srh vs csk cricinfo
T20

சேப்பாக்கத்தில் அஸ்தமனமான CSK.. ஒரே சீசனில் 7 வரலாற்று சாதனைகள் காலி! SRH சாதனை வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதல்முறையாக சேப்பாக்கத்தில் வைத்து வீழ்த்தி வரலாறு படைத்தது சன்ரைசர்ஸ் அணி.

Rishan Vengai

2025 ஐபிஎல் சீசனானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமில்லாமல், தோனிக்காக இந்தியாவில் உள்ள அனைத்து மைதானங்களுக்கும் படையெடுக்கும் மஞ்சள் படை ரசிகர்களுக்கும் மறக்கவேண்டிய ஒரு சீசனாகவே அமைந்துள்ளது.

’இன்னும் என்ன கொடுமைலாம் பார்க்கனும்னு எங்க தலைல எழுதியிருக்கோ’ என்ற வசனத்திற்கு ஏற்ப, 17 வருடங்களாக சென்னை அணியால் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையை அல்லுசில்லு அணியெல்லாம் தகர்த்து வருகிறது.

18 வருடத்தில் இல்லாத தோல்விகள்..

17 வருட ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியால் உருவாக்கப்பட்ட 7 வரலாற்று சாதனைகள் நடப்பு ஒரே சீசனில் உடைக்கப்பட்டுள்ளன.

ஆர்சிபி அணிக்கு எதிராக 17 வருடத்திற்கு பிறகு சொந்த மண்ணில் தோற்ற சென்னை அணி, 15 வருடங்களுக்கு பிறகு டெல்லி அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த தோல்விகளின் போதே இந்த அணி தேராது என்ற எண்ணத்திற்கு ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் முடிவெடுத்து விட்டனர்.

பஞ்சாப் கிங்ஸ் - சிஎஸ்கே

அதுமட்டுமில்லாமல் 18வருடத்தில் முதல்முறையாக வரிசையாக 5 போட்டிகளில் தோல்வி, 18 வருடத்தில் முதல்முறையாக ஒரே இன்னிங்ஸில் ஸ்பின்னர்களுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது, 18 வருடத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் 103 என்ற குறைவான டோட்டலுக்கு சுருண்டது என திரும்பும் பக்கமெல்லாம் மரண அடி வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அஸ்வின் வரபோறார், ரச்சின், கான்வே 2பேரும் டீம்ல இருக்க போறாங்க, போதாக்குறைக்கு சாம் கரன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார் என்ற பெரிய எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்த சென்னை அணி 8 போட்டியில் 6-ல் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கே சென்றது.

154 ரன்கள் மட்டுமே அடித்த சிஎஸ்கே!

பிளேஆஃப் செல்லவேண்டுமானால் மீதமிருக்கும் 6 போட்டிகளிலும் வெல்லவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணி, சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை எதிர்த்து இன்று களம்கண்டது.

இதுவரை சேப்பாக்கத்தில் சென்னைக்கு எதிராக ஒரு வெற்றியை கூட பெற்றதில்லை என்ற மோசமான சாதனையுடன் களம்புகுந்த சன்ரைசர்ஸ் அணி, அதனை உடைக்கும் ஒரு ஆட்டத்தை இன்று விளையாடியது.

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது சென்னை அணி. இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிஎஸ்கேவின் இளம் வீரரான ஷைக் ரஷீத்தை டக் அவுட்டில் வெளியேற்றிய முகமது ஷமி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து களத்திற்கு வந்த சாம் கரனும் 10 பந்தில் 9 ரன் அடித்து வெளியேற மோசமாகவே தொடங்கியது சிஎஸ்கே.

ஆனால் 17 வயதில் அச்சமற்ற பேட்டிங்கை வெளிப்படுத்திய ஆயுஷ் மாத்ரே, அடுத்தடுத்து 6 பவுண்டரிகளை விரட்டி ரன்வேகத்தை அதிகப்படுத்தினார். களத்தில் மிரட்டிவிட்ட ஆயுஷ் மாத்ரேவால் 5 ஓவரில் 47 ரன்கள் என சிஎஸ்கே அணி தரமான கம்பேக் கொடுத்தது. ஆனால் பவர்பிளேவின் கடைசி ஓவரில் 30 ரன்னில் மாத்ரேவை வெளியேற்றிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கலக்கிப்போட்டார்.

அடுத்து களத்திற்கு வந்த ஜடேஜா 21, ஷிவம் துபே 9 ரன்கள் என வந்தவர்கள் எல்லாம் ஒருவருக்கு பின் ஒருவர் என நடையை கட்ட, மறுமுனையில் தனியொரு ஆளாக போராடிய தென்னாப்பிரிக்காவின் 21 வயது இளம் வீரரான டெவால்ட் பிரெவிஸ் அடுத்தடுத்து 4 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். ’பேபி ஏபி டி வில்லியர்ஸ்’ என கொண்டாடப்படும் பிரெவிஸ் தனியாளாக ஆட்டத்தை சிஎஸ்கேவின் பக்கம் மாற்ற, அவர் சிக்சருக்கு அடித்த பந்தை காற்றிலேயே பறந்துபிடித்த கமிந்து மெண்டீஸ் முக்கியமான விக்கெட்டை எடுத்துவந்தார்.

பிரெவிஸ் 42 ரன்னில் வெளியேற அடுத்து களத்திற்கு வந்த தோனி, அன்சுல் கம்போஜ் யாரும் சோபிக்கவில்லை. இறுதிவரை பேட்டிங் செய்த தீபக் ஹுடா ஒருவழியாக நோ-பாலில் எல்லாம் சிக்சர் அடித்து 21 பந்துக்கு 22 ரன்கள் அடிக்க, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை அணி 154 ரன்களை மட்டுமே தேற்றியது.

சன்ரைசர்ஸ் அணி வரலாற்று வெற்றி..

155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு, அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவை இன்னிங்ஸின் 2வது பந்திலேயே வெளியேற்றிய கலீல் அகமது பதிலடி கொடுத்தார். உடன் டிராவிஸ் ஹெட் 16 பந்தில் 19 ரன்கள் அடித்து வெளியேற, முக்கியமான வீரரான கிளாசனை 7 ரன்னில் அவுட்டாக்கிய ஜடேஜா கலக்கிப்போட்டார்.

தொடர்ந்து சிஎஸ்கே அணி டைட்டாக பந்துவீசி அழுத்தத்தை அதிகமாக்க, நிதானத்தை இழக்காத இஷான் கிஷன் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி அச்சுறுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் 2 சிக்சர்களை பறக்கவிட்ட அனிகேத் வர்மா மிரட்டிவிட, சிஎஸ்கே அணிக்கு போட்டியில் திரும்பிவர விக்கெட் மட்டுமே தேவையாக இருந்தது. சரியான நேரத்தில் இஷான் கிஷன் மற்றும் அனிகேத் இருவரையும் நூர் அகமது வெளியேற்ற, ஆட்டத்தில் கம்பேக் கொடுத்தது சிஎஸ்கே அணி.

ஆனால் போட்டியில் மற்றபவுலர்கள் எல்லாம் அழுத்தத்தை போட, அதிகமான ஒய்டுகள், மோசமான பந்துவீச்சு என மந்தமாக பந்துவீசிய சாம் கரன் மற்றும் பதிரானா இருவரும் காலை வாரினர். குறைவான டோட்டலை அடித்த சிஎஸ்கே அணி எக்ஸ்ட்ராவில் மட்டும் 15 ரன்களை விட்டுக்கொடுத்தது. போதாக்குறைக்கு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இலங்கையின் பிராட்மேன் கமிந்து மெண்டீஸ் மிரட்டிவிட, அவருக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய ஜடேஜாவை கூட எடுத்துவர பயந்தார் தோனி.

இறுதிவரை களத்திலிருந்த கமிந்து மெண்டீஸ் மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட, ஒரு ஓவரை மீதம் வைத்து வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் வென்றதே இல்லை என்ற மோசமான சாதனையை முறியடித்து முதல் வெற்றியை பதிவுசெய்தது SRH அணி.

சிஎஸ்கே அணிக்கு இருக்கும் 1% வாய்ப்பு..

அதுமட்டுமில்லாமல் சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்று முதல்முறையாக மோசமான சாதனை படைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

’சேத்துலையும் அடிவாங்கியாச்சு, சோத்துலையும் அடிவாங்கியாச்சு’ என்ற நிலையிலிருந்து ‘ஹலோ நேத்து அடிக்க வர்றனு சொன்னிங்க, வரவே இல்ல’ என்ற வடிவேலு வசனத்திற்கு ஏற்ப இதுவரை பார்க்காத படுமோசமான சாதனைகளை எல்லாம் படைத்துவருகிறது சிஎஸ்கே.

9 போட்டியில் 7-ல் தோற்றிருக்கும் சிஎஸ்கே அணி மீதமிருக்கும் 5 போட்டிகளையும் சிறந்த ரன்ரேட்டில் வென்றால் பிளேஆஃப் செல்வதற்கான 1% வாய்ப்பு உள்ளது. கடந்த சீசனனில் ஆர்சிபி அணியும் இதே நிலையிலிருந்து வெற்றிபெற்று பிளேஆஃப்க்குள் காலடிவைத்து வரலாறு படைத்தது. அதேபோல இந்தமுறை சிஎஸ்கே வரலாற்றை மாற்றி எழுதுமா? அல்லது முதல் அணியாக நடப்பு சீசனை விட்டு வெளியே செல்லுமா என்ற இக்கட்டான நிலைமைக்கு சென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.