Yash Dayal
Yash Dayal web
T20

யாஷ் தயாளை ‘குப்பை’ என விமர்சித்த முரளி கார்த்திக்! 'Thug Life' ரிப்ளை கொடுத்த RCB அணி!

Rishan Vengai

2007 டி20 உலகக்கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்துகளையும் 6 சிக்சர்களாக பறக்கவிட்ட இந்திய வீரர் யுவராஜ் சிங், 19 வயது இளம் வீரரான ஸ்டூவர் பிராட்டின் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்னதாகவே மிகவும் கடினமானதாக மாற்றினார். அப்போதைய பெரும்பாலான முன்னாள் வீரர்கள் 6 சிக்சர்களுக்கு பிறகு ஸ்டூவர்ட் பிராடின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே கூறினர். ஆனால் அதிலிருந்து மீண்டுவந்த பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 604 விக்கெட்டுகளை வாரிக்குவித்து, அந்த சாதனையை படைத்த 5 ஜாம்பவான் வீரர்களின் பட்டியல்களில் ஒருவராக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை உட்சத்தில் முடித்தார்.

ஸ்டூவர்ட் பிராட் ஆரம்ப காலக்கட்டத்தில் எதிர்கொண்ட கடினமான சவால்களை தற்போது ரிங்கு சிங்கின் 5 சிக்சர்களுக்கு பிறகு யாஷ் தயாள் எதிர்கொண்டு வருகிறார். 2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடிய யாஷ் தயாள், ரிங்கு சிங்கிற்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விட்டுக்கொடுத்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறினார். அந்த மோசமான சம்பவத்திற்கு பிறகு யாஷ் தயாளை அணியிலிருந்து வெளியேற்றிய குஜராத் டைட்டன்ஸ் அணி, மோசமான நேரத்தில் அவரை கைவிட்டது.

மோசமாக விமர்சித்த முரளி கார்த்திக்!

குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறிய யாஷ் தயாளை 2024 ஐபிஎல் தொடரில் 5 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது ஆர்சிபி அணி, ஆர்சிபி அணிக்கு சிறப்பாக செயல்பட்டு வரும் யாஷ் தயாள், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மற்ற பந்துவீச்சாளர்களை விடவும் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

yash dayal

அப்போது போட்டியில் வர்ணனையாளராக இருந்த முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்திக், ”ஒருவரின் குப்பை மற்றொருவருக்கு புதையலாகலாம்” என்று யாஷ் தயாளை மிகவும் மோசமாக விமர்சித்தார்.

yash dayal

அவரின் இந்த கடுமையான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள், ”இந்தியாவுக்காக நீங்கள் எந்தளவுக்கு புதையலை போல் செயல்பட்டீர்கள்?” என்றும், ”யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் அடித்தபிறகும் ஸ்டூவர்ட் பிராட் 600 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து சாம்பியன் வீரராக மாறியது உங்களுக்கு தெரியாதா?” என்றும், ”நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

முரளி கார்த்திக்கு ஆர்சிபி அணி பதிலடி!

முரளி கார்த்திக்கின் ”குப்பை” விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டிருக்கும் ஆர்சிபி அணி, “யாஷ் தயாள் காலத்தின் பொக்கிஷம்” என்றும், ”போற்றப்படாத ஹீரோ” என்றும் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

ஆர்சிபி அணியின் இந்த பதிவை வரவேற்றிருக்கும் ரசிகர்கள், “இதனால் தான் நீங்கள் சிறந்த பிரான்சைஸாக இருக்கிறீர்கள்” என்று பாராட்டி வருகின்றனர்.