Ashwin-Sai Sudharsan
Ashwin-Sai Sudharsan Twitter
T20

17வயதில் அஸ்வின் வியூகத்தை உடைத்த சாய் சுதர்சன்! Final-க்கு பிறகு அழைத்து பாராட்டிய நட்சத்திர வீரர்!

Rishan Vengai

நடந்து முடிந்த 2023 ஐபிஎல் தொடரானது பல திறமையான இளம் வீரர்களை வெளிக்கொணர்ந்துள்ளது. பேட்டிங், பவுலிங் என கலக்கிப்போட்ட புதிய இளம் வீரர்கள், இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி அசத்தியிருந்தனர். அந்த வரிசையில் ரிங்கு சிங், திலக் வர்மா, ப்ரப்சிம்ரன், நெஹல் வதேரா, ஆகாஷ் மத்வால் போன்ற வீரர்களை தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்த்த சாய் சுதர்சனும் ஒரு மறக்கமுடியாத ஐபிஎல் தொடரை அரங்கேற்றியிருந்தார்.

பேட்டிங்கில் அற்புதமான திறமையை வெளிப்படுத்திய அவர், களமிறங்கிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதுபெற்று அசத்தினார். நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டைட்டன்ஸ் அணிக்குள் எடுத்துவரப்பட்ட சாய் சுதர்சன், வில்லியம்சன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதை 21 வயதிலேயே செய்து மிரட்டிவிட்டார்.

சதத்தை தவறவிட்டாலும் சாய் சுதர்சன் செய்த சாதனை!

தொடர் முழுவதும் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தன்னுடைய சிறப்பான பேட்டிங் மூலம் கவனம் ஈர்த்த சாய் சுதர்சனுக்கு, இறுதிப்போட்டியிலும் வாய்ப்பை வழங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சுப்மன் கில் மற்றும் ரிதிமான் சாஹா என இரண்டு ஓபனர்களையும் இழந்து தடுமாறும் போது, தன்னுடைய அபாரமான பேட்டிங்கை வெளிக்கொண்டுவந்த சாய் சுதர்சன் மிரட்டி விட்டார். 8 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என பறக்கவிட்ட சுதர்சன், ஒரு கணம் சென்னை அணியின் கோப்பை கனவையே ஆட்டம் காணச்செய்தார்.

Sai Sudharsan

47 பந்துகளில் 200 ஸ்டிரைக்ரேட்டில் தரமான பேட்டிங் செய்த அவர், 96 ரன்கள் அடித்திருந்த நிலையில் சதமடிக்கும் வாய்ப்பை 4 ரன்களில் தவறவிட்டார். ஐபிஎல் இறுதிப்போட்டியில் சதத்தை தவறவிட்டிருந்தாலும், பைனலில் அதிக ரன்களை அடித்த அன்கேப்டு இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தினார். 2014 ஐபிஎல் பைனலில் 94 ரன்கள் அடித்திருந்த மனிஷ் பாண்டே சாதனையை முறியடித்தார் சாய் சுதர்சன்.

அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டியதை நினைத்தால் இன்னும் சிலிர்க்கிறது!

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பிறகு நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் சாய் சுதர்சன், 96 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டான போது டக் அவுட்டில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றதை என்னால் எப்போதும் மறக்கமுடியாது என்று கூறினார்.

Sai Sudharsan

அதுகுறித்து பேசுகையில், “டக்அவுட்டில் இருந்து கிடைத்த வரவேற்பைப் பற்றி நினைக்கும் போது எனக்கு இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாக இருக்கிறது. குஜராத் அணி நிர்வாகம் மற்றும் ஸ்டாஃப்கள் அனைவரும் எனக்கு கொடுத்த ஆதரவும், என்மேல் வைத்த நம்பிக்கையும் அதிகமானது. நான் சதமடிக்கவில்லை என்றாலும் திருப்தியாக உணர்ந்தேன்” என்று சுதர்சன் கூறினார்.

கேன் வில்லியம்சன் என்னை அழைத்து பாராட்டினார்!

கேன் வில்லியம்சன் இடத்தில் தான் என்னை எடுத்திருந்தனர். அதனால் அவர் இல்லாத குறையை முடிந்தளவு போக்குவது என்னுடைய வேலை என்று நான் உணர்ந்தேன். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர் நியூசிலாந்து சென்றபிறகு கூட என்னுடன் தொலைபேசியில் உரையாடுவார். போட்டியில் என்ன செய்ய வேண்டும், எப்படி விளையாட வேண்டும் என்று என்ன சந்தேகம் கேட்டாலும் அவரிடமிருந்து அனைத்தும் கிடைக்கும். அவர் மிகவும் இனிமையானவர். எவ்வளவு இனிமையானவர்? என்றால், எப்போது வேண்டுமானாலும் என்னை நீ அழைக்கலாம் மற்றும் எப்போது வேண்டுமானாலும் கிரிக்கெட் பற்றி பேசலாம் என்று அவரே என்னிடம் கூறியிருக்கிறார்.

Kane Williamson

போட்டி முடிந்த பிறகு கூட, கேன் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் “மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் வேலையை சிறப்பாக செய்தீர்கள்” என்று பாராட்டியிருந்தார். அவருடைய இடத்தை நிரப்ப என்னால் முடிந்தவரை முயற்சித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஐபிஎல் தொடங்கும் போதே எங்களுக்கான ரோல் என்ன என்பதை எங்கள் நிர்வாகம் எங்களுக்கு சொல்லிவிட்டது. அது என்னை எனக்கான இடத்திற்காக தயாராவதற்கு பெரும் உதவியாக இருந்தது.

போட்டியின் போது சாப்பிட கூட நான் செல்லவில்லை! தோற்றிருந்தாலும் மீண்டு வருவோம்!

உண்மையில் முதல் இன்னிங்ஸிற்கு பிறகு நான் இரவு உணவு சாப்பிட கூட செல்லவில்லை. ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடிக்கொண்டிருந்தனர். அதனால் அப்போது தான் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றேன். அந்த நேரம் ருதுராஜ் மற்றும் கான்வே இருவரும் அவுட்டாக, அங்கிருந்து அசையாமல் டிவியின் முன்னாலேயே அமர்ந்துவிட்டேன்.

Sai Sudharsan

போட்டியை பொறுத்தவரையில் கலவையான உணர்வு தான். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், கோப்பையை இழந்தது வருத்தம் தான். ஆனால் ஒரே அணியாக அடுத்த சீசனில் மீண்டும் வருவோம்.

17 வயதில் அஸ்வினின் வியூகத்தை உடைத்த சுதர்சன்!

சாய் சுதர்சன் குறித்து யு-டியூப் வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், 17 வயதில் சுதர்சன் எப்படி தன் வியூகத்தை உடைத்தார் என்று தெரிவித்துள்ளார். சென்னை லீக் போட்டி ஒன்றில் நடந்த மெமரியை ஷேர் செய்திருக்கும் அஸ்வின், “ சுதர்சனுக்கு 17 வயது இருந்தபோது போட்டியில் நின்று விளையாடும் கட்டாயத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது இடது கை வீரருக்கு எதிராக மிட்விக்கெட்டை ஓப்பனாக விட்டிருந்த அஸ்வின், சுதர்சனை இறங்கிவந்து அடிக்க நிர்பந்தித்திருந்தார். ஆனால் அஸ்வினின் வலையில் சிக்காத சுதர்சன் ஃபேக் ஃபுட்டில் இருந்து ஒரு அற்புதமான கவர் டிரைவ் அடித்து அசத்தினார்.

Ashwin

இப்போது அஸ்வின் அவருடைய லெந்தை மாற்ற, இதற்கு தான் காத்திருந்தது போல் இறங்கிவந்து பந்தை வெளியில் தூக்கி அடித்திருக்கிறார் சுதர்சன். சுதர்சனின் இந்த அட்டாக்கை எதிர்ப்பார்க்காத அஸ்வின், ஆச்சரியத்தில் “அடேங்கப்பா இதோ பார்ரா இந்த பையன!” என்று கூறியுள்ளார்.