2025 ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ரைவல்ரி போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
2024 ஐபிஎல் தொடரில் மே 18-ம் தேதி நடந்த லீக் போட்டியில் தோற்றதற்கு பழிதீர்க்க வேண்டும் என ஒட்டுமொத்த மஞ்சள் படை ரசிகர்களும் காத்திருக்கும் நிலையில், 17 வருடத்திற்கு பின் சென்னையில் சிஎஸ்கேவை ஆர்சிபி அணி வீழ்த்துமா என்ற எதிர்ப்பார்ப்பில் ஆர்சிபி ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 193 ரன்கள் அடித்துள்ளது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய பிலிப் சால்ட் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்துவந்தார். மறுமுனையில் டைமிங்கில் தடுமாறிய விராட் கோலி ரன்களை அடிக்க முடியாமல் தடுமாறினார்.
பிலிப் சால்ட் தனியாளாக சிஎஸ்கே பவுலர்களை வெளுத்துவாங்க, நூர் அகமது வீசிய ஒரு சாதாரண டெலிவரியில் பிலிப் சால்ட்டை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார் விக்கெட் கீப்பர் தோனி.
பிலிப் சாட்ல் வெளியேறிய பிறகு களத்திற்கு வந்த படிக்கல்லும் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்துவந்தார். 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட படிக்கல் ஆபத்தான வீரராக தெரிய, அவரை 27 ரன்னில் வெளியேற்றினார் அஸ்வின்.
அவரைத்தொடர்ந்து களத்திற்கு வந்த கேப்டன் ரஜத் பட்டிதார் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிய அவர் 3 கேட்ச்களுக்கான வாய்ப்பை கொடுத்தார். ஆனால் அனைத்து வாய்ப்புகளையும் சிஎஸ்கே ஃபீல்டர்கள் தவறவிட, அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட பட்டிதார் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி 51 ரன்கள் அடித்து அசத்தினார்.
பட்டிதார் 51 ரன்னிலும், கோலி 31 ரன்னிலும் வெளியேற, அடுத்தடுத்து களத்திற்கு வந்த ஜிதேஷ் சர்மா மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் சிக்சர் பவுண்டரி என விரட்டினாலும் நீடித்து நிலைக்காமல் வெளியேறினர்.
கடைசியாக களத்திற்கு வந்த டிம் டேவிட், சாம் கரன் வீசிய 20வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டு அசத்த 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் சேர்த்தது ஆர்சிபி அணி.
197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது.