Sai Sudharsan
Sai Sudharsan PTI
T20

147 கிமீ வேகம்-கவர்ஸ் மேல் சிக்சர்! ரெய்னாவை கண்முன் காட்டிய சாய் சுதர்சன்! ஃபைனலில் தரமான சம்பவம்!

Rishan Vengai

2023ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமபலம் கொண்ட இருபெரும் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள், இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, சாய் சுதர்சனின் அற்புதமான பேட்டிங்கால் (96 ரன்கள்) சென்னை அணிக்கு 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

சிஎஸ்கேவா? சாய் சுதர்சனா? என்று மாறிய போட்டி!

சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வீரராக சுப்மன் கில் இருந்தார். அவர் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய போதும் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி ஒரு அற்புதமான ஸ்டம்பிங் மூலம் 39 ரன்னில் வெளியேற்றி அசத்தினார். அதற்கு பிறகு எந்த வீரர் குஜராத் அணிக்கு பெரிய ஸ்கோரை எடுத்துவர போகிறார் என்ற நிலையில், தமிழக வீரர் சாய் சுதர்சன் தன்னுடைய சிறப்பான ஃபார்மை வெளிக்கொண்டுவந்து அபாரமான ஆட்டத்தை ஆடினார். 8 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய சுதர்சன் டைட்டன்ஸ் அணியை 214 என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்து சென்றார்.

Sai Sudharsan

தமிழ்நாடு பிரீமியர் லீக், ரஞ்சிக்கோப்பை என தொடர்ந்து தன்னுடைய அற்புதமான பேட்டிங் ஃபார்மால் ரன்களை குவித்து வரும் சாய் சுதர்சன், கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி தனக்கு கொடுத்திருக்கும் வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்தி வருகிறார். கொடுக்கும் அனைத்து வாய்ப்பிலும் பிரமாதமான பேட்டிங்கை ஆடிவரும் சாய், கடந்த போட்டியில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறினார். அந்த போட்டியில் டெத் ஓவர்களில் அவரால் பெரிய ஹிட்களை அடிக்கமுடியவில்லை என்ற காரணத்தால் வெளியேற்றப்பட்ட நிலையில், தன்னால் எந்த மாதிரியான ஹிட்களை அடிக்கமுடியும் என்று இந்த போட்டியில் நிரூபித்துக்காட்டினார்.

147 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்தை நடந்துவந்து சிக்சர் அடித்த சாய் சுதர்சன்!

துஷார் தேஸ்பாண்டேவிற்கு எதிராக ஒரு சிக்சர், ஹாட்ரிக் பவுண்டரிகள் என பறக்கவிட்ட அவர், இந்த போட்டிக்கான சிறந்த ஷாட்டை டெத் பவுலரான பதிரானாவுக்கு எதிராக எடுத்துவந்தார். 147 கிமீ வேகத்தில் பதிரானா வீசிய பந்தை இரண்டு அடி நடந்துவந்து கவர்ஸ் திசையில் ஒரு சிக்சரை பறக்கவிட்டார். பார்ப்பதற்கே கண்ணில் ஒத்திக்கொள்ளும் அளவில்அற்புதமான ஷாட்டாக இருந்தது.

Sai Sudharsan

அதே வேகத்தில் வந்த அடுத்த பந்தையும் முட்டிப்போட்டு லாங்-ஆன் மேல் ஒரு அற்புதமான சிக்சரை பறக்கவிட்டு மிரட்டிவிட்டார். இந்தளவு குவாலிட்டியான ஷாட்டை ஒரு இடது கை பேட்டர் அடித்தெல்லாம் பார்த்து பல காலம் ஆகிறது. சுரேஷ் ரெய்னாவின் டிரேட் மார்க் கவர்ஸ் ஷாட்டை, இப்படி அநாயசமாக வேறு யாரும் அடித்ததில்லை. ஒரு கணம் ரெய்னாவை கண்முன் கொண்டு வந்தார் சாய் சுதர்சன். அற்புதமாக ஆடிய அவர் 4 ரன்களில் தன்னுடைய சதத்தை நழுவவிட்டார்.

ஐபிஎல்லை விட தமிழ்நாடு லீக்கில் அதிக சம்பளம் வாங்கும் சாய் சுதர்சன்!

ரஞ்சிக்கோப்பையில் 7 போட்டிகளில் 572 ரன்கள், விஜய் ஹசாரே டிராபி, தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் என அனைத்திலும் ரன்களை வாரிக்குவித்திருக்கும் சாய் சுதர்சன், குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஐபிஎல்லில் குறைந்த விலையான 20 லட்சத்திற்கு எடுக்கப்பட்டார். ஆனால் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ஐபிஎல் தொகைக்கும் அதிகமாக, 21.60 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார்.

Sai Sudharsan

இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் வீரர்களுக்கான ஏலம் அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு அணிக்கும் 70 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், அணியின் மொத்த தொகையில் 25% பணத்தை சாய் சுதர்சனுக்கு லைகா கோவை கிங்ஸ் அணி செலவு செய்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஒரே வீரர் சாய் சுதர்சன் மட்டும் தான்.