delhi capitals
delhi capitals - PTI
T20

SRH vs DC: 10வது இடத்துக்கு கடும் போட்டியா?.. 145 ரன்கள் அடிக்க முடியாமல் டெல்லியிடம் வீழ்ந்தது SRH!

ப.சூரியராஜ்

நேற்று லிட்டில் மாஸ்டர் சச்சினின் பிறந்தநாள் என்பதால், அவரது ஜெர்ஸி நம்பரான 10வது இடத்திற்கான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சட்டையைக் கிழித்துக்கொண்டு சண்டை செய்தன. ஐதராபாத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. `இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே' என சன்ரைசர்ஸ் அணியின் மீது கொலைவெறியில் இருந்தார் வார்னர்.

பவுண்டரிகளைப் பறக்கவிட்ட மார்ஷ்

ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காத சோகத்தில் சாய்பாபா போட்டோவை கூகுளில் தேடிக்கொண்டிருந்தார், ப்ருதிவி ஷா. வார்னரும், சால்ட்டும் டெல்லியின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் புவி. ஓவரின் 3வது பந்திலேயே சால்ட் காலியானது. கீப்பர் க்ளாஸனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2வது ஓவரை வீசினார் யான்சன்.

delhi capitals

முதல் இரண்டு பந்துகளில், இரண்டு பவுண்டரிகளை விளாசினார் மார்ஷ். பிறகு ஒரு புள்ளி வைத்துவிட்டு, அடுத்த இரண்டு பந்துகளிலும் பவுண்டரிகளை பறக்கவிட்டார். புவி இழுத்துக் கட்டியதை, மீண்டும் அவிழ்த்துவிட்டார் யான்சன். எனவே, மீண்டும் புவி இழுத்துக்கட்ட 3வது ஓவரில் 1 ரன் மட்டுமே.

4வது ஓவரை வீச வந்தார் வாஷிங்டன் சுந்தர். 4வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்த வார்னர், அடுத்த பந்திலேயே 88 மீட்டருக்கு ஒரு சிக்ஸ் அடித்தார். இதுதான் இந்த சீசனில் வார்னர் அடித்திருக்கும் முதல் சிக்ஸர்! நடராஜனிடம் 4வது ஓவரைக் கொடுத்தார் மார்க்ரம். 2வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்த மார்ஷ், 4வது பந்தை பேடில் வாங்கினார். மார்க்ரம் மேல்முறையீட்டுக்குச் செல்ல, எல்.பி.டபுள்யூ என தீர்ப்பானது. மீண்டும் வந்தார் யான்சன். சர்ஃப்ராஸ் கான் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். பவர்ப்ளேயின் முடிவில், 49/2 என சுமாராகவே தொடங்கியிருந்தது டெல்லி.

ஐதராபாத் பக்கம் ஆட்டத்தைத் திருப்பிய வாஷிங்டன்

மயங்க் மார்கண்டே 7வது ஓவரை வீசவந்தார். 4வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார் வார்னர். 8வது ஓவரை வீசிய வாஷிங்டன், 2வது பந்தில் வார்னரின் விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கினார். ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார் வார்னர். 4வது பந்தில் சர்ஃப்ராஸ் கானின் விக்கெட்டைக் கழட்டினார். இம்முறை கேட்ச் பிடித்தது புவனேஷ்வர் குமார். அடுத்து களமிறங்கிய அமான் கான், சந்தித்த முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி அடித்தார். அத்தோடு நிறுத்தாத அமான் கான், ஆர்வகோளாறு கானாகி பந்தை இறங்கி சுத்தியதில் அவுட் ஆகி நடையைக் கட்டினார். இம்முறை கேட்ச் பிடித்தது அபிஷேக் சர்மா. ஒரே ஓவரில் 3 விக்கெட்களை சாய்த்து, ஆட்டத்தை மொத்தமாக ஐதராபாத் பக்கமாக திருப்பிவிட்டார் வாஷி.

delhi capitals

9வது ஓவரை வீசிய மார்கண்டே, 7 ரன்கள் மட்டும் கொடுத்தார். 10வது ஓவரை வீசிய வாஷி, 3 ரன்கள் கொடுத்தார். 10 ஓவர் முடிவில், 72/5 என தத்தளித்தது டெல்லி. மார்கண்டே வீசிய 11வது ஓவரில் 4 ரன்கள். கடைசியாக, காஷ்மீர் எக்ஸ்பிரஸ் புறப்பட தயாரானது. முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து சிவப்புக் கொடி காட்டினார் பாண்டே. கேப்டன் மார்க்ரம் வீசிய 13வது ஓவரில், 7 ரன்கள் வந்தது. 14வது ஓவரை 151, 152 கி.மீ. என தீ வேகத்தில் வீசிக்கொண்டிருந்தார் உம்ரான். பாண்டே ஒரே ஒரு பவுண்டரி அடித்தார். நடராஜன் வீசிய 15வது ஓவரில், அக்சஸருக்கு முதல் பவுண்டரி கிடைத்தது. 15 ஓவர் முடிவில், 106/5 என பாண்டேவும் அக்ஸரும் சேர்ந்து அணிக்கு முட்டுக்கொடுத்து நிறுத்தியிருந்தார்கள்.

பரிதாபமாக இன்னிங்ஸை முடித்த டெல்லி!

வாஷி வீசிய 16வது ஓவரில், 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. பதிலுக்கு மார்கண்டேவின் 17வது ஓவரில், ஹாட்ரிக் பவுண்டரி அடித்து சமன் செய்தார் அக்ஸர். 18வது ஓவரில், அக்ஸரின் விக்கெட்டைத் தூக்கினார் புவி. 19வது ஓவரை வீசிய நடராஜன், 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்த ஓவரில், புல்லட் வேகத்தில் கீப்பருக்கு பந்தை எறிந்து பாண்டேவை ரன் அவுட் ஆக்கினார் வாஷி. கடைசி ஓவரில், நோர்க்யா மற்றும் ரிபால் படேல் இருவரும் ரன் அவுட்டாக, 144/9 என பரிதாபமாக இன்னிங்ஸை முடித்தது டெல்லி.

delhi capitals

145 எடுத்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கியது ஐதராபாத் அணி. மயங்க் அகர்வாலும், ஹாரி ப்ரூக்கும் ஓபனிங் இறங்க, முதல் ஒவரை வீசினார் இஷாந்த் சர்மா. ஓவரின் 4வது பந்து, மயங்கின் பேட்டில் பட்டு எட்ஜாகி ஸ்லிப்லிருந்த மார்ஷிடம் ட்ராப் ஆனது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி, தன்னம்பிக்கையை ஏற்றிக்கொண்டார் மயங்க் அகர்வால்.

நோர்க்யா வீசிய 2வது ஓவரில், இன்னொரு பவுண்டரி அடித்தார் அகர்வால். இஷாந்த் வீசிய 3வது ஓவரில், மயங்கிற்கு இன்னொரு பவுண்டரி கிடைத்தது. 4வது ஓவரை வீசிய முகேஷ் குமாரையும் ஒரு பவுண்டரி வெளுத்துவிட்டார் மயங்க். `யாராவது அவரை கன்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்' எனச் சொல்லி அக்ஸர் படேலிடம் அடுத்த ஓவரை கொடுத்தார் வார்னர். அவர் ஓவரிலும் ஒரு பவுண்டரி அடித்தார் மயங்க் அகர்வால். நோர்க்யா வீசிய 6வது ஓவரில், ஸ்கூப் ஆடுகிறேன் என சூப் ஆனார் ப்ரூக். ஸ்டெம்ப் தெறித்தது. அப்போதும் அடங்காத அகர்வால், அந்த ஓவரிலும் ஒரு பவுண்டரி அடித்தார். மயங்க், மாங்கு மாங்கு என அடித்ததில் ஸ்கோர்போர்டு சிதறியிருக்கும் என பார்த்தால், 6 ஓவர் முடிவில் 36/1 என கெக்கலித்தது ஐதராபாத்.

sunrisers hyderabad

7வது ஓவரை வீசிய அக்ஸர், 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். தனது முதல் ஓவரை வீசிய குல்தீப், 4 ரன்கள் வழங்கினார். மிட்செல் மார்ஷ் வீசிய 9வது ஓவரில், 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அதிலும் கிடைத்த ஃப்ரீ ஹிட்டையும் பவுண்டரியாக மாற்றவில்லை. குல்தீப் வீசிய 10வது ஓவரில், 5 ரன்கள் கிடைக்க 10 ஓவர் முடிவில் 58/1 என வினோதமாக ஆடிக்கொண்டிருந்தது ஐதராபாத்.

பாவமாய் பரிதவித்த ஐதராபாத்!

மார்ஷ் வீசிய 11வது ஓவரில், கிட்டத்தட்ட 4 ஓவர்களுக்குப் பிறகு ஒரு பவுண்டரி கிடைத்தது. இம்முறை அடித்ததும் அதே மயங்க். 12வது ஓவரில் வந்த அக்ஸர், மயங்கின் விக்கெட்டை கழட்டினார். அமான் கானிடம் கேட்ச் கொடுத்து அமைதியாக வெளியேறினார் அகர்வால். ஒற்றை ரன்னில் அரைசதம் வாய்ப்பு நழுவிப்போனது. 13வது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, திரிபாதியின் விக்கெட்டைக் கழட்டினார். 21 பந்துகள் ஆடி ஒரு பவுண்டரிகூட அடிக்காமல் 15 ரன்கள் மட்டுமே எடுத்த `ராகுல்' திரிபாதியை ஏன் அவுட் செய்தீர்கள் என டெல்லி ரசிகர்கள் கோவித்துக்கொண்டார்கள். ஐதராபாத் ரசிகர்களோ பெருமூச்சு விட்டார்கள். குல்தீப் வீசிய 14வது ஓவரில், அபிஷேக் சர்மாவும் அவுட். அதே ஓவரில் களமிறங்கிய க்ளாஸன் ஒரு பவுண்டரி விளாசினார்.

sunrisers hyderabad

மார்க்ரம், க்ளாஸன் களத்தில் இருக்கிறார்கள். 36 பந்துகளில் 60 ரன்கள் தேவை. கைவசம் 6 விக்கெட்கள். ஐதராபாத் ரசிகர்கள் நம்பிக்கையுடன்தான் இருந்தார்கள். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டாகி, கேப்டன் மார்க்ரம்தான் அதை காலி செய்தார். அக்ஸரின் பந்தில் க்ளீன் போல்டு! 15 ஓவர் முடிவில், 89/5 என பாவமாய் நின்றுக்கொண்டிருந்தது சன்ரைசர்ஸ்.

ஆட்டநாயகன் விருது பெற்ற அக்ஸர் படேல்!

குல்தீப் வீசிய 16வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 24 பந்துகளில் 51 ரன்கள் தேவை. நோர்க்யா வீசிய 17வது ஓவரில், வாஷி ஒரு பவுண்டரி அடித்தார். க்ளாஸன் ஒரு சிக்ஸர் அடித்தார். முகேஷ் குமார் வீசிய 18வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் க்ளாஸன். அந்த ஓவரில், க்ளாஸனுக்கு இரண்டு பவுண்டரியும் வாஷிக்கு ஒரு பவுண்டரியும் கிடைத்தது. 12 பந்துகளில் 23 ரன்கள் தேவை.

sunrisers hyderabad

நோர்க்யா வீசிய 19வது ஓவரில், க்ளாஸன் அவுட்! 6 பந்துகளில் 13 ரன்கள். கடைசி ஓவரை சிறப்பாக வீசிய முகேஷ், பவுண்டரிகள் ஏதும் கொடுக்காமல், 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். `நீங்க ஜெயிங்க', `ஏன் நீங்க ஜெயிங்க' என நடந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 34 ரன்களும் எடுத்து 2 விக்கெட்களையும் கைப்பற்றிய அக்ஸர் படேலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது!