2025 ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க, எந்த அணிகள் குவாலிஃபையர் 1-ல் காலடி எடுத்துவைக்கும் என்ற சுவாரசியம் கூடியுள்ளது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் 4 அணிகளும் பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்திருந்தாலும், கடைசி லீக் போட்டிகளில் விளையாடும் மற்ற அணிகள் டாப் 4-ல் இடம்பிடித்துள்ள அணிகளுக்கு அச்சுறுத்தும் தோல்வியை பரிசளித்துவருகின்றன.
நேற்றைய போட்டியில் பலம் வாய்ந்த டைட்டன்ஸ் அணியை லக்னோ அணி வீழ்த்திய நிலையில், இன்றைய போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி.இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் முதலிரண்டு இடங்களில் ஒரு இடத்தை பிடித்துவிடலாம் என்ற ஆசையில் களமிறங்கிய ஆர்சிபி அணி, ஹைத்ராபாத் அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர்.
3 பவுண்டரிகள் 3 சிசர்கள் என பவர்பிளேவை டாமினேட் செய்த அபிஷேக் சர்மா 4 ஓவரில் 54 ரன்களுக்கு அணியை எடுத்துச்சென்று வெளியேறினார். உடன் டிராவிஸ் ஹெட்டும் 3 பவுண்டரிகள் அடித்து அவுட்டாக, அடுத்து கைக்கோர்த்த இஷான் கிஷன் மற்றும் கிளாசன் இருவரும் அவர்கள் விட்ட இடத்திலிருந்தே துவம்சம் செய்தனர்.
கருணையே காட்டாத கிளாசன் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்ட, அடுத்துவந்த அனிகேத் வெர்மா 3 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டிவிட்டார். ஆனால் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்துவந்த ஆர்சிபி அணி போட்டியை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தது. இறுதிவரை களத்திலிருந்த இஷான் கிஷன் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடி, தனியொரு ஆளாக 94 ரன்கள் குவித்து அசத்தினார். இஷான் கிஷனின் அதிரடியால் 231 ரன்கள் என்ற இமாலய டோட்டலை குவித்தது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி.
232 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி என்ன செய்யப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அதற்கேற்றார் போல் தொடக்கவீரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் SRH அணிக்கு பதிலடி கொடுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஒருபக்கம் பவுண்டரிகளாக விரட்டிக்கொண்டிருந்த விராட் கோலி 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 43 ரன்கள் அடிக்க, 4 பவுண்டரிகள் 5 சிக்சர் என வெளுத்துவாங்கிய பிலிப் சால்ட் அரைசதமடித்து அசத்தினார். 10 ஓவரில் 120 ரன்களை எட்டி தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்தஜோடி, அணியை வலுவான நிலைக்கு எடுத்துவந்து வெளியேறியது. ஆனால் படிக்கல்லுக்கு பதிலாக அணிக்குள் வந்த மயங்க் அகர்வால் உள்ளே வந்து டெஸ்ட் மேட்ச் விளையாட, பந்துவீச்சில் டாமினேட்செய்தது ஹைத்ராபாத் அணி.
10 பந்தில் 11 ரன்கள் அடித்த அகர்வால் அழுத்தத்தை கூட்ட, அடுத்துவந்த ரஜத் பட்டிதார் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களை பறக்கவிட்டு நம்பிக்கை கொடுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி 5 ஓவருக்கு 69 ரன்கள் தேவை, இன்னும் 7 விக்கெட்டுகள் கையில் இருக்கிறது என்றநிலையில் ஆர்சிபியின் கைகளே ஓங்கியிருந்தனர். ஆனால் ஒரே ஓவரில் பட்டிதார் மற்றும் ஷெஃபர்ட் இருவரையும் அவுட்டாக்கி வெளியேற்றிய எஷான் மலிங்கா போட்டியையே தலைகீழாக திருப்பி போட்டார்.
அதற்குபிறகு ஒரே நம்பிக்கையான ஜிதேஷ் சர்மாவும் கேட்ச் கொடுத்து அவுட்டாக, அடுத்துவந்த ஒரு வீரர் கூட சோபிக்கவில்லை. முடிவில் 189 ரன்களுக்கே அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்த ஆர்சிபி அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்த மோசமான தோல்வியின் மூலம் ரன்ரேட் பெரிதாக அடிவாங்க 3வது இடத்திற்கு சரிந்துள்ளது ஆர்சிபி அணி. பஞ்சாப் கிங்ஸ் மட்டுமில்லாமல், குஜராத், மும்பை என அனைத்து அணிகளும் முதலிரண்டு இடங்களில் முடிக்க வாய்ப்பு உள்ளது என்ற சூழலில் ஐபிஎல் இன்னும் சூடுபிடித்துள்ளது.
ஆர்சிபி அணி முதலிரண்டு இடத்தை பிடிக்க வேண்டுமானால் குஜராத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தோற்க வேண்டிய நிலைமைக்கு சென்றுள்ளது. ஹசல்வுட் ஒரு பந்துவீச்சாளர் இல்லாதது ஆர்சிபி அணியை 231 ரன்களை விட்டுக்கொடுக்கும் ஒரு பந்துவீச்சு யூனிட்டாக மாற்றியுள்ளது. ஹசல்வுட் காம்போ இல்லாமல் புவனேஷ்வர் குமாரும் படுமோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். ஹசல்வுட் பிளேஆஃப் போட்டிகளுக்கு வந்துவிடுவார் என்றாலும், பந்துவீச்சில் இருக்கும் மிகப்பெரிய குறையை ஆர்சிபி அணி சரிசெய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருந்துவருகிறது.