Virat Kohli | Nicholas Pooran  | Ayush Badoni
Virat Kohli | Nicholas Pooran | Ayush Badoni  Shailendra Bhojak
T20

RCBvLSG | கோலி சிரிக்க, டூப்ளெஸ்ஸி சிரிக்க, ரசிகர்கள் சிரிக், போட்டியும் பெங்களூருக்கு சிரித்தது..!

ப.சூரியராஜ்

ஒருநாள் ஒரு ஆளை புலி துரத்த, அவன் ஓட ஒளிய இடமில்லாம சரிவைத்தாண்டி மேலே பாய்ஞ்சு மரத்தை பிடிச்சு இலையைவிட்டு கிளையவிட்டு கொடியை பிடிக்க, அந்த கொடி பாம்புனு தெரிய என்னடா இழவு வாழ்க்கைனு மேலே பார்த்தா அங்கே ஒரு தேன் கூடு இருக்க, அந்த தேன்கூட்ல இருந்து ஒரே ஒருதுளி தேன் ஒழுகி அவன் வாய் பக்கம் விழ, அப்போ அவ கண்ணை மூடி நாக்கை நீட்டி `ஆஹா'னு சொல்லும்போது நாக்குலேயே தேனீ கொட்டுச்சுன்னா எப்படியிருக்கும், நேத்து நடந்த ஆர்.சி.பி - எல்.எஸ்.ஜி மேட்ச் மாதிரி இருக்கும்.

King Kohli

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. கோலியும், டுப்ளெஸ்ஸியும் பெங்களூர் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் உனத்கட். முதல் ஓவரை அருமையாக வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார் லக்னோவின் பிரசன்னா. 2வது ஓவரை ஆவேசமாக வீசினார் ஆவேஷ். ஆனால், `ஆவ்ஸம்' என சொல்வது போல, கீப்பர் தலைக்கு மேல் ஒரு சிக்ஸர், எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி கோலியின் பேட்டிலிருந்து கிடைத்தது. 3வது ஓவரை வீசவந்தார் குர்ணால். மிட் ஆன் திசையில் ஒரு பவுண்டரியைத் தூக்கி அடித்தார் தூக்குதுரை டூப்ளெஸ்ஸி. மீண்டும் வந்தார் ஆவேஷ் கான். வெச்சி செய்தார் கோலி. `எனக்குலாம் ஜாலியாதான் இருக்கு' என லக்னோ ரசிகர்களே சந்தோஷப்பட்டார்கள். டீப் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி, டீப் பாயின்ட்டில் ஒரு பவுண்டரி என டீப்பாக இறங்கி அடித்தார் கோலி.

`ஆளவந்தான்' சகோதர்களில் நந்தக்குமாரான பாண்டியாவையும், ஒரு சிக்ஸை அடித்து கிளப்பினார் கோலி. ஓவரின் கடைசி பந்தை வீசவந்தார் மார்க் வுட். பந்து புயல் வேகத்தில் வந்தாலும், நின்று பொரிக்கடலை சாப்பிடுவது போல் அசால்டாக ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடித்தார் கோலி. ஆர்ச்சர், வுட் என உலகத்தர பவுலர்களை எல்லாம் நம் உள்ளூர் வாத்தியாரிடம் செம அடி வெளுக்கிறார். பவர் ப்ளேயின் முடிவில், 56/0 என அற்புதமாக ஆடிக்கொண்டிருந்தது ஆர்.சி.பி. 7வது ஓவரை வீசவந்தார் பிஷ்னோய். வெறும் 6 ரன்கள். குர்ணால் வீசிய 8வது ஓவரிலும் 6 ரன்கள். அட, மீண்டும் பிஷ்னோய் வீசிய 9வது ஓவரில் 6 ரன்கள். பந்தை ஸ்டெம்ப் பக்கம் திருப்பி, மேட்சை தன் பக்கம் திருப்ப முயற்சித்தது லக்னோ. 3 ஓவரும் திரும்பிய பந்தில் அடி வாங்கிய கோலி, 4வது ஓவரில் திருப்பி அடிக்கத் துவங்கினார். குர்ணால் வீசிய 10வது ஓவரின் 2வது பந்து, லாங் ஆன் திசையில் ஒரு பெரிய சிக்ஸர். டூப்ளெஸ்ஸி தன் பங்குக்கு ஒரு பவுண்டரி. 10 ஓவர் முடிவில் 87/0 என லேசாக தடுமாறியிருந்தது. சின்னசாமி மைதானத்தில் 200 என்பதே சின்ன ஸ்கோர் என்பதால், வேகமெடுக்க வேண்டிய நேரம் வந்தது. பிஷ்னோயின் 11வது ஓவரில், பேக்வார்டு பாயின்ட்டில் ஒரு பவுண்டரி அடித்தார் பிஷ்னோய்.

Virat Kohli | Faf du Plessis

அடுத்த ஓவரை வீசவந்தார் லக்னோவின் லாலேட்டன் அமித் மிஷ்ரா. அவர் வீசிய அரைக்குழி பந்தை, தூக்கி கடாச நினைத்து ஸ்டாய்னிஸிடம் கேட்ச் ஆனார் கோலி. மேக்ஸ்வெல் உள்ளே வந்தார். கடைசியாக, மேக்ஸ்வெல் எப்போது நன்றாக ஆடினார் என்பது ஆர்.சி.பி ரசிகர்களுக்கே மறந்துவிட்டது. வுட் வீசிய 13வது ஓவரில், லெக் பைஸில் மட்டும் 5 ரன்கள் வந்து சேர்ந்தன. மீண்டும் மிஸ்ரா. டீப் பாயின்ட்டில் ஒரு பவுண்டரி, லாங் ஆனில் ஒரு சிக்ஸரை வெளுத்தார் மேக்ஸ்வெல். 15வது ஓவரை வீசவந்தார் குட்டி வாண்டு பிஷ்னோய். டூப்ளெஸ்ஸி இரண்டு சிக்ஸர்கள், மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர் என பிஷ்னோய், சிக்ஸ் நோயால் பாதிக்கபட்டார். 15 ஓவர் முடிவில் 137/1 என ஆக்ஸிலேட்டரில் கால் வைத்திருந்தது ஆர்.சி.பி.

அதிவேக பந்து வீச்சாளர் வுட் வீசிய 16வது ஓவரில், லாங் ஆஃபில் ஒரு சிக்ஸரை அடித்த டூப்ளெஸ்ஸி, தனது அரை சதத்தையும் நிறைவு செய்தார். கோலி, டூப்ளெஸ்ஸி இருவரும் அரைசதம் கடந்ததில், ஆர்.சி.பி செம்ம ஹேப்பி அண்ணாச்சி. ஆவேஷ் வீசிய 17வது ஓவரில் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸர், எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி என பறக்கவிட்டார் மேக்ஸ்வெல். 18வது ஓவரில் உனத்கட்டின் முதல் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தர் மேக்ஸ்வெல். அடுத்த பந்தில் கொடுத்த கேட்சை, டீப் தேர்டில் இருந்த குர்ணால் கோட்டை விட்டார். டூப்ளெஸ்ஸியோ, `சொய்ங்... சொய்ங்...' என இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். கடைசிப்பந்தில், போனஸாக ஒரு பவுண்டரியும். ஒரே ஓவரில் 23 ரன்களை அள்ளி கொடுத்தார் உனத்கட். 19வது ஓவரை வீசினார் ஆவேஷ். முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்ட மேக்ஸ்வெல், 24 பந்துகளில் அரைசதமும் அடித்தார். வுட் வீசிய கடைசி ஓவரில், ஒரு சிக்ஸரையும் அடித்து, க்ளீன் போல்டும் ஆனார் மேக்ஸ்வெல். 20 ஓவர் முடிவில் 212/2 என வேற லெவல் ஸ்கோரை எட்டியிருந்தது ஆர்.சி.பி. கோலி, க்ளென், ஃபாப் எனும் கே.ஜி.எஃப் கூட்டணியைப் பார்த்து பெங்களூர் வாலாக்கள், ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். `அவன் குறுக்கே மட்டும் போயிடாதீங்க சார்' என தனியாக அமர்ந்து வசனம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

Glenn Maxwell

213 ரன்கள் இலக்கு. இதை அடைய குருட்டுத்தனமான நம்பிக்கையும், முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேண்டும். களமிறங்கியது மேயர்ஸ் - கே.எல்.ராகுல் ஜோடி. அனுஜ் ராவத்துக்கு பதில், கரண் சர்மாவை இம்பாக்ட் வீரராக அழைத்து வந்தது ஆர்.சி.பி. முதல் ஓவரை வீசினார் சிராஜ். 3வது பந்திலேயே அதிரடிக்கார மேயர்ஸ் வீழ்ந்தார். 2வது ஓவரை வீசிய வில்லி, 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மீண்டும் வந்த சிராஜ், முதல் பந்தில் ராகுலுக்கு ஒரு பவுண்டரியைக் கொடுத்ததோடு சரி. இந்த ஓவரிலும் மொத்தம் 6 ரன்கள் மட்டுமே. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.பி.எல் ஆட வந்திருக்கும் பார்னல், 4வது ஓவரை வீசினார். ஓவரின் 3வது பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்ட ஹூடா, 4வது பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த வந்து குர்ணாலும், அதே ஓவரின் கடைசிப்பந்தில் அதே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து கிளம்பினார். கலக்கினார் பார்னெல். வில்லி வீசிய 5வது ஓவர், பார்னெல் வீசிய 6வது ஓவர், இரண்டிலும் ஒரு பவுண்டரியை அடித்தார் ஸ்டாய்னிஸ். பவர்ப்ளேயின் முடிவில் 37/3 என லக்னோ மைதானத்தில் மல்லாக்கப் படுத்திருந்தது. வில்லி வீசிய 7வது ஓவரிலும் 6 ரன்கள் மட்டுமே.

கடைசியாக, 8வது ஓவரை வீசவந்தார் ஹர்ஷல். `என்ன இவ்ளோ மெதுவா வர்றீங்க' என கடுப்பான ஸ்டாய்னிஸ், முதல் பந்தில் ஒரு சிக்ஸர், அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரி அடித்து ஆசுவாசமானார். இன்னொரு பக்கம், கர்ண் சர்மாவையும் ஸ்டாய்னிஸ் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என அடித்து வெளுக்க, உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார் ஹர்ஷல். சபாஷ் அகமதின் 10வது ஓவரில், லாங் ஆஃபில் ஒரு சிக்ஸர், மாட்டு மூலையில் ஒரு சிக்ஸர். தனது அரை சதத்தையும் கடந்து கெத்துக் காட்டினார் ஸ்டாய்னிஸ். 10வது ஓவர் முடிவில் 91/3 என மல்லாக்கப் படுத்திருந்த லக்னோ எழுந்து அமர்ந்தது.

Marcus Stoinis

11வது ஓவரின் 2வது பந்தில் கர்ண் சர்மாவை மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்த ஸ்டாய்னிஸ், 4வது பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அமர்க்களமாக இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அடுத்து களமிறங்கிய பூரன், அதே ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டு ஆட்டத்துக்குள் வந்தார். ஸ்டிரைக் ரேட் முக்கியம் இல்ல நண்பா எனும் திருவாக்கியத்தை உதிர்க்கும் கே.எல்.ராகுல், 100-க்கும் கம்மியான ஸ்டிரைக் ரேட்டில் கூச்சமே இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தார். `நீ டொக்கு டொக்குனு கட்டையை போடுறியே, அது பந்து இல்ல. என்னோட நெஞ்சு' என கவுதம் காம்பீரே கடுப்பானார். மனமுடைந்த ராகுல், அடுத்த ஓவரிலேயே தன் விக்கெட்டை கொடுத்துவிட்டு, பெவிலியனுக்குச் சென்றார். ராகுல் அவுட் ஆகியதில், ஆர்.சி.பி வீரர்களும் ரசிகர்களும் வருத்தமடைந்தார்கள். பதோனி உள்ளே வந்தார். மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி பறந்தது. சிராஜ் வீசிய இந்த ஓவரின் கடைசிப்பந்தில் பூரனும் ஒரு பவுண்டரியை பறக்கவிட்டார்.

13வது ஓவரை வீசினார் கர்ண். பதோனி ஒரு பவுண்டரியும், பூரன் இரண்டு சிக்ஸரும் பூரனமாய் அடித்தார். அடுத்து வந்த ஹர்ஷல் படேல், முதல் பந்திலேயே ஒரு சிக்ஸரைக் கொடுத்து பூரனிடம் சரண்டர் ஆனார். ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என முகத்தில் பூரான் விட்டார் பூரன். முதல் ஓவரில் ஊமைக்குத்து வாங்கியிருந்த ஹர்ஷலுக்கு, இந்த ஓவரில் வெளிக்காயமே தெரிந்தது. பார்னல், 15வது ஓவரை வீச வந்தார். 2வது பந்து பவுண்டரிக்கு பறக்கவிட்டார் பூரன். 5வது பந்து, லாங் ஆனில் சிக்ஸருக்குப் பறந்தது. 15 பந்துகளில் அதிவேக அரைசதத்தை எடுத்து முடித்திருந்தார் நிக்கோலஸ் பூரன். அதே ஒவரின் கடைசிப்பந்து, பவுண்டரிக்கும் பறந்தது. 15 ஓவர்கள் முடிவில் 171/5 என மைதானத்தில் நடுவில் அமர்ந்திருந்த லக்னோ எழுந்து நின்றது! 30 பந்துகளில் 42 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் 5 விக்கெட்டுகள்.

Nicholas Pooran

16வது ஓவரை வீசினார் வில்லி. பதோனி ஒரு பவுண்டரியும், பூரன் ஒரு சிக்ஸரும் பறக்கவிட்டார். சிராஜ் வீசிய 17வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அதைவிட முக்கியமாக பூரனின் விக்கெட்டயும் தூக்கினார். டாஸாக வீசப்பட்ட பந்தை டீப் பேக்வார்டு ஸ்கொயரில் தூக்கிவிட்டு கேட்ச் ஆனார் பூரன். `நம்பர் ஒன் டி20 பவுலர்' என காலரைத் தூக்கிவிட்டார் சிராஜ். 18வது ஓவரை வீசவந்தார் ஹர்ஷல். உனத்கட்டின் பேட்டில் பட்ட பந்து, பவுண்டரிக்குள் போய் விழுந்தது. 12 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே தேவை. 19வது ஓவரை வீசவந்த பார்னெல், முதல் இரண்டு பந்துகளை அகலப்பந்தாக வீசி அனாமத்தாக 2 ரன்களைக் கொடுத்தார். ஓவரின் 3வது பந்தை அழகாக பவுண்டரிக்கு தட்டிவிட்டார் பதோனி. அடுத்த பந்தில், அட்டகாசமான ஒரு ஸ்கூப் ஷாட் ஆட, பந்து பவுண்டரியைத் தாண்டி விழுந்தது. அம்பயர் இரண்டு கைகளையும் தூக்கி சிக்ஸர் கொடுப்பார் எனப் பார்த்தால், ஒற்றைக் கையைத் தூக்கி அவுட் கொடுத்தார். முரட்டு ட்விஸ்ட்! ஸ்கூப் ஷாட் ஆடிய பதோனியின் பேட், ஸ்டெம்ப்பை தட்டிவிட்டது. மேட்ச் இன்னும் முடியவில்லை. கடைசி நம்பிக்கையான பேட்ஸ்மேனான பதோனியும் களத்தில் இல்லை.

Ravi Bishnoi

8 பந்துகளில் 7 ரன்கள் தேவை. என்ன நடக்கப்போகிறதோ எனும் பதட்டத்தில் விரல் நகங்களைக் கடித்துத் துப்பி, விரல்களையும் கடிக்கத் துவங்கிவிட்டார்கள் ரசிகர்கள். கடைசி இரண்டு பந்துகளில் இரன்டு சிங்கிள்கள். 6 பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி, பந்து வீச வந்தார் ஹர்ஷல். முதல் பந்து சிங்கிளைத் தட்டினார் உனத்கட். இரண்டாவது பந்தில், க்ளீன் போல்டானார் மார்க் வுட். 3வது பந்தில், பாயின்ட்டில் தட்டிவிட்டு இரண்டு ரன்கள் எடுத்தார் பிஷ்னோய். லக்னோ வீரர்கள் உயிரைக் கொடுத்து ஓடினார்கள். 4வது பந்தில் மற்றொரு சிங்கிள். ஸ்கோர் சமன் செய்தனர். 2 பந்துகளில் 1 ரன் எடுத்தால் வெற்றி. இந்தப்பக்கம் 2 விக்கெட் எடுத்தால் வெற்றி. 5வது பந்தில், லாங் ஆன் திசையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் உனத்கட். டூப்ளெஸ்ஸி அற்புதமான கேட்சைப் பிடித்தார். கடைசிப்பந்தை வீச வந்த ஹர்ஷல், மான்கட் செய்ய முயற்சி செய்து கோட்டை விட்டார்.

க்ரீஸிலிருந்து வெளியே சென்றிருந்த பிஷ்னோய், `என்னணே பந்து வீசலையா' என திரும்பிப் பார்த்து குசலம் விசாரித்துவிட்டு வருமளவிற்கு நேரம் இருந்தது. பிரம்மாஸ்திரமும் போச்சு எனும் சோகத்தில் கடைசிப்பந்தை வீசினார் ஹர்ஷல், ஆவேஷ் பேட்டை சுழற்ற, பந்து நேராக கீப்பரின் கைக்குச் சென்றது. பிடித்து ஸ்டெம்ப்பில் அடித்திருந்தால் சூப்பர் ஓவர். ஆனால், மீண்டும் ஒரு ஓவர் தன்னால் கீப்பிங் செய்ய முடியாது என்றோ, மீண்டும் பூரனின் பேட்டிங்கை பார்க்க முடியாது என்றோ, பெங்களூர் டிராஃபிக்கில் சிக்கிவிடுவோம் என்றோ, எதையோ நினைத்து பதட்டத்தில் பந்தை சரியாக பிடிக்காமல் டீ ஆற்றிய டி.கே, கடைசியில் பந்தைப் பிடித்து எறிய, அதுவும் ஸ்டெம்ப்பில் படாமல் பவுலரின் கைக்கு வந்து சிக்கியது. அதற்குள் ஒரு ரன்னை ஒடிவிட்டார்கள் லக்னோ வீரர்கள்! ஆர்.சி.பி மேட்ச் கடைசியாக ஆர்.சி.பி மேட்ச் போலவே முடிந்தது. ரௌடிகளிடம் ஆட்டோவைப் பறிகொடுத்த பாட்ஷா ரஜினியைப் போல், சிறு புன்னகையை உதிர்த்தார் கோலி. டூப்ளெஸ்ஸியும் அப்படியே சிரித்தார். ஆட்டமும் சிரிப்பாய் சிரித்தது...