விஜய் சங்கர், ஸ்ரீகாந்த் எக்ஸ் தளம்
T20

IPL2025 | விஜய் சங்கர் பற்றி கேள்வி.. சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்த ஸ்ரீகாந்த்!

விஜய் சங்கரை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த் மோசமாக விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

இந்தியாவில் நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இதில் 10 அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்புத் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியது. தொடர் தோல்வி காரணமாக ரசிகர்கள் தோனியின் மீதும் அணியின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில், ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலக, தோனியே மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில் கடைசியாக, லக்னோவுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

srikkanth

மறுபுறம், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இடம் பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக வைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் நடப்புத் தொடரில் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய் சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், விஜய் சங்கரை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த் மோசமாக விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ”விஜய் சங்கர் அணியில் இடம்பெற தகுதியானவரா” என்று ஒரு பயனர் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த ஸ்ரீகாந்த், “அவர், மற்ற வீரர்களுக்கு கூல்டிரிங்ஸ் கொண்டுவர மட்டுமே அவர் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.