srh vs pbks bcci
T20

55 பந்தில் 141 ரன்கள்! பவுலர்களை மூச்சடைக்க வைத்த அபிஷேக்! 246 ரன்களை சேஸ்செய்து வரலாறு படைத்த SRH!

2025 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 246 ரன்களை சேஸ்செய்து வரலாறு படைத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

Rishan Vengai

சண்டைக்கு சண்டை, அடிக்கு அடி, சிக்சருக்கு சிக்சர், நீயா நானா மோதி பார்த்துடலாம் வா என்ற போட்டிகள் எல்லாம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அத்திபூத்தார்போல் ஏதோ ஒருமுறை தான் நடந்தேறும். அந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் ருத்ரதாண்டவம் ஆடுவார்கள், பவுலர்கள் வாய்மேல் கைவைத்து நாலாபுறமும் பறக்கும் சிக்சர்களை வேடிக்கைபார்த்தபடி மட்டுமே இருப்பார்கள்.

இரண்டு அணி கேப்டன்களுக்கும் என்ன செய்வதென்றே புரியாமல் போகும். அப்படியான ஒரு போட்டி தான் 2025 ஐபிஎல் தொடரில் இன்று நடந்தேறியது.

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத்

ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. நடப்பு ஐபில் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக கடப்பாரை அணி என சொல்லப்பட்ட SRH அணி, தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. அவர்களுடைய ஸ்டார் பேட்டர்கள் அனைவரும் சோபிக்க தவறிவிட்டனர், முக்கியமாக தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மோசமாக செயல்பட்டது அணியின் வீழ்ச்சிக்கு பெரிய காரணமாக அமைந்தது.

இந்த சூழலில் எல்லாவற்றையும் சரிசெய்து வெற்றிப்பாதைக்கு திரும்பவேண்டிய கட்டாயத்தில், ஒரு முக்கியமான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி இன்று களம்கண்டது.

245 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் பிரப்சிம்ரன் ஹாட்ரிக் பவுண்டரிகளாக விரட்ட, 4 சிக்சர்களை அடுத்தடுத்து பறக்கவிட்ட பிரியான்ஸ் ஆர்யா துவம்சம் செய்தார். முதல் விக்கெட்டுக்கே 4 ஓவரில் 66 ரன்களை சேர்த்த இந்த ஜோடி மிரட்டிவிட , ஒரு சிறப்பான பந்துவீச்சு மூலம் பிரியான்ஸை 36 ரன்னில் வெளியேற்றிய ஹர்ஷல் பட்டேல் முதல் விக்கெட்டை எடுத்துவந்தார்.

பிரியான்ஸ் ஆர்யா

விக்கெட்டை இழந்தாலும் அடுத்து களத்திற்கு வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரப்சிம்ரன் இருவரும் அதிரடியை நிறுத்தாமல் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிக்கொண்டே இருந்தனர். 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என வெளுத்துவாங்கிய பிரப்சிம்ரன் 42 ரன்னில் வெளியேற, 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் அடித்து பஞ்சாப் அணியை 17 ஓவர் முடிவில் 200 ரன்களை கடந்து எடுத்துச்சென்றார்.

ஸ்ரேயாஷ்

ஒருபக்கம் 2 சிக்சர் 1 பவுண்டரி என விரட்டிய வதேரா 27 ரன்கள் அடிக்க, கடைசியாக களத்திற்கு வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஷமி வீசிய 20வது ஓவரில் வரிசையாக 4 சிக்சர்களை பறக்கவிட்டு ஒரே ஓவரில் 27 ரன்கள் அடித்து அசத்த 20 ஓவர் முடிவில் 245 ரன்கள் என்ற இமாலய டோட்டலை குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக் சர்மா..

246 ரன்கள் என்ற இமாலய இலக்கை சன்ரைசர்ஸ் அணியால் அடிக்கவே முடியாது, 100% பஞ்சாப் அணியே வெற்றிபெறும் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது. ஆனால் ’இருங்க பாய்’ என்ற தொணியில் களத்திற்கு வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் ஒரு முடிவுடனேயே பேட்டிங் செய்தனர்.

மிகப்பெரிய ரன் சேஸிங்கிற்கு பிள்ளையார் சுழி போட்டது என்னவோ டிராவிஸ் ஹெட் தான், ஆனால் ’இப்போ ஒரு காட்டுத்தீயே பத்திக்கிச்சு’ என்பதுபோல் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விரட்டிய அபிஷேக் சர்மா இது என்னோட நாள் என்று சார்ஜ் எடுத்துக்கொண்டார்.

அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட்

டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் ஹாட்ரிக் பவுண்டரிகளை விரட்ட, சிக்சருக்கு திரும்பிய அபிஷேக் சர்மா யஷ் தாகூர் வீசிய பந்தில் சிக்சரை பறக்கவிட்டார். ஆனால் அடுத்தபந்திலேயே அபிஷேக் சர்மா அடித்த பந்தை ஃபீல்டர் கேட்ச் பிடித்து அசத்த, ஒட்டுமொத்த பஞ்சாப் அணியும் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் அடுத்தநொடியே நோ பால் என சைரன் அலற, ஒட்டுமொத்த பஞ்சாப் அணியுமே கொஞ்சம் அலறத்தான் செய்தார்கள். இதில் சோகம் என்னவென்றால் அடுத்த பந்தையே சிக்சருக்கு அனுப்பிய அபிஷேக் சர்மா, கிடைத்த வாய்ப்பை பெரிதாக்கும் முயற்சியில் இறங்கினார்.

ஹெட்-அபிஷேக் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு அடிக்க 5 ஓவரில் 75 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் அணி. விக்கெட்டை தேடிய பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அவருடைய விக்கெட் டேக்கிங் பவுலரான லாக்கி பெர்குஷனை பந்துவீச அழைத்துவைத்தார்.

ஃபெர்குசன்

இரண்டு பந்துகளை சிறப்பாக வீசிய பெர்குசன் சிறந்த பவுலராக தெரிய, ரன்-அப்பில் காலை பிடித்துக்கொண்டு அமர்ந்த அவர் காலில் ஏற்பட்ட அதிகப்படியான வலியால் தொடர்ந்து பந்துவீச முடியாமல் களத்திலிருந்து வெளியேறினார். இதுதான் பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சையும் பாதித்தது, அவர்களுடைய மெய்ன் பவுலர் வெளியேற ஆட்டம் மொத்தத்தையும் தங்கள் பக்கம் கொண்டுவந்தனர் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும்.

வரலாறு படைத்த சன்ரைசர்ஸ் அணி!

7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய அபிஷேக் சர்மா 19 பந்தில் அரைசதமடிக்க, 56 ரன்னில் அவருடைய கேட்ச்சை கோட்டைவிட்டார் யுஸ்வேந்திர சாஹல். அங்கிருந்து அபிஷேக் சர்மா திரும்பி பார்க்கவே இல்லை.

தொடர்ந்து அடித்தால் மைதானத்திற்கு வெளியே மட்டும்தான் என்று பறக்கவிட்ட அபிஷேக் சர்மா 11 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்ட 40 பந்தில் சதமடித்து அசத்தினார். முதல் 5 போட்டியில் 50 ரன்கள் மட்டுமே அடித்த அவர், சதமடித்த பிறகு ‘THIS ONE IS FOR ORANGE ARMY’ என்ற கடிதத்தை எடுத்து செலப்ரேஷனாக காண்பித்தார். இன்று என்னுடைய நாள் என்பதை முடிவுசெய்துவிட்ட பின்னரே களத்திற்கு வந்துள்ளார் என்பது இதிலிருந்தே தெரிந்தது.

அபிஷேக் சர்மா ஒருபுறம் ருத்ரதாண்டவம் ஆட, மறுமுனையில் நானும் களத்தில் இருக்கிறேன் என 9 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவைத்தெடுத்த டிராவிஸ் ஹெட் 66 ரன்கள் அடித்து அசத்தினார். அடுத்தடுத்து சிக்சர்களாக பறக்க களத்திலேயே டிராவிஸ் ஹெட் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

12 ஓவரில் 170 ரன்களை கடந்தபோதும் பஞ்சாப் கிங்ஸ் பவுலர்களால் விக்கெட்டையே வீழ்த்த முடியவில்லை, ’எங்களுக்கே பார்க்க பாவமாதான் யா இருக்கு’ என்ற மனநிலைக்கே ரசிகர்கள் சென்றனர். நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி சிக்சர் அடிக்காதா என்று பார்த்துகொண்டிருந்த ரசிகர்கள், இன்றைய போட்டியில் எப்போதான் பா டாட்-பால் போடுவீங்க என்ற எதிர்ப்பார்ப்புக்கு சென்றனர்.

அபிஷேக் சர்மா

எப்படியாவது விக்கெட் கிடைக்காதா என தேடிக்கொண்டிருந்த பஞ்சாப் அணி முதல் விக்கெட்டை 171 ரன்னில் எடுத்துவந்தது. டிராவிஸ் ஹெட் வெளியேறினாலும் தொடர்ந்து அதிரடியை நிறுத்தாத அபிஷேக் சர்மா 55 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் என சிக்சர் மழை பொழிந்து 141 ரன்கள் அடிக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி.

இது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன்சேஸிங் வெற்றியாக பதிவுசெய்யப்பட்டது.

இன்றைய போட்டியில் 141 ரன்களை குவித்த அபிஷேக் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்து அசத்தினார். இன்றைய போட்டியில் அபிஷேக்கின் கேட்ச்களை பஞ்சாப் வீரர்கள் கோட்டைவிட்டாலும், அதிர்ஷ்டம் அவருடைய பக்கமே இருந்தது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்து சன்ரைசர்ஸ் அணி 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது, சிஎஸ்கே அணி 10வது இடத்தை பிடித்துள்ளது.