Rohit
Rohit Kunal Patil
T20

“கடந்த ஆண்டு பிளே ஆஃப் செல்ல RCB-க்கு நாங்கள் உதவினோம்; அதற்கான பலன்...”- ரோகித் சர்மா கிண்டல்!

Justindurai S

மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை நேற்று எதிர்கொண்டது. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய அப்போட்டியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ். கேமரூன் கிரீன் 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆஃப் சுற்றில் நான்காவது அணியாக நுழையும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருந்த மும்பை அணி அடுத்து நடைபெற்ற பெங்களூரு - குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவுக்காக காத்திருந்தது. அந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது. பெங்களூரு தோல்வி அடைந்த காரணத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்தது.

முன்னதாக, ஐதராபாத் அணியை வீழ்த்திய பிறகு பேட்டி அளித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா, “கடந்த ஆண்டு ஆர்.சி.பி. அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல நாங்கள் பேருதவி செய்தோம். அதற்கான பலன் இப்போது கிடைக்கும் என்று நம்புகிறோம்” என கிண்டலாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், “இன்று வெற்றி பெற வேண்டும் என்கிற மனநிலையில் மட்டுமே களமிறங்கினோம். மற்றது நடக்குமா என்பது பற்றி நாங்கள் கவலைகொள்ளவில்லை. எங்களது கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறதோ அதை தான் எங்களால் கட்டுப்படுத்த முடியும். மற்ற விஷயங்கள் மீதெல்லாம், நடக்கும் என்று நம்பிக்கை மட்டுமே வைக்க முடியும்.

mumbai indians

இந்த போட்டிக்கு முன்பு எங்கள் அணியில் நான் எவரிடமும் எதுவும் பேசவில்லை. ஒருவேளை பிளே-ஆப் சுற்றுக்குள் நாங்கள் சென்றால், அதற்கு காரணம் அணியில் இருக்கும் வீரர்கள் தான். ஒருவேளை நாங்கள் செல்லவில்லை என்றால், அதற்கு யாரையும் காரணம் காட்டாமல் வெளியேறி விட வேண்டும். அடுத்த வருடம் இன்னும் பலத்துடன் களமிறங்க முற்படுவோம். கடந்த சீசனில் கடைசியாக நாங்கள் பெற்ற வெற்றி ஆர்சிபி அணிக்கு சாதகமாக இருந்தது. இந்த வருடம் நாங்கள் எதிர்பார்க்கும் முடிவை ஆர்சிபி அணி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் (சிரித்துக்கொண்டே).

நாங்கள் இந்த சீசனை சரியாக ஆரம்பிக்கவில்லை. இடையேதான் ஆட்டத்திற்குள் வந்து தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றோம். பின்னர் முக்கியமான கட்டத்தில் தோல்வியை தழுவியது எங்களை பின்னுக்குத் தள்ளியது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 18 பந்துகளில் 34 ரன்கள் அடிக்க வேண்டியது இருந்தது. அப்போட்டியை வெற்றி பெற்றிருக்கலாம்! அதேபோல் லக்னோ அணிக்கு எதிரான போட்டியும் எங்களது கையில் இருந்தது. அதிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

MI vs SRH

இருப்பினும் முடிந்ததைப் பற்றி பெரிதளவில் யோசிக்க தேவையில்லை. என்றாலும், சரியாக செயல்பட்டிருக்க வேண்டிய போட்டிகள் அவை. சில நேரங்களில் சில விஷயங்கள் நமக்கு சாதகமாக அமையாது. ஐபிஎல் போன்ற தொடரில் இதுவும் நடக்கக் கூடியவைதான்” என்று தெரிவித்துள்ளார்.

இறுதிவரை ஆட்டம் இழக்காமல் சதம் விளாசிய கேமரூன் கிரீன் கூறுகையில், “இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது மட்டுமே எங்கள் நோக்கமாக இருந்தது. ஏழாவது ஓவரிலே ரன்னை சேஸ் செய்யவோ அல்லது நெட் ரன் ரேட்டை அதிகரிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது மற்றும் ஆர்.சி.பி. அணிக்கு அழுத்தம் கொடுப்பதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது” என்றார்.