Suryakumar
Suryakumar Twitter
T20

3 முறை கோல்டன் டக்! NO.1 வீரராக இருந்தும் எல்லைமீறிய ட்ரோல்ஸ்! வலிகளை தாண்டி எழுந்து நின்ற SKY!

Rishan Vengai

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

30 வயதுவரை வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த சூர்யகுமார்!

அற்புதமான திறமைகள் இருந்தும், அதிகப்படியான ரன்களை குவித்தும், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையையே முடித்துகொண்ட, எத்தனையோ திறமையான வீரர்கள் நம்மிடையே இருக்கின்றனர். அவர்கள் இந்திய அணியில் இல்லாமல் போனாலும், பிற இடங்களில் கிரிக்கெட்டில் ஜொலித்து கொண்டுதான் இருப்பர்.

இப்படியான திறமையான வீரர்கள் அணியில் எடுக்கப்படாமல் இருக்க, ‘அவர்களுக்கு இணையாக சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும் மற்றொரு வீரர் ஏற்கெனவே அணியில் இருக்கிறார்’ என்பதோ, இல்லையேல் ‘அணிக்கு தேவையான வீரர்கள் அதிகமாக இருக்கும்போது, இப்படியான வீரர்களுக்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்’ என்பதோ காரணங்களாக இருக்கலாம்.

Suryakumar yadav

இதுபோன்ற சில புறக்காரணங்களால், இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும்பட்சத்தில் அதை ஏற்றுக்கொண்டு சிலர் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிவிடுவதுண்டு.

ஆனால் அதையெல்லாம் மீறி, ஒரு சிலவீரர்கள் தான் இந்திய அணியின் தேர்வுக்குழு கதவை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருப்பார்கள். அதிலும் சிலர் ஒருகட்டத்தில் சோர்ந்துபோய் அமைதியாகிவிட, மிகச் சிலர் தான் கதவையே உடைக்கும் முயற்சியில் இறங்குவார்கள். அப்படி தான், தனது 30 வயது வரை முதல்தர போட்டிகளில் 5500 ரன்கள், டி20 போட்டிகளில் 6000 ரன்கள் என குவித்தும், சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்நிலையில் தனது ஆட்டத்தை மேலும் மெருகேற்றிக்கொண்ட சூர்யா, தன்னுடைய 31ஆவது வயதில் இந்திய அணியின் தேர்வுக்குழு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

“அணித்தேர்வர்கள் நிராகரித்த போதும், உடைந்துபோகவில்லை!” - சூர்யகுமார் யாதவ்

இந்திய அணியில் தேர்வாகாத போது இருந்த மனநிலை குறித்து முன்பொருமுறை பேசியிருந்த சூர்யகுமார் யாதவ், “ஒவ்வொருமுறை நான் நிராகரிக்கப்பட்ட போதும், எனக்கு எரிச்சல் வரவில்லை. அடுத்த கட்டத்திற்கு செல்ல என்ன வித்தியாசமாக செய்யவேண்டும் என்று தான் நினைத்தேன். அதனால் தொடர்ந்து எனது விளையாட்டில், கடின உழைப்பை போட ஆரம்பித்தேன்.

Suryakumar yadav

அதற்குபிறகு என் ஆட்டத்தை நான் ரசிக்கவில்லை, ருசிக்கவே ஆரம்பித்து விட்டேன். விளைவுகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு, செயல்பாட்டில் கவனம் செலுத்தினால், ஒரு நாள் அணித்தேர்வர்களின் நம்பிக்கையை பெற்று, அணிக்குள் நுழையும் கதவை உடைப்பேன் என்று நான் நம்பினேன்” என்று தெரிவித்திருந்தார்.

எந்த வீரரும் செய்யாத சாதனைகள்! 360 டிகிரி பேட்டாராக வலம்வந்த SKY!

அணிக்குள் நுழைய, பல வருடங்கள் தொடர்ந்த அவருடைய போராட்டம் ஒரு வழியாக 31 வயதில் தான் நிறைவேறியது. மார்ச் 14, 2021ல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார், சூர்யகுமார் யாதவ். அதற்கு பிறகு குறுகிய காலகட்டத்திலேயே, ஒரு குட்டி சகாப்தத்தையே நிகழ்த்தி காட்டிவிட்டார். அடுத்தடுத்து பல சாதனைகளை டி20 கிரிக்கெட்டில் படைத்த அவர், புதிய 360டிகிரி பேட்டர் என அழைக்கப்பட்டார்.

Suryakumar yadav

அவர் படைத்த சாதனைகளில் சில:

* டி20 போட்டிகளில் 3 சதங்களை விளாசிய SKY (சூர்யகுமார் யாதவ்), தொடக்க வீரராக இல்லாமல் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதை செய்துகாட்டிய முதல் வீரர்.

* டி20 போட்டிகளில் வெறும் 843 பந்துகளை எதிர்கொண்டு, 1500 ரன்கள் அடித்த முதல் வீரர்.

* 150 ஸ்டிரைக்ரேட்டிற்கு மேல் வைத்து, 1500 ரன்களை எட்டிய முதல் வீரர்.

* 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர்.

* உலகின் நம்பர் 1 டி20 வீரர்.

“100 ஆண்டுக்கு ஒருமுறை தான் சூர்யா போன்ற வீரர்கள் வருவார்கள்!”- புகழ்ந்து தள்ளிய ஜாம்பவான்கள்

சூர்யாவின் அற்புதமான பேட்டிங்கை வியந்து பாராட்டிய முன்னாள் கிரிக்கெட்டர் கபில்தேவ், “பேட்ஸ்மேன்களிடம் இந்தமாதிரியான தாக்குதல்களை பார்ப்பது அரிது. இப்படி விளையாடினால், பந்துவீச்சாளர்கள் என்ன தான் செய்யமுடியும். ஏபி டி வில்லியர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரிக்கி பாண்டிங் போன்ற அற்புதமான வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு சிலரால் மட்டும் தான் சூர்யகுமாரை போல் கிளீன் ஷாட்களை ஆடமுடியும். 100 ஆண்டுக்கு ஒருமுறை தான் சூர்யாவை போன்ற வீரர்கள் வருவார்கள். அவருக்கு ஹாட்ஸ் ஆஃப்” என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

Suryakumar yadav

சூர்யாவிடம் நேர்காணல் செய்த டிராவிட், “ஒரு போட்டியில் உங்கள் சிறப்பான பேட்டிங்கை பார்த்து ‘இதுதான் உங்கள் திறமை’ என்று நினைத்தால், அதற்கு அடுத்த போட்டியில் அதைவிட ஒரு சிறப்பான ஆட்டத்தை நீங்கள் ஆடுகிறீர்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, உங்களுடைய சிறந்த டி20 இன்னிங்ஸை இன்னும் நாங்கள் பார்க்கவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது” என பாராட்டியிருந்தார்.

Suryakumar yadav

டிவில்லியர்ஸ் பேசுகையில், “சூர்யாவை 360டிகிரி பேட்டர் என என்னுடன் ஒப்பிடுகிறார்கள். ஏன் அப்படி இருக்க கூடாது? அவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு, கிரிக்கெட்டின் தங்கப்புத்தகத்தில் அவர் இடம்பிடிப்பார்” என்று கூறியிருந்தார்.

3 முறை டக் அவுட்டாகி மோசமான சாதனை! ட்ரோல் மெட்டீரியல் ஆன சூர்யா!

இப்படி பல ஜாம்பவான்கள், உலக கிரிக்கெட் ரசிகர்கள், சக போட்டியாளர்கள் என அனைவராலும் புகந்து தள்ளப்பட்ட சூர்யகுமாருக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை, ஒரு மோசமான கட்டத்தை கிரிக்கெட்டில் சந்திக்க தொடங்கினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில், தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட்டாகி வெளியேறினார். டக் அவுட் என்றால் சாதாரன டக் அவுட் எல்லாம் இல்லை, முதல் பந்திலேயே வெளியேறி 3 கோல்டன் டக்குகளை சந்தித்தார் சூர்யா. ஒரு இந்திய பேட்டர் தொடர்ந்து 3 முறை கோல்டன் டக்காகி வெளியேறுவது எல்லாம், இதுதான் முதல்முறை.

Suryakumar yadav

ஐபிஎல் தொடரில் விளையாடி தனது ஃபார்மை மீட்டெடுப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், ஐபிஎல் தொடரிலும் டக் அவுட் ஆவதை தொடர்ந்து, மேலும் ட்ரோல் செய்யப்பட்டார். 0, 1, 7, 16 என மோசமாக விளையாடிய அவரை, சமூக வலைதளங்கள் தொடர்ந்து எள்ளி நகையாடின. “அவரை போய் உட்காரச்சொல்லுங்கள், இன்னும் 4 டக் அவுட்டுகள் அடிக்கப்போகிறார், இவரெல்லாம் அவ்வளவுதான்” என அத்தனை ட்ரோல்களும் எல்லை மீறின. ஒரு மாதத்திற்கு முன்பு வரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடப்பட்ட ஒரு வீரர், கீழே விழுந்ததும் மிதிக்க ஆரம்பித்தது, இந்த சமூக வலைதளம். உண்மையிலேயே அவ்வளவு தானா? என பல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் புலம்பவே ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அத்தனைக்கும் பதிலடி வைத்திருந்தார் சூர்யகுமார் யாதவ்.

விமர்சனங்களை கடந்துவந்து எழுந்து நின்ற சூர்யா!

அத்தனை விமர்சனங்கள், ட்ரோல்கள் என எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்ட சூர்யகுமார் யாதவ், ஒருவர் வாழ்க்கையில் விழும் போது, எப்படி எழுந்து நிற்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கம்பேக் கொடுத்தார். ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் தன்னுடைய சிறப்பான ஃபார்மை எடுத்து வந்த அவர், அடுத்தடுத்து 4 அரைசதங்களை விளாசிவிட்டார். நேற்று முன்தினம் (மே 9) நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், ஒரு ருத்ரதாண்டவமே ஆடினார். யாரெல்லாம் அவரை எள்ளி நகையாடினார்களோ, அவர்கள் அனைவரின் வாயாலேயே புகழ்பாட வைத்து, தோல்வியில் துவளும் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டார். வாழ்க்கையில் மோசமான கட்டத்தில் இருக்கும் வீரர்களே, கம்பேக் கொடுக்க சூர்யாவிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

Suryakumar yadav

மே 9 நடந்த ஆட்டத்தில் 35 பந்துகளில் 237 ஸ்டிரைக்ரேட்டுடன் 83 ரன்களை குவித்த சூர்யகுமார், ஐபிஎல்லில் தனது அதிகபட்ச ரன்னை எடுத்துவந்தது மட்டுமில்லாமல், 3000 ஐபிஎல் ரன்களை பதிவுசெய்து அசத்தினார்.

இதே ஆட்டத்தை ஒருநாள் உலகக்கோப்பையிலும் எடுத்துச்சென்று, இந்திய அணி கோப்பையை வெல்ல உதவுங்களேன் மிஸ்டர் 360டிகிரி.