Royal Challengers Bangalore
Royal Challengers Bangalore  PTI
T20

RRvRCB | ஃபார்ம்ல இருக்குற ராயல்ஸ் அவுட்டு... ஃபார்மே இல்லாத ராயல்ஸ் ஹிட்டு..!

ப.சூரியராஜ்

க்ரூப் ஸ்டேஜ் முறையில் துவங்கி, நாக் அவுட் முறைக்கு வந்துவிட்டது நடப்பு ஐ.பி.எல் தொடர். `இது பவுலிங் பிட்ச், பேட்டிங் பண்ண ரஃப்னு பிட்ச் ரிப்போர்ட்டர் சொல்றார். இன்னைக்கு மழை வர வாய்ப்பு இருக்கு, மேட்ச் நடக்குறது டஃப்னு வெதர் ரிப்போர்ட்டர் சொல்றார்னு சொல்லிட்டிருந்தா நான் ரஃபாகிடுவேன்' என எல்லோ கோச்சுகளுமே வெறிகொண்டு திரிகிறார்கள். இந்நிலையில் நேற்று மதியம் ஜெய்ப்பூரில், ப்ளே ஆஃப் பந்தயத்தில் மூச்சு பிடித்து ஓடிக்கொண்டிருக்கும் இரு அணிகள் மோதிக்கொண்டன. இதே சீசனில் முன்பு மோதிக்கொண்டபோது, பச்சை சொக்காய் அணிந்த ஆர்.சி.பி, பஞ்சு மிட்டாய் கலர் சொக்காய் கிழித்தெறிந்தது. அதற்கு பதிலடி கொடுக்குமார் ராஜஸ்தான் ராயல்ஸ் என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருந்தார்கள்.

Virat Kohli |\ Faf Du Plessis

டாஸ் வென்ற டூப்ளெஸ்ஸிஸ், பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். கோலியும் டூப்ளெஸ்ஸிஸும் ராயல்ஸின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் சந்தீப் சர்மா. ஓவரின் 5வது பந்து, ஒரு பவுண்டரி தட்டினார் கோலி. ஜாம்பாவின் 2வது ஓவரில், 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. சந்தீப் வீசிய 3வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூர். ஜாம்பாவின் 4வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கிய டூப்ளெஸ்ஸிஸ், ஒரு சிக்ஸரும் போட்டு பொளந்தார். சஹலிடம் 5வது ஓவரைக் கொடுத்தார் கேப்டன் சாம்சன். சஹலும் 5 ரன்களைக் கொடுத்தார். அஸ்வினின் 6வது ஓவர் கடைசிப்பந்து, டூப்ளெஸ்ஸிஸுக்கு ஒரு பவுண்டரி கிடைக்க, பவர்ப்ளேயின் முடிவில் 42/0 என பொறுமையாகத் துவங்கியது ஆர்.சி.பி.

கே.எம்.ஆசிஃபின் 7வது ஓவர் கடைசிப்பந்து, விராட் கோலி விக்கெட் காலி. பந்தைக் கொடியேற்றி ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். அஸ்வினின் 8வது ஓவர் கடைசிப்பந்து, ஒரு சிக்ஸரை போட்டுவிட்டார் மேக்ஸி. அடுத்த ஓவரை வீசினார் சாம்பியன் சஹல். கடைசிப்பந்தில் ஒரு பவுண்டரி தட்டினார் மேக்ஸ்வெல். ஜாம்பாவின் 10வது ஓவரில் மேக்ஸ்வெல்லுக்கு மற்றொரு பவுண்டரி. 10 ஓவர் முடிவில் 78/1 என இன்னும் பொறுமையாக ஆடியது ஆர்.சி.பி. `மெல்ல மெல்ல, ஏன்னா கிரவுண்டுக்கு வலிக்கும் பாருங்க. வேகமா அடிங்கய்யா ஆர்.சி.பி' என தலையில் அடித்துக்கொண்டார்கள் பெங்களூர் ரசிகர்கள். `மேக்ஸி விக்கெட்டைத் தூக்கினா ப்ளே ஆஃப், இல்லன்னா டிவி ஆஃப்' என ராஜஸ்தான் ரசிகர்களும் சோகமாகவே அமர்ந்திருந்தார்கள்.

Glenn Maxwell

ஆசிஃபின் 11வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அஸ்வினின் 12வது ஓவரில் 5 ரன்கள். சந்தீப் சர்மா வீசிய 13வது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் மேக்ஸ்வெல். அஸ்வின் வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸர் ஒன்றும் பறந்தது. ஆசிஃபின் 15வது ஓவரில் தனது அரைசதத்தை நிறைவு செய்த டூப்ளெஸ்ஸிஸ், அதே ஓவரில் தனது இன்னிங்ஸையும் நிறைவு செய்தார். ஆசிஃப் - ஜெய்ஸ்வால் கூட்டணி இன்னொரு விக்கெட்டையும் தூக்கியது. 15 ஓவர் முடிவில் 120/2 என வேகம் கூட்டியிருந்தது ஆர்.சி.பி.

ஜாம்பா வீசிய 16வது ஓவரின் முதல் பந்து, லோம்ரோர் அவுட். 3வது பந்து தினேஷ் கார்த்திக் அவுட். மேல்முறையீட்டுக்குச் சென்று விக்கெட்டை வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். சஹலின் 17வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார் மேக்ஸ்வெல். மேக்ஸ்வெல்லும், ப்ரேஸ்வெல்லும் களத்தில் இருக்கிறார்கள். ஆல் இஸ் வெல் என ஆர்.சி.பி ரசிகர்கள் நினைக்கையில், அவுட்டானார் மேக்ஸ்வெல். இம்முறை விக்கெட்டைத் தூக்கியது சந்தீப் சர்மா. அடுத்து களமிறங்கிய அனுஜ் ராவத், ஒரு பவுண்டரி விளாசினார். சஹலின் 19வது ஓவரில், இன்னொரு பவுண்டரி அடித்தார் ராவத். ஆசிஃப் வீசிய கடைசி ஓவரில், கடைசி மூன்று பந்துகள் சிக்ஸர், சிக்ஸர், பவுண்டரி என பறந்தது. 171/5 என நல்ல ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தது ஆர்.சி.பி.

Yashasvi Jaiswal

தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் சபாஷ் அகமதை இம்பாக்ட் வீரராக களமிறக்கினார் டூப்ளெஸ்ஸிஸ். இளம்புயல் ஜெய்ஸ்வாலும் இங்கிலாந்து புயல் பட்லரும் ராயல்ஸின் இன்னிங்ஸைத் துவங்கினார். முதல் ஓவரை வீசினார் சிராஜ். ஓவரின் 2வது பந்து, ஜெய்ஸ்வால் அவுட்! ராயல்ஸ் ரசிகர்கள் அதிர்ந்துபோனார்கள். `யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவுட்டு, ஆர்.ஆர். ஜெயிக்குறது டவுட்டு' என மேளம் அடிக்க ஆரம்பித்தனர் ஆர்.சி.பியன்ஸ். அடுத்து களமிறங்கிய சாம்சன், அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். 2வது ஓவரை வீசிய பார்னல், பட்லரின் விக்கெட்டைத் தூக்கினார். ராயல்ஸ் ரசிகர்ளுக்கு கண்ணீரே வந்துவிட்டது. அதே ஓவரில் கேப்டன் சாம்சனும் காலி.

Royal Challengers Bangalore players

உடனடியாக சஹலுக்கு பதிலாக படிக்கல்லை இம்பாக்ட் வீரராக அழைத்துவந்தது ஆர்.ஆர். அந்த ஓவரில் படிக்கல் ஒரு பவுண்டரி அடித்தார். சிராஜ் வீசிய 3வது ஓவரில், ரூட் ஒரு பவுண்டரி அடித்தார். பார்னலின் 4வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே. 5வது ஓவரில், படிக்கல்லின் விக்கெட்டைத் தூக்கி ஆர்.சி.பியின் வெற்றிக்கு அடிக்கல் நாட்டினார் ப்ரேஸ்வெல். அடுத்து களமிறங்கிய ஹெட்டி, முதல் பந்தே சிக்ஸருக்கு பறக்கவிட்டார். பார்னலின் 6வது ஒவரில் ரூட்டும் அவுட். பவர்ப்ளேயின் முடிவில் 28/5 என பாதாளத்தில் கிடந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 49 ரன்னுக்குள்ளே ஆல் அவுட் ஆகிட்டா நல்லாருக்கும் என ஆர்.சி.பி ரசிகர்கள் வேண்டினார்கள்.

ப்ரேஸ்வெல்லின் 7வது ஓவரில் ஜூரேலும் அவுட் ஆனார். கர்ன் சர்மாவின் 8வது ஓவரில், ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து அவமானத்திலிருந்து தன் அணியைக் காப்பாற்றினார் ஹெட்மயர். அந்த ஓவரின் கடைசிப்பந்து, ரன் அவுட் ஆனார் ரவி அஸ்வின். நூழிலையில் மிஸ் ஆயிடுச்சு! ப்ரேஸ்வெல்லின் அடுத்த ஓவரில் ஹெட்டி ஒரு பவுண்டரி அடிக்க, மேக்ஸ்வெல்லின் அடுத்த ஓவரில் ஹெட்டி அவுட்டானார். கர்ன் சர்மாவின் 11வது ஓவர் முதல் பந்து, ஜாம்பா அவுட். 3வது பந்து, ஆசிஃப் அவுட். சீட்டுக்கட்டுகளைப் போல் மளமளவென சரிந்தது ராயல்ஸ் அணி. 112 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்று ரன்ரேட்டை திருப்பிப்போட்டது ராயல் சேலஞ்சர்ஸ் அணி. சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்திய பார்னெலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. `எண்டு கார்டு போட்டு எகத்தாளமாடா பண்றீங்க. எனக்கு எண்டே கிடையாதுடா' என மீண்டும் ஆட்டத்துக்குள் கெத்தாக வந்துவிட்டது ஆர்.சி.பி.