Royal Challengers Bangalore
Royal Challengers Bangalore Shailendra Bhojak
T20

RCB IPL 2023 Preview | 'ஈ சாலா கப் நம்தே' மீம் மெட்டீரியல் இனி ரியல் மெட்டீரியலாக மாறுமா..?

Nithish

'என்ன கொடுமை சரவணன் இது?' என சந்திரமுகியில் எமோஷனலாக ஒலித்த வசனம் காலப்போக்கில் காமெடி வசனமானதே.. அதே நிலைமைதான் 'ஈ சாலா கப் நம்தே'வுக்கும். வீராவேசமாக தொடக்க காலத்தில் ஒலித்த இது, பத்து பதினொரு சீசன்களுக்குப் பின் மீம் மெட்டீரியலாகிவிட்டது. ஆனாலும் நம்பிக்கையோடு ஒவ்வொரு ஆண்டும் அணியை மாற்றிப்போட்டு தங்கள் துரதிர்ஷ்டத்தை துடைத்தெறியப் பார்க்கிறது ஆர்.சி.பி நிர்வாகம்.

போன முறை ப்ளே ஆப் போனதால் இந்த முறை பெரிய வீரர்கள் யாரையும் வெளியேற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டது ஆர்சிபி. அதனால் ஏலத்திற்கான பட்ஜெட்டும் குறைவாகவே இருந்தது. ஹேசல்வுட் அந்த நேரத்திலேயே காயத்தினால் அவதிப்பட்டுவந்ததால் அவருக்கு பேக்கப்பாக ரீஸ் டாப்லீயை எடுத்தார்கள். ஃபாரீன் ஆல்ரவுண்டர் கோட்டாவுக்கு வில் ஜாக்ஸை எடுக்க அவர் காயம் காரணமாக வெளியேறினார். இப்போது ப்ரேஸ்வெல்லை அவருக்கு பதில் அணியில் சேர்த்திருக்கிறார்கள்.

பார்ப்பதற்கு பயங்கர மிரட்டலான அணியாகவே இருந்தாலும் பிரஷர் தாங்காமல் எதிரணியிடம் சரண்டராகிவிடுவதுதான் ஆர்சிபியின் சமீபத்திய வரலாறு. இந்த முறையும் ஒரு பலமான அணியாகவே பேப்பரில் தெரிந்தாலும் இவர்களின் 'கடந்துவந்த பாதை'யும் தெரியுமென்பதால் ரசிகர்களும் கொஞ்சம் பதட்டமாகவே இருக்கிறார்கள். சாதிப்பார்களா சேலஞ்சர்ஸ்?

வாரணம் ஆயிரம்

கிங் கோலி - கோலி என்கிற உலகத்தர பேட்ஸ்மேன் உருவானதற்கு பின்னான இரண்டாவது மோசமான ஐ.பி.எல் சீசன் கடந்த ஆண்டு அவருக்கு. 115 என்கிர ஸ்ட்ரைக் ரேட்டோடு 16 போட்டிகளில் வெறும் 341 ரன்கள். ஆனால் அதன்பின் நடந்த அத்தனை சர்வதேச தொடர்களிலும் அடித்துப் பிரித்து ஃபார்முக்கு வந்துவிட்டார். கடைசியாய் ஆடிய இங்கிலாந்திற்கெதிரான டி20யிலும் அரைசதம். அவரின் ஃபார்ம் இந்தத் தொடரிலும் எதிரொலிக்கும் பட்சத்தில் ஆரஞ்சுத் தொப்பிக்கு போட்டி அதிகமாகும்.

Kohli

டுப்ளெஸ்ஸி - ரன் மெஷின். சளைக்காமல் எல்லா தொடரிலும் அடித்துக்கொண்டே இருக்கிறார். அதுவும் இவரின் சமீபத்திய பவர்ப்ளே ஸ்ட்ரைக் ரேட்கள் மலைக்க வைக்கின்றன. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் லீக்கில் 163 ஸ்ட்ரைக் ரேட். சி.பி.எல்லில் 181. இதே அதிரடி தொடரும் பட்சத்தில் ரன்களைக் குவிக்கும் இந்த இணை.

Faf Du Plesis

ஹஸரங்கா - நான்கு ஓவர்கள் நல்ல எகானமியோடு பந்துவீச வேண்டும், ஏழெட்டு பந்துகளில் பதினைந்து ரன்கள் எடுக்கவேண்டும் என ஆர்சிபி தேடிக்கொண்டிருந்த ஆல்ரவுண்டர் இடத்துக்கு பக்காவாய் செட்டானார் ஹஸரங்கா. கடந்த சில மாதங்களாக உலகம் முழுக்க சுற்றி சுற்றிக் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் அவர் நல்ல ஃபார்மில் வந்து இறங்குகிறார்.

இம்சை அரசர்கள்

எங்கெங்கு காணினும் காயம் - இந்த சீசனில் காயத்தால் அதிகம் அடிவாங்கியது ஆர்.சி.பி தான். ஹேசல்வுட் ஏலத்திற்கு முன்பிருந்தே போட்டிகளிலிருந்து விலகியிருக்கிறார். அதற்கு முன்னால் அடிபட்ட மேக்ஸ்வெல் இப்போதுதான் பெரிய ஓய்வுக்குப் பின் ஆட வருகிறார். ஏலத்தில் எடுத்த வில் ஜாக்ஸ் வெளியேறிவிட்டார். சரியாக ஒருவாரம் முன் அணியின் மிடில் ஆர்டர் நம்பிக்கை நட்சத்திரம் ரஜத் பட்டிடாரும் அவுட். குறைந்தது ஒரு மாதத்திற்கு அவர் ஆடமுடியாது என அணி நிர்வாகமே சொல்லிவிட்டது. அதனால் மிடில் ஆர்டர் படுவீக்காக காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டு ஸ்டார் ப்ளேயர்களாக இருந்த இவர்கள் அனைவரையும் இழந்தால் அணி ப்ளே ஆஃப் செல்வது மிகச்சிரமம்.

Dinesh Karthik

தினேஷ் கார்த்திக் - சரியான பினிஷர் வேண்டும் என்றுதான் ஏலத்தில் சென்னையோடு போட்டி போட்டு தினேஷ் கார்த்திக்கை எடுத்தார்கள். ஆனால் டிகே கடைசியாய் ஆடிய எட்டு இன்னிங்ஸ்களில் மொத்தமே 126 ரன்கள்தான் எடுத்திருக்கிறார். பெரும்பாலான போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்கள். இவர் அடிக்காத பட்சத்தில் அணி டெத் ஓவர்களில் சோபிப்பது சிரமமே.

தனி ஒருவன்

ஷபாஸ் அகமது - கடந்த சீசனில் டெயிலில் ஆடி அணியை தோல்வியிலிருந்து மீட்டவர். இந்த ஆண்டு ரஞ்சியில் பெங்காலுக்காக எக்கச்சக்க ரன்கள் குவித்திருக்கிறார். இக்கட்டான நேரத்தில் விக்கெட்களும் வீழ்த்தக்கூடியவர் என்பதால் ஆர்.சி.பி போன்ற அணிக்கு இவரின் தேவை அதிகம். இந்த ஆண்டு பேட்டிங்கில் சில முக்கியமான இன்னிங்ஸ்கள் ஆடுவார் என எதிர்பார்க்கலாம்.

துருவங்கள் பதினொன்று

Maxwell

கோலி, டுப்ளெஸ்ஸி, `அனுஜ் ராவத், மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், ஹஸரங்கா, ஷபாஸ் அகமது, ரீஸ் டாப்லீ, முகமது சிராஜ், ஹர்ஷல் படேல்.

இம்பேக்ட் பிளேயர்

இந்த ஆண்டிலிருந்து இம்பேக்ட் ப்ளேயர் எனும் முறை ஐ.பி.எல்லில் அறிமுகமாகிறது. அதன்படி ப்ளேயிங் லெவன் தவிர ஐந்து பிளேயர்களை கேப்டன் மாற்றுவீரர்களாக அறிவிக்கலாம். அவர்களுள் ஒருவர் ஆட்டத்தின் தன்மை பொறுத்து பவுலராகவோ, பேட்ஸ்மேனாகவோ களமிறங்குவார். பவுலராய் களமிறங்குபவர் நான்கு ஓவர்களையும் வீசலாம். பேட்ஸ்மேனாய் களமிறங்குபவரும் அவுட்டாகும்வரை/ஓவர் முடியும்வரை விளையாடலாம். அப்படி பேட்ஸ்மேன் களமிறங்கும்பட்சத்தில் டெயில் எண்டில் இருக்கும் பவுலருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காது. அதே போல இவர்கள் களமிறங்கும்போது வெளியேறும் வீரர் அதன்பின் ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் திரும்ப பங்குகொள்ளமுடியாது.

இதன்படி ராயல் சாலஞ்சர்ஸ்அணியின் இம்பாக்ட் பிளேயர்கள் பட்டியல் பெரும்பாலும் இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

சுயாஷ் பிரபுதேசாய் - அணிக்கு ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் தேவைப்படும்போது.
ஆகாஷ் தீப் - அணிக்கு ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படும்போது.
மைக்கேல் ப்ரேஸ்வெல் - அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்களே இருக்கும்பட்சத்தில் ஒரு ஆல்ரவுண்டராய் இவர் தேவைப்படலாம்.
கர்ன் ஷர்மா - ஒரு முழுநேர ஸ்பின்னர் தேவைப்படும்போது
சித்தார்த் கெளல் - ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும்போது.

'இந்த உலகம் ஜெயிச்சுடுவோம்னு சொன்னா கேக்காது, ஜெயிச்சுட்டு சொன்னாதான் கேட்கும்' என்கிற சிவகார்த்திகேயனின் வசனம் ஆர்.சி.பிக்கு நிச்சயம் பொருந்தும். பல்லாண்டுகளாக அறைகூவல் மட்டுமே விட்டுக்கொண்டிருக்கும் இந்த அணியை மற்ற அணிகள் எளிதில் கடந்துபோகாமல் இருக்க கோப்பை அவசியம். அதை வென்று தருவார்களா கோலி அண்ட் கோ என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.