ரிங்கு சிங்
ரிங்கு சிங் file image
T20

“தோற்றாலும் நீ சிங்கம்தான்” - விடாமுயற்சியில் கெத்து காட்டும் ரிங்கு சிங்!

Jagadeesh Rg

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி தோற்றாலும் இறுதி வரை போராடி வெற்றிக்கு அருகே இருக்கும் மெல்லிசான கோடு வரை கொண்டுச் சென்ற ரிங்கு சிங் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா - லக்னோ அணிகளிடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே லக்னோ அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும என்ற நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீசியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

Rinku Singh

இதன்பின்னர் 177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் - வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடினர். பின்பு கொல்கத்தா ரன்களை சேர்த்தபோதும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை ஒவ்வொன்றாக இழந்தது. ஆனால் ஒருபக்கம் ரிங்கு சிங் பிரமாதமாக விளையாடிக்கொண்டு இருந்தார். இதனால் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 56 ரன்கள் தேவைப்பட்டது. அதில் நவீன் உல் ஹக் வீசிய 17வது ஓவரில் 5 ரன்களும், யாஷ் தாக்கூர் வீசிய 18வது ஓவரில் 10 ரன்களும் சேர்க்கப்பட்டன. இதனிடையே ஷர்துல் தாக்கூர் மற்றும் சுனில் நரைனும் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் நவீன் உல் ஹக் வீசிய 19வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி உட்பட ரிங்கு சிங் 20 ரன்களை விளாசி ரசிகர்களின் புருவங்களை உயரத்தினார்.

இதையடுத்து கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிபெற 21 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி 3 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 4வது பந்தில் ரிங்கு சிங் சிக்சர் அடிக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் 5வது பந்தில் ரிங்கு சிங் பவுண்டரியை மட்டுமே விளாசினார். பின்னர் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க, லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இம்முறையும் சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் 33 பந்துகளில் 67 ரன்களை விளாசினார். ரிங்கு சிங் மீண்டும் ஒரு முறை கொல்கத்தாவை வெற்றிப்பெறும் முனைப்பில் விடாமுயற்சியுடன் விளையாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Rinku Singh

போட்டி முடிந்து பேசிய லக்னோ கேப்டன் க்ருணால் பாண்ட்யா "இந்த சீசன் முழுவதுமே ரிங்கு சிங் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் களத்தில் இருந்தால் போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டிவிட்டார்" என பெருமையாக பேசினார். பேட்டிங்கில் மட்டுமல்ல பீல்டிங்கிலும் ரிங்கு சிங் அசத்தி வருகிறார். ஒரு முழுமையான Team Player ஆக செயல்படுவதால் ரிங்கு சிங் பலரது பாராட்டையும் பெற்று வருகிறார். ஏற்கெனவே இதே ரிங்கு சிங் குஜராத் அணிக்கு எதிரான போட்டியின்போது 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை கடைசி ஓவரில் விளாசி கொல்கத்தாவுக்கு வெற்றி தேடித் தந்தது மூலம் பிரபலமானார்.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த ரிங்கு சிங்குக்கு 25 வயதாகிறது. இவர், 2014ஆம் ஆண்டில்தான் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இவரது தந்தை, கேஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரிங்கு சிங் வறுமை காரணமாக சிறு வயதில் துப்புரவு தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பிறகு, கடும் முயற்சிகளை மேற்கொண்டு, 16 வயதுக்கு உட்பட்ட உத்தரபிரதேச அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி பலரது கவனத்தையும் ஈர்த்தார். பின்பு 2017ஆம் ஆண்டில் பஞ்சாப் அணி இவரை வாங்கியது. அதன்பிறகு, 2018ஆம் ஆண்டில் கொல்கத்தா அணி இவரை 80 லட்சம் கொடுத்து வாங்கியது.

Rinku Singh

பிசிசிஐ விதிமுறை தெரியாமல் அபுதாபி டி20 லீக்கில் பங்கேற்றதால் 3 மாதம் தடைவிதிக்கப்பட்டு பெரும் போராட்டத்துக்கு பின்பு கொல்கத்தா அணியில் இடம்பிடித்து அசத்தி வருகிறார். விரைவில் டி20 போட்டிகளில் நாம் ரிங்கு சிங்கை எதிர்பார்க்கலாம் என்பது ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது.