ipl
ipl PTI
T20

பிட்ச்-ல மேஜிக்கா.. இல்ல பவுலரோட ட்ரிக்ஸா! 2வது 10 ஓவர்களில் தலைகீழாக மாறும் ஐபிஎல் ஸ்கோர் போர்டு Ratio!

Rishan Vengai

பொதுவாக டி20 போட்டி என்பது பேட்ஸ்மேன்களுக்கான வடிவமாகவே பார்க்கப்படுகிறது. பேட்ஸ்மேனுக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி, அதில் அதிக ரன்களை பெற்று, பின்னர் அதை பந்துவீச்சாளர்களின் உதவியோடு எதிர்கொண்டு, ஏற்ற இறக்கத்தோடு சுவாரசியமான ஒரு முடிவை நோக்கி பயணிப்பது தான் டி20 வடிவத்தின் எழுதப்படாத விதியாகும். அதனால் தான் குறைவான ரன்கள் கொண்ட போட்டிகளை விட, டி20 வடிவத்தில் அதிக ரன்கள் உடைய போட்டிகளை நம்மால் அதிகமாக பார்க்க முடிகிறது.

Buttler

டி20 போட்டியை காண வரும் ரசிகர்கள் அதிகமாக இறுதிபந்துவரையிலான போட்டியை மட்டுமே எதிர்நோக்கி வருகிறார்கள். அவர்களுக்கு பந்தானது நான்கு திசைகளிலும் சிக்சர் பவுண்டரிகளுக்கு பறக்க வேண்டும். அதற்கு மாறாக ஒருவேளை பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுத்து குறைவான ரன்களில் ஆட்டம் முடிந்துவிட்டால், ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தின் மனநிலை போய்விடும். பின்னர் போட்டியை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையானது குறைந்துவிடும் என்பதாலே, மேலும் பேட்டிங்கிற்கு வலுசேர்க்கும் விதமாக பல புதிய விதிகளை இந்த வருட ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தி உள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

தொடக்க கால ஐபிஎல் தொடர்களில் இருந்து தற்போது மாறிய ரன் சேர்க்கும் விகிதம்!

2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரானது 15 சீசன்களை கடந்து தற்போது 16ஆவது சீசனில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது. ஆனால் இந்த 15 சீசன்களிலும் மக்களுக்கான ஆர்வத்தை குறைக்கும் விதமான போட்டிகளை அதிகம் வழங்காமல் பார்த்துக்கொண்டதற்கே நாம் ஐபிஎல் நிர்வாகத்தை பாராட்ட வேண்டும். அதனால் தான் தற்போதும் அதிக ரசிகர் பாரவையாளர்களை கொண்ட தொடராக ஐபிஎல் இருந்துவருகிறது.

Dhoni

2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 வடிவம் என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கே புதுமையான ஒரு அனுபவமாகவே இருந்தது. எந்த இடத்தில் டி20 வடிவம் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டது என்றால், உலகத்தின் வீழ்த்தவே முடியாது என்று நம்பப்பட்ட வலுவான அணிகள் கூட தோல்வியை சந்திக்க முடியும் என்ற வரையறையை ஏற்படுத்திய போது தான். இந்த அணிகள் எல்லாம் எளிதாக போட்டியை வென்றுவிடும் என்ற மனநிலையை மாற்றி, டி20 வடிவத்தில் நீங்கள் எப்பேற்பட்ட அணியாக இருந்தாலும் உங்களால் தோல்வியை சந்திக்க முடியும் என்ற நிலை உருவான போது, டி20ஆனது கிரிக்கெட் ரசிகர்களின் ஆஸ்தான கொண்டாட்ட வடிவமாக மாறியது.

2008 முதல் 2017 வரை :

2008 முதல் 2018 வரையிலான ஐபிஎல் போட்டிகளில் ரன்கள் சேர்க்கும் விகிதம் என்பது இறங்கு முகத்தில் இருந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. அதாவது முதல் 10 ஓவர்களில் விக்கெட்டுகளை அதிகம் விட்டுக்கொடுக்காமல் 70-80 ரன்களை சேர்த்து, பின்பு மீதி பாதியான அடுத்த 10 ஒவர்களில் 110-120 ரன்கள் அடிப்பது தான் வழக்கமாக இருந்தது.

IPL

அப்போதைய போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள், கடைசி 10 ஓவர்களில் தான் அதிரடியாக விளையாடி வெற்றிக்கான ரன்களை அதிகமாக பெற்று இலக்கை நிர்ணயித்தன. அதைத்தொடர்ந்து இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியும் அதே ஃபார்முலாவை பயன்படுத்தி கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்காக அதிரடி பேட்டங்கை வெளிப்படுத்தின. அப்போதெல்லாம் ரசிகர்களும் கடைசி 5 ஓவர்களில் மட்டும் எங்கும் அசையாமல் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர்.

2018 முதல் 2022 வரை :

ஆனால், 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் களத்திற்கு வந்த அணிகள், ஆடுகளத்திற்கு தகுந்தாற்போல் ஆட்டத்தை மாற்றிக்கொண்டன. அதன்படி ஒவ்வொரு அணியும் முதல் 6 ஓவர்களில், அதாவது பவர்பிளே ஓவர்களில் 60-70 ரன்களை தேடிக்கொள்ளும் முனைப்பில் விளையாடின.

IPL

முதல் பாதியில் 90-100 ரன்களை சேர்த்த அணி, பின்னர் பிற்பாதியில் அதே அளவிலான 90-100 ரன்களை பெற்று இலக்கை நிர்ணயித்தது. அப்போது வெற்றியின் இலக்கிற்காக எல்லா அணிகளும், போட்டியின் அனைத்து ஓவரிலும் அதிரடியான ஆட்டத்தை சீராக வெளிப்படுத்தி விளையாடியது.

முற்றிலும் மாறுபட்ட 2023 ஐபிஎல்:

மேற்கண்ட எல்லா ஐபிஎல் சீசனிற்கும் மாறாக தற்போது தொடங்கியிருக்கும் ஐபிஎல் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்யும் அணியானது முதல் 10 ஓவர்களில் 120-130 வரையிலான ரன்களை அதிரடியாக போர்டில் சேர்க்கின்றனர். ஆனால், அடுத்த பாதியில் அவர்களால் 70-80 ரன்களை மட்டுமே சேர்க்க முடிகிறது. இது ஒரு போட்டி இரண்டு போட்டியில் அல்லாமல் கடந்த 6 ஐபிஎல் போட்டிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.

IPL

இதற்கான காரணம் ஆடுகளத்தின் தன்மையா இல்லை பேட்டர்கள் மேல் இருக்கும் அழுத்தத்தின் காரணமாகவா என்பதெல்லாம் அடுத்தடுத்த போட்டிகள் தான் உறுதிசெய்யும். ஆனால் அதற்கெல்லாம் முன்னதாக ரன்கள் சேர்க்கும் விதம் தலைகீழாக மாறியதற்கான குறிப்பிட்ட சில காரணங்களை, நடந்து முடிந்த போட்டிகளில் இருந்து அறியலாம்.

அவற்றில் சில,

* போட்டியின் பிற்பாதியில் தான் அதிக விக்கெட்டுகள் விழுகின்றன. பேட்ஸ்மேன்கள் அடிக்க சென்று அவர்களது விக்கெட்டுகளை கிஃப்ட் செய்கின்றனர். விக்கெட்டுகள் விழும் இந்த இடத்தில் தான் ரன்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாக ஏற்படுகிறது.

IPL

* போட்டியின் பிற்பாதியில் ஆடுகளத்தில் பந்து நின்று வருகிறது. ஆடுகளத்தில் ஏற்படும் இந்த மாறுதலானது, மீடியம் வேகத்தில் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் சாதகமாக மாறுகிறது. மீடியம் வேகத்தில் அதிகம் உடம்புகளில் குட் லெந்துகளாக வீசப்படும் போது, பந்து நின்று வருவதால் ஆடுவதற்கு பேட்ஸ்மேன்களுக்கு இலகுவாக இல்லை.

Varun Chakravorty

* அதிக வேகம் வீசும் சுழற்பந்துவீச்சாளர்கள் பிற்பாதியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ரன்களை கட்டுக்குள் வைக்க சுழற்பந்துவீச்சாளர்கள் குட் லெந்த் பந்துகளை வேகமாக வீசுகின்றனர். அதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக உடம்புக்குள் வரும் குட் லெந்த் பந்துகளில், லெக் பிரண்ட் விக்கெட் மற்றும் போல்ட்டுகளில் வீழ்கின்றனர்.

sam curran

* இம்பேக்ட் பிளேயர் விதி என்பது இதற்கு மற்றொரு முக்கிய காரணமாக மாறியுள்ளது. பேட்ஸ்மேனுக்கு பதிலாக ஒவ்வொரு அணியும் ஆல்ரவுண்டர் அல்லது பந்துவீச்சாளர்களையே இம்பேக்ட் பிளேயராக அணிக்குள் சேர்த்துக்கொள்கின்றனர். அதனால் அணிகளுக்கு கூடுதலாக வெரைட்டி பந்துவீச்சு கிடைக்கிறது. இதன் காரணத்தாலும் பிற்பாதியில் ரன்களை எதிரணிகளால் எடுக்க முடியாமல் போகிறது.