ஐபிஎல்
ஐபிஎல் file image
T20

’எந்தவொரு வீரருக்கும் அது வருத்தமாகவே இருக்கும்’- ஐபிஎல்லில் 1 ரன்னில் சதத்தைத் தவறவிட்ட 9 வீரர்கள்!

Prakash J

கிரிக்கெட்டில் படைக்கப்படும் சாதனைகள்

கிரிக்கெட்டில் வீரர் ஒருவர் பங்கேற்று விளையாடுவதைவிட, போட்டிகளில் அவர் செய்யும் சாதனைகளே பிரபலமாகப் பேசப்படுகிறது. அதிலும் பரபரப்பான கட்டத்தில் அதிரடியாய் ஆடி சாதனை புரியும் வீரர்களை எந்த ரசிகர்களுமே மறக்க மாட்டார்கள். அத்தகைய சாதனைகளுக்கு டி20 போட்டி, ஓர் உதாரணமாய் மாறியிருக்கிறது. எண்ணற்ற இளம்வீரர்கள் பலரும், தாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல எனச் சொல்லுமளவுக்கு குறைந்த பந்துகளில் அதுவும் சிக்ஸருமாய், பவுண்டரிமாய் விரட்டி பல சாதனைகளைச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஐபிஎல் சீசனில் எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அதில் பல முறியடிக்கப்பட்டு வருகின்றன. சில, முறியடிக்கப்படாமலும் உள்ளன. தற்போது 16வது சீசன் தொடங்கி, விறுவிறுப்பாய் நடைபெற்று வருகிறது.

தனியொருவராகப் போராடிய ஷிகார் தவான்

இந்த நிலையில், 14வது லீக் போட்டியாக எய்டன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஷிகார் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேற்று (ஏப்ரல் 9) இரவு ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்பாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 17.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டை இழந்து வெற்றி ரன்னை எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஷிகார் தவான்

என்றாலும் பஞ்சாப் அணியில் தனியொருவராய்ப் போராடி 99 ரன்களை எடுத்த கேப்டன் ஷிகார் தவான் பேசுபொருளானார். அந்த அணியில் தொடர்ந்து விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்தபோதும் ஷிகார் தவான் மட்டும் தொடக்க பேட்டராய்க் களமிறங்கியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமலும் இருந்தார். அவர் கடைசி ஓவரில் சதம் அடிக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. அதற்காக அந்த ஓவரில் 4 பந்துகளை வீணடித்த அவர், இறுதியில் ஒரு சிக்ஸர் அடித்து 99 ரன்களுடன் களத்தில் நின்றார். இதனால் அவருடைய சதம் கனவு, நனவாகாமல் போனது.

ஷிகார் தவான்

ஒருவேளை, அவர் சதம் அடித்திருந்தால், இந்த சீசனில் முதல் சதம் அடித்த வீரர் என்ற பட்டியலில் இணைந்திருப்பார். என்றாலும், இந்த 99 ரன்களை அவர் எடுத்ததன் மூலம் வேறொரு பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதாவது ஐபிஎல்லில் 99 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதில் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்த வீரர்களும், ஆட்டமிழக்காமல் (அதற்குள் போட்டியோ அல்லது அனைத்து ஓவர்களோ முடிவுற்றிருக்கலாம்) இறுதிவரை களத்தில் நின்ற வீரர்களும் உள்ளனர். அந்த வகையில், அவர்களுடைய பட்டியல் குறித்து இங்கு பார்ப்போம்.

1. விராட் கோலி (2013)

கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு வீரர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர். கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2013ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸுக்கு (அப்போது டெல்லி டேர்டெவில்ஸ்) எதிரான ஆட்டத்தில் 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

விராட் கோலி

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் 99 ரன்களில் ஆட்டமிழந்த முதல் வீரரானார், விராட் கோலி. என்றாலும் விராட் கோலி இதுவரை ஐபிஎல்லில் 5 சதம் அடித்துள்ளார். இவர், தற்போதும் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. சுரேஷ் ரெய்னா (2013)

அதே ஆண்டு, சென்னை அணியில் இடம்பெற்றிருந்த ரசிகர்களால் ’சின்ன தல’ என அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்தார்.

சுரேஷ் ரெய்னா

இதன்மூலம் 1 ரன்னில் சதத்தைத் தவறவிட்டார். என்றாலும் இவரும் ஐபிஎல்லில் 1 சதம் அடித்துள்ளார். ஆனால், இவர் தற்போது ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை.

3. பிருத்வி ஷா (2019)

இதைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பிருத்வி ஷா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 55 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 180.00 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பிருத்வி ஷா

ஐபிஎல் சீசனில் பிருத்வி ஷா இதுவரை ஒரு சதம்கூட அடிக்கவில்லை. இந்த சீசனிலும் பிருத்வி ஷா, டெல்லி அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. கிறிஸ் கெய்ல் (2019)

அதுபோல் அதே ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக 64 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த நிலையில் 20 ஓவர் முடிவுற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர், 1 ரன்னில் சதத்தைத் தவறவிட்டார்.

கிறிஸ் கெய்ல்

என்றாலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் கெய்லே முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார். தற்போது அவர், ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இவருடைய இந்த சாதனையை விராட் கோலி முறியடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

5. இஷான் கிஷன் (2020)

அடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு, மும்பை அணி வீரரான இஷான் கிஷன், பெங்களூரு அணிக்கு எதிராக 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் அந்த சீசனில் இஷான் 1 ரன்னில் சதத்தைத் தவறவிட்டார். இதுவரை அவர் ஐபிஎல் சீசனில் 1 சதமும் அடிக்கவில்லை.

இஷான் கிஷன்

ஐபிஎல்லில் அவரது அதிகபட்ச ரன் 99, என்றாலும் இஷான் சர்வதேச ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. கிறிஸ் கெய்ல் (2020)

அதேபோல், அதே ஆண்டு பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்த கிறிஸ் கெய்ல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 63 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கிறிஸ் கெய்ல்

இதன்மூலம் மீண்டும் ஒருமுறை 1 ரன்னில் சதத்தைத் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. மயங்க் அகர்வால் (2021)

அடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த மயங்க் அகர்வால், டெல்லி அணிக்கு எதிராக 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவுற்றதால் அவரால் சதம் அடிக்க முடியவில்லை.

மயங்க் அகர்வால்

இதனால் அவருக்கும் 1 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பு பறிபோனது. என்றாலும் மயங்க் அகர்வால், சன்ரைசர்ஸ் அணியில் அங்கம் வகித்தபோது, ஐபிஎல்லில் 1 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. ருதுராஜ் கெய்க்வாட் (2022)

கடந்த ஆண்டு (2022) சென்னை அணி வீரரான ருதுராஜ் கெய்க்வாட், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் 1 ரன்னில் சதத்தைத் தவறவிட்டார்.

ருதுராஜ் கெய்க்வாட்

என்றாலும் ஐபிஎல்லில் இவரும் 1 சதத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த சீசனிலும் சிறப்பாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட், இதுவரை 189 ரன்கள் குவித்து 2வது இடத்தில் உள்ளார்.

9. ஷிகார் தவான் (2023)

இந்த வரிசையில்தான் தற்போதைய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகார் தவான், நேற்று ஐதராபாத் அணிக்கு எதிராக 99 ரன்கள் எடுத்தார். 66 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த நிலையில், 20 ஓவர் முடிவுற்றது.

ஷிகார் தவான்

இதனால் 1 ரன்னில் சதத்தைத் தவறவிட்டார். என்றாலும் ஐபிஎல் வரலாற்றில் அவரும் 2 சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் சுரேஷ் ரெய்னா, மயங்க் அகர்வால், ஷிகார் தவான் ஆகிய வீரர்கள் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்த நிலையில் 20 ஓவர்கள் முடிவுற்றன. இதில் சுரேஷ் ரெய்னாவைத் தவிர மற்ற இரண்டு வீரர்களும் தற்போதைய ஐபிஎல் சீசனிலும் விளையாடி வருகின்றனர். அதேநேரத்தில் விராட் கோலி, கிறிஸ் கெய்ல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், பிருத்வி ஷா ஆகியோர் 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக கிறிஸ் கெய்ல் இரண்டு முறை 99 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்துள்ளார்.

கிரிக்கெட் மைதானம்

எந்த வகை கிரிக்கெட்டாக இருந்தாலும், 99 ரன்களில் ஆட்டமிழப்பது என்பது ஒவ்வொரு பேட்டருக்கும் மிகவும் வேதனையான தருணமே. அதுபோல் ஒரு பேட்டர், 99 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில் இன்னிங்ஸ் நிறைவு பெறுவதும் வேதனையே. காரணம், ஒரு சதம் என்பது, பேட்டர்களின் வாழ்நாள் சாதனையாகக் கருதப்படுகிறது. அதை, 1 ரன்னில் அவர்கள் தவறவிடும்போது மேலும் அது வருத்தத்தைத் தரும்.