Tushar Deshpande, Rohit
Tushar Deshpande, Rohit Twitter
T20

“ரோகித் சிறப்பான ஆட்டக்காரர் இல்லை; அவரை வீழ்த்துவது எளிது”- துஷார் சொன்னதாக பரவும் கருத்து உண்மையா?

Rishan Vengai

2023 ஐபிஎல் தொடரின் முதல் இம்பேக்ட் வீரராக அறிமுகம் செய்யப்பட்டார், சிஎஸ்கே அணியின் இளம் பந்துவீச்சாளரான துஷார் தேஸ்பாண்டே. சோதனை என்னவென்றால், அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிக ரன்களை விட்டுக்கொடுத்த தேஸ்பாண்டே, சிஎஸ்கே அணிக்காக எந்தவித இம்பேக்ட்டையும் அந்த போட்டியில் ஏற்படுத்தவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, துஷார் தேஸ்பாண்டேவையும், தோனியையும் விமர்சனம் செய்யாத ஆளே இல்லை. சிஎஸ்கே பேட்டிங்கில் ஸ்டிராங்கான அணியாக இருக்கிறது தான், ஆனால் பவுலிங்கில் மோசமான லைன்-அப்பை வைத்திருக்கிறது என பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

சேவாக்கின் விமர்சனமும்.. தொடர்ந்து தோனி வழங்கிய வாய்ப்பும்!

முதல் போட்டிக்கு பிறகு துஷார் தேஸ்பாண்டே குறித்தும், தோனி குறித்தும் கருத்து தெரிவித்திருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக், “துஷார் தேஸ்பாண்டாவை தோனி தவறான இடத்தில் பயன்படுத்திவிட்டார், அவர் இதுபோன்ற மிஸ்டேக் செய்வதெல்லாம் அரிதானது. துஷார் தேஸ்பாண்டாவிற்கு பதிலாக, மொயின் அலியை முன்னதாகவே பயன்படுத்தியிருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

Tushar Deshpande

ஆனால் முதல் போட்டிக்கு பிறகு இரண்டாவது போட்டியிலும் துஷார் தேஸ்பாண்டேவிற்கு கேப்டன் எம்எஸ் தோனி வாய்ப்பளித்தார். லக்னோ அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் போட்டி அந்தபக்கமா இந்த பக்கமா என்று இருந்த நிலையில், அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஸ் பதோனி இருவரது விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் தேஸ்பாண்டே. இருப்பினும் கடைசி நேரத்தில் அவர் வீசிய நோ பால் மற்றும் ஒய்டுகள் மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகின.

ரோகித் பெரிய Batter எல்லாம் இல்லை.. அவரை வெளியேற்றுவது எளிது! - துஷார் தேஸ்பாண்டே

சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோதிய முக்கியமான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார் கேப்டன் ரோகித் சர்மா. ஆனால் 4ஆவது ஓவரை வீச வந்த தேஸ்பாண்டே, ரோகித் சர்மாவை க்ளீன் போல்டாக்கி சிஎஸ்கேவிற்கு சாதகமாக போட்டியை திருப்பினார். பின்னர் இறுதி நேரத்தில் டிம் டேவிட் விக்கெட்டையும் வீழ்த்திய அவர், சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார்.

Tushar Deshpande

சிஎஸ்கே அணி மும்பையை வீழ்த்தி வெற்றிபெற்ற பிறகு, ரோகித் சர்மா பற்றி துஷார் தேஸ்பாண்டே கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் துஷார் கூறியதாக, “ ரோகித் எல்லாம் பெரிய Batter (ஆட்டக்காரர்) இல்லை. அவர் ஒன்றும் விராட் கோலியோ, டிவில்லியர்ஸோ கிடையாது. பந்துவீசுவதற்கும், விக்கெட் வீழ்த்துவதற்கும் ரோகித் மிகவும் எளிதானவர்” என்று கூறியதாக வேகமாக பரவியது.

Rohit

துஷார் தேஸ்பாண்டேவின் இந்த கருத்து மும்பை ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் சிஎஸ்கே ரசிகர்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கருத்து பரவி ஒருநாள் கடந்த பிறகு, தற்போது அது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார் துஷார் தேஸ்பாண்டே.

நான் மூன்று வீரர்களையும் மதிக்க கூடியவன்! இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துகளை ஒருபோதும் கூறமாட்டேன்! - தேஸ்பாண்டே

ஹிட்மேன் ரோகித் சர்மா பற்றி கூறியதாக பரவிய கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார், துஷார் தேஸ்பாண்டே. இது போன்ற தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள துஷார், தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில், “ அந்த கருத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று லெஜண்டுகள் மீதும் எனக்கு முழுமையான மரியாதை இருக்கிறது. இதுபோன்ற கீழ்த்தரமான அறிக்கைகளை நான் செய்யவில்லை, எப்போதும் செய்யவும் மாட்டேன். இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Tushar Deshpande

துஷார் தேஸ்பாண்டே ரோகித் குறித்து கருத்து தெரிவித்ததாக வதந்தி பரவிய நிலையில், அவர் சமீபத்தில் எந்தவிதமான நேர்காணல்களும் எங்கும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.