Chennai Super kings Players
Chennai Super kings Players PTI
T20

RCBvCSK |சென்னை எவ்வளவோ போராடியும், இறுதியில் தோற்றுப்போன பெங்களூரு..!

ப.சூரியராஜ்

அன்புடென்னில் ராஜஸ்தானிடம் தோற்ற வருத்தத்தில் சென்னை அணி அமைதியாகவே சின்னசாமி வந்திறங்கியது. டெல்லி அணியை தோற்கடித்த மிதப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிதான், மைதானத்தில் செருமிக்கொண்டு இருந்தது. `ஏன்பா இருமுற?' எனக் கேட்டால், `இருமலடா, உருமுறேன்' என நெஞ்சை நிமிர்த்தியது. மைதானத்தில் குவிந்திருந்த இரு ரசிகர்களும், `ஆர்.சி.பி...', `சி.எஸ்.கே...' என மாறி மாறி அலறிக்கொண்டிருந்தார்கள். டாஸ் வென்ற எல்லைச்சாமி டூப்ளெஸ்ஸி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். ருத்துவும் கான்வேயும் சென்னையின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் சிராஜ். ஓவரின் வெறும் 3 ரன்கள் மட்டுமே.

Devon Conway | Ajinkya Rahane

2வது ஓவரை வீசவந்தார் பார்னெல். ஓவரின் 3வது பந்து, மிட் விக்கெட் திசையில் பவுண்டரிக்கு விளாசினார் கான்வே. கடைசிப்பந்தை, ஃபைன் லெக் திசையில் சிக்ஸருக்கு ஸ்கூப் செய்து ஆச்சரியமூட்டினார் கான்வே. சிராஜ் வீசிய 3வது ஓவரின் 2வது பந்தை தூக்கியடித்து பார்னெலிடம் கேட்சாகி கிளம்பினார் ருத்து. இம்முறையும் ராக்கெட் சீறிப்பாயவில்லை. இம்முறையும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து, 1 விக்கெட்டையும் கழட்டியிருந்தார் சிராஜ். 4வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பார்னெல்.

உள்ளூர் ஆட்டக்காரர் வைசாக் விஜயக்குமாரை அழைத்து வந்தார் டூப்ளெஸ்ஸி. ஓவரின் முதல் பந்து, ஸ்கூப் ஷாட்டில் ஒரு பவுண்டரியைத் தட்டினார் கான்வே. 3வது பந்தில், ஒரு பிரம்மாண்ட சிக்ஸரைப் பறக்கவிட்டார் ரஹானே. பார்னெலின் 6வது ஓவரில், இரண்டு பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் பறக்கவிட்டார் ரஹானே. பவர்ப்ளேயின் கடைசி இரண்டு ஓவர்களை வெளுத்துவாங்கிய சென்னை அணி, 53/1 என கௌரவமான ஸ்கோரோடு பவர்ப்ளேயை முடித்தது.

Devon Conway

7வது ஓவரை வீசவந்தார் மேக்ஸ்வெல். லாங் ஆனில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் கான்வே. 8வது ஓவரில், 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ஹசரங்கா. 9வது வீசவந்தார் ஹர்ஷல் படேல். 2வது பந்தில், மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸ் அடித்தார் கான்வே. `நம்ம கான்வேக்கு என்னதான் ஆச்சு?' என சென்னை ரசிகர்களே மிரண்டுபோனார்கள். சின்னசாமி மைதானத்தில் இடியாய் இறக்கினார். அதே ஓவரின் கடைசிப்பந்தில், ரஹானே ஒரு பவுண்டரியும் வெளுத்தார். ஹசரங்கா வீசிய 10வது ஓவரின் முதல் பந்து கான்வேயின் பேட்டிலிருந்து சிக்ஸருக்கு பறந்தது. ஓவரின் 3வது பந்தை தூக்கியடிக்க முயன்றார் ரஹானே, ஸ்டெம்பைத் தட்டி தூக்கினார் ஹசரங்கா.

Ajinkya Rahane

20 பந்துகளில் 37 ரன்கள் அடித்து வெளியேறினார் அஜிங்க்யா. அதே ஓவரில், தனது அரைசதத்தை நிறைவு செய்த கான்வே, ஒரு பவுண்டரியைத் தட்டி ஓவரை முடித்தார். 10 ஓவர் முடிவில் 97/2 என கெத்தாகவே இருந்தது சி.எஸ்.கே. `அம்புட்டுதேன்! இனி மிடில் ஆர்டர் மிடியல ஆர்டர் மாதிரி ஆடுவாய்ங்க. பார்ப்போம்' என எதற்கும் தயாராகவே இருந்தார்கள் சென்னை ரசிகர்கள். மீண்டும் வந்தார் மேக்ஸ்வெல், ஓவரின் 4வது பந்து, பெரிய சிக்ஸ் ஒன்றை அடித்தார் தூபே. 12 ஓவரில் வைசாக் விஜயக்குமாரை வீசிய முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு துரத்திவிட்டர கான்வே. கடைசிப்பந்து, சிக்ஸருக்கே தூக்கி கடாசினார்.

மீண்டும் வந்தார் ஹர்ஷல். மறுபடியும் பெரிய சிக்ஸ் ஒன்றை அடித்தார் தூபே. `வரான், பெரிய சிக்ஸ் அடிக்குறான், ஒரு லட்சம் வாங்குறான். ரிப்பீட்' என சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீண்டும் சிராஜை அழைத்து, `கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்' என பந்தைக் கொடுத்தார். ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என வெளுத்துவிட்டார் தூபே. 15வது ஓவரை வீச விஜயக்குமாரை வந்தார். இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியைக் கட்டி கொடுத்தார் கான்வே. ஹர்ஷல் வீசிய 16வது ஓவரில், மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார் தூபே. அந்த ஓவரின் 4வது பந்தில், டிப்பாகி வந்த யார்க்கரை அடிக்கப்போய் க்ளீன் போல்டானார் கான்வே. 16 ஓவர் முடிவில், 172/3 என அசத்தலான ஸ்கோரை எட்டியிருந்தது சென்னை.

Devon Conway | Shivam Dube

பார்னெல் வீசிய 17வது ஓவரின் முதல் பந்து, சிக்ஸர் அடித்து 25 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார் தூபே. அப்படியே, 3வது பந்தில் விக்கெட். டீப் மிட்விக்கெட்டில் எல்லைக் கோட்டின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த சிராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஓவரின் கடைசிப்பந்தில், நேருக்கு நேர் ஒரு சிக்ஸ்ரைப் பறக்கவிட்டார் மொயின் அலி. 18வது ஓவரை வீசவந்த விஜயக்குமாரை, ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என வெச்சி செய்தார் ராயுடு. 4வது பந்தில், ராயுடுவை பதிலுக்கு செய்தார் விஜயக்குமார். கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் அம்பத்தி. 18 ஓவர் முடிவில், 200 ரன்களை எட்டியிருந்தது சென்னை அணி. இந்த மைதானத்தில் 250 ரன்னே சேஸ் செய்யக்கூடியதுதான் என்பதை உணர்ந்திருந்த சென்னை அணி, அடுத்த 2 ஓவர்களில் முடிந்தளவிற்கு ரன்களை அள்ள வேண்டியதுதான் என உத்வேகமானது.

சிராஜ் வீசிய 19வது ஓவரின் முதல் பந்து, சிக்ஸருக்கு பறக்கவிட்டார் மொயின் அலி. அவ்வளவுதான் வெறும் 10 ரன்கள் மட்டுமே கிடைத்தது இந்த ஓவரில். கடைசி ஓவரை வீசவந்தார் ஹர்ஷல். ஓவரின் 2வது பந்து, முதல் பீமரை வீசினார். மாற்றாக வீசபட்ட பந்தில், ஒரு லெக் பைஸ். பிறகு ஒரு அகலப்பந்து. அடுத்து, இடுப்புக்கு மேல் மற்றொரு ஃபுல் டாஸ். தற்காலிக ஆர்.சி.பி கேப்டன் மேக்ஸ்வெல்லை அழைத்து, விதிகளை சொல்லி வேறொரு பவுலரை பந்துவீச சொன்னார். `4 பந்துதானே. நானே போட்டுவிடுறேன்' என பந்தை வாங்கினார் மேக்ஸ்வெல். ஹசரங்கா பாவமாய் நின்றுக்கொண்டிருந்தார். 3வது பந்து, லாங் ஆனில் ஒரு சிக்ஸர் அடித்தார் ஜடேஜா. அடுத்த பந்து, பிரபுதேசாயிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, மொத்த மைதானமும் அலறியது. எம்.சின்னசாமி மைதானம், எம்.ஏ.சிதம்பரம் மைதானமாக மாறியது. செல்போனின் டார்ச் அடித்து சிங்கத்தை வரவேற்றார்கள். சிங்கிள் மட்டுமே தட்டினார் தோனி. 20 ஓவர் முடிவில், 226/6 என இலக்கை நிர்ணயித்தது சென்னை அணி.

Virat Kohli | Akash Singh

ஆகாஷ் சிங்கை, அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக இம்பாக்ட் வீரராக அழைத்துவந்தார் தோனி. கோலியும், டூப்ளெஸ்ஸியும் பெங்களூரின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் ஆகாஷ் சிங். ஓவரின் 2வது பந்து, பவுண்டரிக்கு விரட்டினார் கோலி. `அடைமழை அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. உடம்பை இரும்பாக்கிக்கோடா கிரிகாலா' என சென்னை ரசிகர்கள் தயாரானர்கள். ஆனால், ஓவரின் 4வது பந்திலேயே கோலி அவுட். பந்து கோலியின் பேட்டில் பட்டு, பேடில் பட்டு, தரையில் பட்டு, உருண்டு போய் ஸ்டெம்பில் அடித்தது. ஓவரின் கடைசிப்பந்தை, தூக்கியடித்தார் லோம்ரோர். கேட்சைக் கோட்டை விட்டார் தீக்‌ஷானா. சென்னை ரசிகர்கள், ஆத்திரத்தை அடக்கிக்கொண்டார்கள்.

2வது ஓவரை வீசவந்தார் துஷார். 2வது பந்தில், டூப்ளெஸ்ஸியின் கேட்சை தவறவிட்டார் தோனி. தீக்‌ஷானாவுக்கு உள்ளுக்குள் குஷி! பந்து பவுண்டரியில் போய் விழுந்தது. ஓவரின் கடைசிப்பந்தில், லோம்ரோரின் விக்கெட்டைக் கழட்டினார் துஷார். கவர் பாயின்ட்டில் கேட்ச் எடுத்தார் ருத்து. டூப்ளெஸ்ஸியும், மேக்ஸ்வெல்லும் களத்தில் இருந்தார்கள். அடுத்த நடந்தது எல்லாம், கிரிக்கெட் வீடியோ கேம்களின் லைவ் ஆக்‌ஷன் வடிவம்தான். ஆகாஷ் வீசிய 3வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் மேக்ஸ்வெல். துஷாரின் 4வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என வெளுத்துக்கட்டினார் டூப்ளெஸ்ஸி. ஆகாஷ் வீசிய 5வது ஓவரில், ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரி என சின்னசாமியில் மட்டையை சுழற்றினார் எல்லைச்சாமி. தீக்‌ஷானாவிடம் பந்தைக் கொடுத்தார் தோனி. ஓவரின், 4வது பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு அதற்குள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் நிறைவு செய்தனர். கடைசிப்பந்தில், மற்றுமொரு சிக்ஸர். பவர்ப்ளேயின் முடிவில் 75/2 என வெறித்தனமாக ஆடிக்கொண்டிருந்தது ஆர்.சி.பி.

Faf du Plessis | Glenn Maxwel

7வது ஓவரை வீசிய ஜடேஜா, பவுண்டரி ஏதும் கொடுக்காமல் ஓவரை முடித்ததே ஆச்சரியமாக இருந்தது. `குட்டி மலிங்கா' வீசிய பதீரனா வீசிய 8வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர், என பறக்கவிட்டார் மேக்ஸ்வெல். ஜடேஜாவின் 9வது ஒவரில் லாங் ஆனில் ஒரு சிக்ஸர் அடித்தார் மேக்ஸ்வெல். 5வது பந்து, லாங் ஆஃப் பவுண்டரியை நோக்கிப் பறந்தது. தவ்வி பிடித்து 5 ரன்களைத் தடுத்தார் ரஹானே. அந்த ஓவரில், 23 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார் டூப்ளெஸ்ஸி. பதீரனாவின் 10வது ஓவரில், 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என வெளுத்தார் மேக்ஸ்வெல். அவரும் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். 10 ஓவர் முடிவில் 121/2 என கெத்து காட்டியது ஆர்.சி.பி. இப்படியே இருவரும் ஆடினால், 16,17 ஓவரிலேயே மேட்ச் முடிந்துவிடும் என ஆர்.சி.பி ரசிகர்கள் கனவு காணத் துவங்கினார்கள். 60 பந்துகளில் 106 ரன்கள் தேவை.

தீக்‌ஷானா வீசிய 11வது ஓவரில், டூப்ளெஸ்ஸி கொடுத்த கேட்சை மறுபடியும் தவறவிட்டார் தீக்‌ஷானா. `பந்து வீசுறத தவிர வேற எதுவுமே தெரியாதா' என பாவமாய் கேட்டார்கள் சென்னை ரசிகர்கள். அடுத்த பந்திலேயே, ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸரை பறக்கவிட்டார் மேக்ஸ்வெல். ஜடேஜா வீசிய 12வது ஓவரில், ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் மேக்ஸ்வெல். தீக்‌ஷானாவின் 13வது ஓவரில், மட்டையை மடக்கி சுற்றினார் மேக்ஸ்வெல். பந்து மேகத்தைத் தொட்டுவந்து, தோனியில் க்ளவுக்குள் சிக்கியது. நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் சென்னை ரசிகர்கள். அடுத்து வந்த சபாஷ் அகமது, மொயின் அலியின் 14வது ஓவரில், ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். மீண்டும் கலங்கினர். ஓவரின் 4வது பந்தில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்ட டூப்ளெஸ்ஸி, கடைசிப்பந்தில், மேக்ஸ்வெல்லைப் போலவே பந்தைத் தூக்கியடித்து தோனியிடம் கேட்சாகி நடையைக்கட்டினார். இரண்டு அற்புதமான இன்னிங்ஸ்களும் அடுத்தடுத்த ஓவர்களில் முடிவுக்கு வந்தது.

Glenn Maxwell

ஜடேஜா வீசிய 15வது ஓவரில், ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் டி.கே. 15 ஓவர் முடிவில் 169/4 என விரட்டிவந்தது ஆர்.சி.பி. 30 பந்துகளில் 58 ரன்கள் என தொட்டுவிடக்கூடிய இலக்குதான். தீக்‌ஷானாவின் 16வது ஓவரில், ஒரு பவுண்டரியைத் தட்டினார் தினேஷ் கார்த்திக். துஷாரின் 17வது ஒவரின் முதல் பந்தில் ஒரு பவுண்டரியை விளாசி பயம் காட்டினார் டி.கே. அவரும் ஒரு கேட்ச் கொடுக்க, அதை தவறவிட்டது நம்ம ருத்து. அடுத்த பந்திலேயே ஒரு பவுண்டரி. பி.பி. மாத்திரையைத் தேடினார்கள் சென்னை ரசிகர்கள். அடுத்த பந்திலேயே, டீப் மிட் விக்கெட்டில் தூக்கியடித்து தீக்‌ஷானாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் டி.கே. தான் கேட்ச் பிடித்ததை தீக்‌ஷானாவால் நம்பவே முடியவில்லை. 18 பந்துகளில் 35 ரன்கள் தேவை.

பதீரனா விசிய 18வது ஓஅரின் முதல் பந்து, சபாஷ் அகமதின் விக்கெட்டை கழட்டினார். இம்முறை கேட்ச் பிடித்தது நம்ம ருத்து. 18வது ஒவரில் 1 விக்கெட்டையும் கழட்டி 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பதீரனா. துஷார் வீசிய 19வது ஓவரில், பார்னெலின் விக்கெட் காலி. அழகாய் கேட்ச் எடுத்தார் தூபே. ஓவரின் 4வது பந்தை, பிரபுதேசாய் சிக்ஸ் அடித்து `கெதக்' என இருந்தது சென்னை ரசிகர்களுக்கு. கடைசி ஓவர் வீசவந்தார் பதீரனா. 6 பந்துகளில் 19 ரன்கள் தேவை. முதல் பந்தில், பிரபுதேசாய் ஒரு சிங்கிள். 2வது பந்தில், ஹசரங்கா ஒரு சிங்கிள். 3வது பந்தை, ரிவர்ஸ் ஸ்கூப்பில் சிக்ஸருக்கு பறக்கவைத்தார் பிரபுதேசாய். அடுத்த பந்து, டாட். 2 பந்துகளில் 11 ரன்கள் தேவை. 5வது பந்தில், 2 ரன்கள் மட்டுமே. கடைசிப்பந்தை, பிரபுதேசாய் தூக்கி அடிக்க, ஜடேஜா கேட்சைப் பிடித்த்து மேட்சை முடித்தார். ரஹானே, பாய்ந்து தடுத்த 5 ரன்கள் கிட்டதட்ட மேட்சை மாற்றிவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 33 சிக்ஸர்கள் விளாசின. அதிக சிக்ஸர்கள் அடிக்கபட்ட ஐ.பி.எல் மேட்ச் எனும் சாதனையை சமன் செய்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது சி.எஸ்.கே. 45 பந்துகளில் 83 ரன்கள் விளாசிய கான்வே, ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கபட்டார்.