ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை கோப்பை வென்ற அணிகளாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முன்னிலையில் இருக்கின்றன. அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவ்விரண்டு அணிகளும் தலா 5 முறை கோப்பை வென்று அசத்தியுள்ளனர். இந்த இரண்டு அணிகள் மோதுகிறது என்றாலே ஐபிஎல் போட்டியானது அனல்பறக்கும் போட்டியாகவே அமையும்.
இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடரின் முதல் மோதலிலேயே இவ்விரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. மார்ச் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.
மிகப்பெரிய டி20 கிரிக்கெட் மரபை வைத்திருக்கும் இவ்விரண்டு அணிகள், இந்திய கிரிக்கெட் அணிக்கான சிறந்த வீரர்களை வழங்கிய அணிகளாக இருந்துவருகின்றன. இந்தியாவின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணியால் கண்டெடுக்கப்பட்டவர். அதேபோல உலகின் நம்பர் 1 வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய டி20 அணி கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் மும்பை அணியால் கண்டெடுக்கப்பட்டவர்கள்.
இந்நிலையில் இந்த இரண்டு சிறந்த சாம்பியன் அணிகளின் கலவையில் 11 பேர் கொண்ட ஆல்டைம் பெஸ்ட் அணியை தேர்வுசெய்வது கடினமானது. அப்படி இருக்கும் பட்சத்தில் தன்னுடைய அணியை அம்பத்தி ராயுடு பட்டியலிட்டுள்ளார்.
CSK மற்றும் MI அணிகள் இணைந்த ஆல்டைம் பெஸ்ட் அணியில் “ சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், கிரன் பொல்லார்டு, எம்எஸ் தோனி, ரவிந்திர ஜடேஜா, டிவெய்ன் பிராவோ, லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்பஜன் சிங், அம்பத்தி ராயுடு (இம்பேக்ட் பிளேயர்)” முதலிய வீரர்கள் கொண்ட சிறந்த அணியை தேர்வுசெய்துள்ளார்.