தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் போட்டி டர்பனில் நடைபெற்ற நிலையில், 10 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என துவம்சம் செய்து 50 பந்தில் 107 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். அதுமட்டுமில்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் படைத்தார்.
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், நல்ல ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஓவரையே சிறப்பாக வீசிய மார்கோ யான்சன் சஞ்சு சாம்சனை 0 ரன்னில் ஸ்டம்புகளை தகர்த்து வெளியேற்றினார்.
சஞ்சு சாம்சன் 0 ரன்னில் வெளியேற, அவரை தொடர்ந்து அபிஷேக் சர்மா 4, சூர்யகுமார் யாதவ் 4 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற இந்தியா 20 ஓவரில் வெறும் 124 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
அதற்குபிறகு 125 ரன்கள் நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியை வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா பக்கம் போட்டியை எடுத்துவந்தாலும், இறுதி 2 ஓவரை மோசமாக வீசிய அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் போட்டியை தோல்விக்கு அழைத்துச்சென்றனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 0 ரன்னில் வெளியேறிய சஞ்சு சாம்சன், முதல் இந்திய வீரராக மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிகமுறை டக் அவுட்டில் வெளியேறிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் யூசுப் பதான், ரோகித் சர்மா, விராட் கோலி முதலிய வீரர்கள் ஒரே ஆண்டில் 3 முறை டக் அவுட்டில் வெளியேறியிருந்த நிலையில், சஞ்சு சாம்சன் 4 முறை டக் அவுட்டில் வெளியேறி தேவையற்ற சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.