கலீல் அகமது - ருதுராஜ் கெய்க்வாட் web
T20

ருதுராஜ் மறைத்துவைத்த மர்ம பொருள்? ஏமாற்றியதா CSK? பால் டேம்பரிங் செய்ததாக குற்றச்சாட்டு!

2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை ஆர்சிபி அணியும், ராஜஸ்தானை சன்ரைசர்ஸ் அணியையும் வீழ்த்தி வெற்றிபெற்றன.

இந்நிலையில் தொடரின் மூன்றாவது லீக் போட்டிகளில் 5 கோப்பைகள் வென்ற சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடின.

CSK vs MI

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, சிஎஸ்கே பவுலர்களான கலீல் அகமதின் வேகப்பந்துவீச்சு மற்றும் நூர் அகமதின் சுழற்பந்துவீச்சு இரண்டையும் சமாளிக்க முடியாமல் 155 ரன்கள் மட்டுமே அடித்தது. கலீல் அகமது 3 விக்கெட்டுகளும், நூர் அகமது 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

156 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் மற்றும் ஃபார்மில் இருந்துவரும் ரச்சின் ரவீந்திரா இருவரும் அரைசதமடித்து அசத்த 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.

ruturaj

இந்த சூழலில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது இருவரும் சேர்ந்து பால் டெம்பரிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பந்தை சேதப்படுத்தியதா சிஎஸ்கே?

சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் வீடியோவில், சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தனது பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கொடுக்கிறார். அதை வாங்கிய கேப்டன் ருதுராஜ் அதை மறைத்தாவாரே தனது பாக்கெட்டில் வைக்கிறார். இந்த நிகழ்வு சிஎஸ்கே வீரர்கள் பந்தை சேதப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழ வழிவகுத்துள்ளது.

கலீல் அகமது ருதுராஜிடம் என்ன பொருளை கொடுத்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ரசிகர்களில் ஒரு பகுதியினர் சிஎஸ்கே அணி பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

ஆனால் சில ரசிகர்கள் இது முதல் ஓவரை வீசுவதற்கு முன்பாக நடந்தது, அதுவும் அவருடைய கையில் பந்தை வைத்திருக்கவில்லை. கலீல் தன்னிடம் இருந்த பொருளை ருதுராஜிடம் கொடுத்த பிறகுதான் பந்தையே தன் கைகளில் வாங்குகிறார். இப்படி இருக்கும் போது எப்படி அவரால் பந்தை சேதப்படுத்த முடியும் என்ற எதிர்கேள்வியை எழுப்புகின்றனர்.

அதேவேளையில் சில சிஎஸ்கே ரசிகர்கள் கலீல் அகமது பந்துவீசுவதற்கு முன்பாக, அவருடைய மோதிரத்தை கழற்றி ருதுராஜிடம் கொடுத்ததாக கருத்திட்டுள்ளனர். ஆனால் மோதிரத்தை கொடுக்கவேண்டுமானால் எதற்காக மறைத்து கொடுக்க வேண்டும், அவர்கள் பால் டெம்பரிங் செய்திருக்கிறார்கள் என மற்ற அணி ரசிகர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

ஏற்கனவே சிஎஸ்கே அணி உரிமையாளர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே அணி 2 ஆண்டுகள் ஐபிஎல்லில் விளையாட தடைசெய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த குற்றச்சாட்டு பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய ஊழலில் ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் மூன்று பேரும் சிக்கினர். இதில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவருக்கும் 12 மாதங்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மற்றொரு வீரரான பான்கிராஃப்ட்க்கு 9 மாதம் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.