ஜிதேஷ் சர்மா ipl
T20

’கோலிக்காக கோப்பை வெல்வேன்..’ அன்று சொன்ன வார்த்தையை காப்பாற்றிய ஜிதேஷ் சர்மா! வரலாறு படைத்த RCB!

இன்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 228 ரன்களை சேஸ்செய்து சாதனை படைத்துள்ளது ஆர்சிபி அணி.

Rishan Vengai

ஐபிஎல் வரலாற்றில் சில போட்டிகள் தான், இவரின் பேட்டிங்கை பற்றி பேசலாமா, அற்புதமான பவுலிங் பற்றி பேசலாமா, இல்லை இவருடைய ஃபீல்டிங், இல்லை இல்லை இவருடைய Game Sprit பற்றி பேசலாமா என பல சுவாரசியங்களை கொடுத்து ’இதான் டா உண்மையான ஐபிஎல் போட்டி’ என்ற மன நிறைவை கொடுக்கும். அப்படி ஒரு போட்டியை தான் இன்றைய ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகள் விருந்தாக படைத்தன.

கோலிக்காக அன்று பேசிய ஜிதேஷ் சர்மா..

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்திருந்தால் கூட ஒரு உலகக்கோப்பை வெல்வது என்பது சச்சின் டெண்டுல்கர் என்ற ஜாம்பவானுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது.

அப்போது சச்சினுக்காக கோப்பை வென்று கொடுப்போம் என கூறிய தோனி தலைமையிலான அணி 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்றுகொடுத்து சச்சினை தோளில் தூக்கி வலம்வந்தது. இந்திய அணிக்காக அனைத்தையும் கொடுத்த ஒரு வீரனுக்கான மரியாதை, அன்று நிறைவேறியதை பார்த்தபோது பல ரசிகர்களின் கண்களில் ஆனந்த கண்ணீரையே வரவழைத்தது.

சச்சினுக்காக ஒரு தோனி வந்ததை போல, 18 வருடங்களாக ஐபிஎல் கோப்பையை வெல்ல உயிரை கொடுத்துவரும் விராட் கோலிக்கு யார் வருவார்? என்ற ஆதங்கமானது ஒவ்வொரு விராட் கோலியின் ரசிகருக்கும் அதிகமாகவே இருந்துவந்தது.

கோலிக்காக கோப்பை வெல்லவேண்டும் என ஒருவர் கூட சொல்லவில்லையே என்ற மனக்குமுறலை உணர்ந்தாரோ என்னவோ, 2025 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய ஜிதேஷ் சர்மா “இந்தியா, ஆர்சிபி மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்காகவும் விராட் கோலி தன் வாழ்க்கையையே கொடுத்துள்ளார். அவருக்காக நான் கோப்பை வெல்ல நினைக்கிறேன். ஒருவர் கிரிக்கெட்டுக்காக அனைத்தையும் கொடுக்கும்போது, அவருக்கும் திரும்ப ஏதாவது ஒரு பலன் கிடைக்க வேண்டும்தானே.

ஒரு அணிக்காக 17 ஆண்டுகள் ஒருவர் விளையாடும்போது குறைந்தது அவருக்காக ஒரு கோப்பையாவது இருக்கவேண்டும் என நினைக்கிறேன். 2025 ஐபிஎல் தொடரை விராட் கோலிக்காக விளையாட வேண்டும், அவர் என்னுடன் சேர்ந்து கோப்பை வெல்ல வேண்டும், அவருக்காக நான் கோப்பையை சமர்பிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் ’ஆர்சிபி ரசிகர்களே பொறுமையாக இருங்கள், நம்முடைய நேரம்வரும்போது, ஆர்சிபி அணி வரிசையாக 5 கோப்பை வெல்லும்” என கூறியிருந்தார்.

அன்று கோலிக்காக சொன்ன வார்த்தையை இன்று நிறைவேற்றுவதுபோல வாழ்நாளின் சிறந்த ஆட்டத்தை கொடுத்துள்ளார் ஜிதேஷ் சர்மா.

சதமடித்து அசத்திய ரிஷப் பண்ட்..

விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர் ப்ரீட்ஸ்கி 14 ரன்னில் வெளியேற, 3வது வீரராக ரிஷப் பண்ட் களமிறங்கினார். ’இவரை யாருபா இப்போ இறங்க சொன்னது’ என லக்னோ ரசிகர்களே புலம்பியிருப்பார்கள். அப்படி ஒரு மோசமான ஆட்டத்தை தான் ரிஷப் பண்ட் நடப்பு சீசன் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் ‘இருங்க பாய், பழைய பண்ட் ஓட ஆட்டத்த பார்த்ததில்லயே’ என 11 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர் மழை பொழிந்த ரிஷப் பண்ட் 61 பந்தில் 118 ரன்கள் அடித்து துவம்சம் செய்தார். ஒருபுறம் பண்ட் அடிக்கிறார் என்றால், மறுமுனையில் 4 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய மிட்செல் மார்ஷ் 67 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 227 ரன்களை குவித்தது லக்னோ அணி.

வாழ்நாள் சிறந்தஆட்டத்தை ஆடிய ஜிதேஷ் சர்மா!

குவாலிஃபையர் 1-க்கு தகுதிபெற வேண்டுமானால் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த ஆர்சிபி அணி, 228 ரன்கள் என்ற மிகப்பெரிய சேஸிங்கை நோக்கி களம்கண்டது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும், லக்னோவிற்கு பதிலடி கொடுக்கும் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 6 பவுண்டரிகளை விரட்டிய சால்ட் 30 ரன்கள் அடித்து வெளியேற, அடுத்துவந்த பட்டிதார் 1 சிக்சர் பவுண்டரி என விரட்டி நல்ல தொடக்கம் கொடுத்தார். ஆனால் பட்டிதார் 14 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுக்க, அடுத்த பந்தில் 0 ரன்னில் அவுட்டான லிவிங்ஸ்டன் வந்தவேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

2 பந்தில் 2 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி தடுமாற, தனியாளாக போராடிய விராட் கோலி 10 பவுண்டரிகளை பறக்கவிட்டு 30 பந்தில் 54 ரன்கள் அடித்து ரன்வேகத்தை குறையாமல் பார்த்துக்கொண்டார். ஆனால் முக்கியமான நேரத்தில் விராட் கோலியை ஆவேஷ் கான் அவுட்டாக்க, ’முடிஞ்சது சோலி, இனி வெற்றிபெறுவது கடினம்’ என ஆர்சிபி ரசிகர்கள் புலம்பவே செய்தனர்.

ஆனால் 5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த மயங்க் அகர்வால் மற்றும் கேப்டன் ஜிதேஷ் சர்மா இருவரும் ஒரு நம்பமுடியாத சேஸிங்கிற்கு நம்பிக்கை கொடுத்தனர். 5 பவுண்டரிகளை விளாசிய அகர்வால் 180 ஸ்டிரைக்ரேட்டில் ஆட, 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என பேட்டிங்கில் ஒரு ருத்ரதாண்டவமே ஆடிய ஜிதேஷ் சர்மா 257 ஸ்டிரைக்ரேட்டில் 85 ரன்கள் குவித்து ஆர்சிபி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

’யார் சாமி இவ்வளவு நாளா எங்க இருந்த’ என பிரம்மிக்க வைக்கும் ஒரு ஆட்டத்தை ஆடிய ஜிதேஷ் சர்மா 8 பந்துகளை வெளியில் வைத்து ஆர்சிபிக்கு வெற்றியை உரித்தாக்கினார். எக்காலத்திற்கும் மறக்கமுடியாத ஒரு சேஸிங்கை கண்முன் காட்டிய ஜிதேஷ் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி செய்த அதிகபட்ச ரன்சேஸிங்கை சாத்தியப்படுத்தினார்.

இந்த அபார வெற்றியின் மூலம் குவாலிஃபையர் 1-க்கு தகுதிபெற்ற ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது.

இன்றைய போட்டியில் நடந்த சிறந்த சம்பவங்கள்!

விராட் கோலி - இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 9000 ரன்களை குவித்த ஒரே வீரராக சாதனை படைத்துள்ளார் கோலி.

அதுமட்டுமில்லாமல் ஐபிஎல்லில் அதிக அரைசதங்கள் அடித்த வீரராக மாறி 63 அரைசதங்களை குவித்து வரலாறு படைத்துள்ளார் விராட் கோலி.

ஜிதேஷ் சர்மா - 6வதுவீரராக களமிறங்கி 33 பந்தில் 85 ரன்கள் அடித்த ஜிதேஷ் சர்மா, 6வது வீரராக அல்லது அதற்கும் கீழாக களமிறங்கி அதிக ரன்கள் அடித்த தோனியின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.

74 ரன்கள் - இன்றைய போட்டியில் 74 ரன்களை விட்டுக்கொடுத்த லக்னோ பவுலர் வில் ஓரூர்க், ஐபிஎல்லில் சேஸிங்கின் போது அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலராக மோசமான சாதனை படைத்தார்.

ரிஷப் பண்ட் செயல் - போட்டியின் போது முக்கியமான தருணத்தில் ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் சர்மா மன்கட் முறையில் அவுட்டிற்காக அப்பீல் செய்யப்பட்டார். ஆனால் அப்படியான விக்கெட்டை வேண்டாம் என மறுப்பு தெரிவித்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் ரசிகர்களின் மனதை வென்றார். மிகப்பெரிய விபத்துக்கு பிறகு மீண்டுவந்தது மட்டுமில்லாமல், இந்திய டெஸ்ட் அணிக்கான துணை கேப்டனாகவும் மாறியிருக்கும் ரிஷப் பண்ட், இன்றைய போட்டியில் சதமடித்த பிறகு பல்டி அடித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.

’அது எப்படி சார் ஒரு மேட்ச்ல விளையாடின இரண்டு அணியும் ஹேப்பியா இருக்க முடியும்’ என்ற கேள்விக்கு, லக்னோவும் ஹேப்பி, ஆர்சிபியும் ஹேப்பி என நிறைவாக முடிந்துள்ளது இன்றைய ஐபிஎல் போட்டி.