2025 தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL ) டி20 தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
லைக்கா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலிய 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்திய நிலையில், 28 லீக் போட்டிகள் முடிவில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலிய 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.
பரபரப்பாக நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை தோற்கடித்த ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி, ஜெயராமன் தலைமையிலான திருச்சி அணியை தோற்கடித்து அடுத்தசுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. தொடக்கவீரராக களமிறங்கி 83 ரன்கள் விளாசிய கேப்டன் அஸ்வின் அணியை குவாலிஃபையர் 2-க்கு எடுத்துச்சென்றுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் 140 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய திண்டுக்கல் கேப்டன் அஸ்வின், 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனைத்தொடர்ந்து 141 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய திண்டுக்கல் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் இறுதிவரை நிலைத்து நின்று 48 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உதவியுடன் 83 ரன்கள் குவித்தார். அஸ்வினின் அதிரடியான ஆட்டத்தின் உதவியால் 16.4 ஓவரிலெயே இலக்கை எட்டியது திண்டுக்கல் அணி.
இதன்மூலம் குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதிபெற்றுள்ள திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸை எதிர்த்து நாளை மோதவிருக்கிறது.