ரிஷப் பண்ட் pt
T20

0, 15, 2 என சொற்ப ரன்களில் அவுட்.. 27 கோடிக்கு ஒர்த்தா ரிஷப் பண்ட்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட்டின் மோசமான ரன்களால் மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

Rishan Vengai

2024 ஐபிஎல் ஏலத்தின் போது மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி மற்றும் 20.50 கோடி விலைக்கு போகும்போது, பல்வேறு இந்திய முன்னாள் ஜாம்பவான்கள் அனைவரும் தனிப்பட்ட ஒரு வீரருக்கு எதற்கு இத்தனை கோடி என்ற விமர்சனத்தை வைத்தனர்.

அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டு வீரர்களுக்கு இவ்வளவு கோடி கொடுத்து வாங்க வேண்டுமா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்களை விடவா இவர்கள் இத்தனை கோடிக்கு தகுதியானவர்கள் என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டது.

mitchell starc

இந்த சூழலில் 2025 ஐபிஎல் ஏலத்தின் போது ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி விலைக்கு வாங்க, அதற்கும் ஒருபடி மேல் சென்று ரிஷப் பண்ட்டை 27 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

இந்த சூழலில் 2025 ஐபிஎல் ஏலத்தில் 27 கோடி, 26.75 கோடி, 23.75 கோடி என அதிக தொகைக்கு சென்ற வீரர்களில் ரிஷப் பண்ட் மற்றும் வெங்கடேஷ் இருவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். ஒரு தனிப்பட்ட வீரருக்கு இத்தகை கோடி தொகை கொடுப்பது சரியானது தானா என்ற விமர்சனங்கள் மீண்டும் எழுந்துள்ளது.

rishabh pant

இதையெல்லாம் கடந்து ரிஷப் பண்ட் எண்ணி சொல்லுமளவு ஒரு சில ஐபிஎல் தொடர்களில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். மற்றபடி அவர் ஐபிஎல்லில் ஜொலித்ததாக எந்த ரெக்கார்டும் இல்லை எனும்போது, அவருக்கு இவ்வளவு தொகைக்கு தகுதியானவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மோசமான முறையில் ஆட்டமிழக்கும் ரிஷப் பண்ட்..

2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியிருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.

இந்த மூன்று போட்டியிலும் ரிஷப் பண்ட் 0, 15 மற்றும் 2 ரன்கள் என மோசமான ரன்களில் அவுட்டாகி வெளியேறியுள்ளார். அதுவும் எப்படியான தருணங்களில் அவுட்டாகி சென்றுள்ளார் என்றால், அணி நல்ல நிலைமையில் இருக்கும் சமயத்தில் அடித்து ஆட முயற்சி செய்து பொறுப்பற்ற முறையில் அவுட்டாகி வெளியேறுகிறார். அவரைத்தொடர்ந்து அடுத்துவரும் வீரர்களுக்கு அழுத்தம் அதிகமாகி அவர்களும் விக்கெட்டை இழந்து வெளியேறுகின்றனர்.

rishabh pant

டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் 13.4 ஓவரில் 161/2 ரன்களை அடித்திருந்த லக்னோ அணி, ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற ஆட்டத்தால் அடுத்த 6 ஓவரில் வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமான இருந்தபோதும், ஃபீல்டரின் கையிலேயே விக்கெட்டை கொடுத்துவிட்டு 2 ரன்னில் வெளியேறினார் ரிஷப் பண்ட்.

இதுவரையிலான 8 ஐபிஎல் சீசன்களில் 2018 மற்றும் 2024 ஐபிஎல் சீசன்களில் மட்டுமே 40-க்கும் மேலான சராசரியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் பண்ட், அதிலும் 2018 ஐபிஎல் சீசனில் மட்டுமே 1 சதம் மற்றும் 5 அரைசதங்களுடன் தலைசிறந்த ஆட்டத்தை கொண்டிருந்தார் பண்ட். இப்படி நடப்பு சீசனையும் சேர்த்து 9 சீசன்களில் இரண்டில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ள ரிஷப் பண்டுக்கு 27 கோடி என்பது தகுதியான தொகையா என்ற கேள்வி பெரிதாக எழுகிறது.

pant

கிரிக்கெட் திறமைகளுக்கு பஞ்சமே இல்லாமல் விளங்கிவரும் இந்தியாவில் ஒரு தனிப்பட்ட வீரர்களுக்கு மட்டும் 20 கோடிக்குமேல் செலவிடுவது சரியானது தானா என ஐபிஎல் அணிகள் யோசிக்க வேண்டும்.

ஐபிஎல் வருடம் வாரியாக ரிஷப் பண்ட் ஆட்டம்!

1. 2016 - 10 போட்டிகள் - 198 ரன்கள் - 1 அரைசதம் - 24.75 சராசரி

2. 2017 - 14 போட்டிகள் - 366 ரன்கள் - 2 அரைசதம் - 26.14 சராசரி

3. 2018 - 14 போட்டிகள் - 684 ரன்கள் - 1 சதம், 5 அரைசதம் - 52.61 சராசரி

4. 2019 - 16 போட்டிகள் - 488 ரன்கள் - 3 அரைசதம் - 37.53 சராசரி

5. 2020 - 14 போட்டிகள் - 343 ரன்கள் - 1 அரைசதம் - 31.18 சராசரி

6. 2021 - 16 போட்டிகள் - 419 ரன்கள் - 3 அரைசதம் - 34.91 சராசரி

7. 2022 - 14 போட்டிகள் - 340 ரன்கள் - 0 அரைசதம் - 30.91 சராசரி

8. 2024 - 13 போட்டிகள் - 446 ரன்கள் - 3 அரைசதம் - 40.55 சராசரி

9. 2025* - 3 போட்டிகள் - 17 ரன்கள் - 0 அரைசதம் - 5.67 சராசரி