2023 ஒருநாள் உலகக்கோப்பையில் தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், 2024-ம் ஆண்டு பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்டார். ரஞ்சிக் கோப்பை தொடரில் பங்கேற்காததால் ஒழுங்கு நடவடிக்கையாக இதை செய்ததாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது.
இதற்கு ரவிசாஸ்திரி, இர்ஃபான் பதான் முதலிய பல இந்திய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதற்கிடையில் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், கேகேஆர் அணிக்கு 3வது ஐபிஎல் பட்டத்தை வென்றுகொடுத்தார்.
ஆனால் கோப்பை வென்ற கேப்டனாக இருந்தபோதும் 2025 ஐபிஎல் தொடருக்கான கேகேஆர் அணியிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து விளக்கமளித்த கேகேஆர் நிர்வாகம், ஒருதரப்பினர் மட்டுமே விருப்பப்பட்டால் போதாது என்ற கருத்தை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் கோப்பை வென்றபோதும் தனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக்கூறி நீண்டகால குழப்பத்திற்கு மௌனம் கலைத்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.
என்னதான் கோப்பை வென்ற கேகேஆர் அணியிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மோசமாக வெளியேற்றப்பட்டாலும், 2025 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அவரை 26.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தது. மார்ச் 22ம் தேதி தொடங்கவிருக்கும் 2025 ஐபிஎல் தொடரில் ரிக்கி பாண்டிங் உடன் சேர்ந்து பணியாற்றவுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.
அதுமட்டுமில்லாமல் இந்த இடைப்பட்ட காலத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பிறகு, ரஞ்சிக்கோப்பை, சையத் முஷ்டாக் அலி, இரானி கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என கோப்பைகளாக வென்று குவித்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.
இந்நிலையில் கேகேஆர் அணியிலிருந்து வெளியேறியதற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், "ஐபிஎல் கோப்பை வெல்லவேண்டும் என்பது பெரிய இலக்காக இருந்தது, அதிர்ஷ்டவசமாக நான் அதை வென்றேன். ஆனால் ஐபிஎல்லை வென்ற பிறகு நான் விரும்பிய அங்கீகாரம் எனக்குக் கிடைக்கவில்லை என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். நாளின் முடிவில் உங்களின் சிறந்த செயலை யாரும் அங்கீகரிக்காதபோதும், உங்களுடைய சுயநேர்மையால் அணிக்கு தேவையான சிறந்ததை தொடர்ந்து செய்கிறீர்கள். அது மிகவும் முக்கியமானது, அதைத்தான் நானும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்.
இங்கு அங்கீகாரம் என நான் குறிப்பிடுவது, களத்தில் நீங்கள் செய்யும் திருப்திகரமான வேலைக்கு கிடைக்கும் மரியாதை அல்லது பாராட்டு என்பதையே. நீங்கள் கடினமான ஆடுகளங்களில் ஒன்றை சிறப்பாக செய்தபோதும், உங்களுக்கான அங்கீகாரம் அங்கு கிடைக்காதபோது என்ன செய்ய முடியும்” என்று என்ன அங்கீகாரத்தை தவறவிட்டார் என்பதை சமீபத்திய நேர்காணலில் விளக்கினார்.
2025 சாம்பியன்ஸ் டிராபியில் அழுத்தமான சூழலில் அணிக்காக சிறந்த கிரிக்கெட்டை விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், 5 போட்டிகளில் 243 ரன்கள் எடுத்தார். இதில் நியூசிலாந்திற்கு எதிராக அவருடைய 79 ரன்கள் அதிகபட்சமானது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி வென்றது குறித்து பேசிய அவர், "மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால், இது ஒரு பயணமாக இருந்தது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடிய பிறகு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய என் வாழ்க்கையின் இந்தக் கடினமான கட்டத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் எங்கே தவறு செய்தேன், என்ன செய்ய வேண்டும், என் உடற்தகுதியில் எவ்வளவு சிறப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்தேன். இந்தக் கேள்விகள் அனைத்தையும் நானே என்னிடம் கேட்டுக்கொண்டேன், படிப்படியாக என் பயிற்சியிலும், என் திறனை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தத் தொடங்கினேன்" என்று ஐயர் கூறினார்.
உள்நாட்டு கிரிக்கெட் எப்படி தன்னை மெருகேற்றியது என்று கூறிய அவர், "உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடிய தொடர்ச்சியான போட்டிகள் எனக்குக் கிடைத்தபோது, உடற்தகுதி எவ்வளவு முக்கியம் என்பதைக் கண்டுபிடித்தேன். குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் எனது கவலைகளை நான் சரிசெய்து திரும்பியபிறகு, ஒட்டுமொத்தமாக தற்போது என்னை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் அனைத்திலிருந்தும் வெளியே வந்த விதம், சூழ்நிலையை கையாண்ட விதம் அனைத்தும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் நான் என்னை நம்பினேன்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.