தினார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் 3வது அதிவேக சதமாக பதிவுசெய்யப்பட்டது.
கிளாசன் 39 பந்தில் 105 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 278 ரன்கள் என்ற இமாலய டோட்டலை குவித்து வரலாறு படைத்தது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3வது அதிகபட்ச டோட்டலாக பதிவுசெய்யப்பட்டது. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5 முறை 250 ரன்னுக்கு மேல் அடித்த ஒரே அணியாக மாறி சாதனை படைத்தது SRH அணி.
279 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி, 18.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 31 ரன்களூம், மனிஷ் பாண்டே 37 மற்றும் ஹர்சித் ரானா 34 ரன்களும் மட்டுமே அடித்தனர். 110 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்த ஹைத்ராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது.
நடப்பு ஐபிஎல் சீசனில் இன்னும் 2 லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணியையும், ஆர்சிபி அணி லக்னோவையும் எதிர்த்து விளையாடவிருக்கின்றன.