இந்தியா - தென்னாப்பிரிக்கா cricinfo
T20

யு19 மகளிர் டி20 உலகக்கோப்பை ஃபைனல் | சொதப்பிய தென்னாப்ரிக்கா.. இந்தியாவிற்கு 83 ரன்கள் இலக்கு!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Rishan Vengai

ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.

டி20 உலகக்கோப்பையை வெல்ல உலகில் உள்ள 16 நாடுகளான மலேசியா, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, சமோவா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், நைஜீரியா முதலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ind vs sa

பரபரப்பாக நடந்துமுடிந்த லீக் போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய 4 அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

இந்நிலையில் அரையிறுதிப்போட்டிகளில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியாவும், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

82 ரன்னுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா..

ஒரு போட்டியில் கூட தோல்வியே காணாமல் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றிபெற்ற நிகி பிரசாத் தலைமையிலான இந்திய மகளிர் அணி கெத்தாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

மறுபுறம் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு வலுவான போட்டியாளராக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ind vs sa

இந்நிலையில் கோப்பை வெல்வதற்கான இறுதிப்போட்டியானது மலேசியாவில் இன்று பரபரப்பாக தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்து விளையாடியது. ஆனால் இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத தென்னாப்பிரிக்கா பேட்டர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

ind vs sa

இந்திய ஸ்பின்னர்கள் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்த 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா 82 ரன்களே சேர்த்தது.

நடப்பு உலகக்கோப்பை சாம்பியனான இந்திய அணி மீண்டும் கோப்பையை தக்கவைத்துகொள்ள 83 ரன்களே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.