Arjun Tendulkar
Arjun Tendulkar  PTI
T20

“135 கி.மீ. வேகத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீச இதை செய்ய வேண்டும்” - பாக். முன்னாள் வீரர்!

Prakash J

’தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என ஒரு பழமொழி சொல்லப்படுவது உண்டு. ஆனால், பழமொழிக்கு நேர் எதிராக ஜாம்பவான் மகன் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் ஆட்டம் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாய் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் விளையாடி வருகிறார்.

முன்னதாக, கடந்த 16ஆம் தேதி, 22வது லீக் போட்டியில் மும்பை அணியும் கொல்கத்தா அணியும் சந்தித்தன. இந்தப் போட்டியின்போது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார். தவிர, அந்தப் போட்டியில் 2 ஓவர்கள் வீசி 17 ரன்களை வழங்கியிருந்தார். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற 25வது லீக் போட்டியிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

Arjun Tendulkar | Sachin Tendulkar

அந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, கடைசி ஓவரை அர்ஜுனுக்கு வழங்கினார். அப்போது ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 6 பந்துகளில் அந்த அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்தக் கட்டத்தில் அனுபவமில்லாத அர்ஜுனுக்கு கடைசி ஓவரை ரோகித் தந்ததால் ரசிகர்கள் விமர்சித்தபடி இருந்தனர்.

ஆனால், ரோகித்தின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில் செயல்பட்ட அர்ஜுன், முதல் பந்தில் ரன் வழங்கவில்லை. 2வது பந்தில் 1 ரன்னை வழங்கி, ரன் அவுட் மூலம் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். 3வது பந்தை வைடாக வழங்கி 1 ரன்னையும், 4வது பந்தை லென்த்தாக வீசி 2 ரன்களையும் வழங்கினார். 5வது பந்தில் லெக்பைஸ் மூலம் 1 ரன்னை வழங்கிய அர்ஜுன், கடைசிப் பந்தில் இறுதி விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன்மூலம் அந்த ஓவரில் 5 ரன்களை மட்டும் வழங்கி, 2 விக்கெட்களையும் பறித்து மும்பை அணியின் வெற்றிக்கும் வித்திட்டார்.

Arjun Tendulkar |

அந்தப் போட்டியில் 2.5 ஓவர்கள் வீசி 18 ரன்களை வழங்கியதுடன் 1 விக்கெட்டையும் அர்ஜுன் கைப்பற்றியிருந்தார். ஐபிஎல்லில் அவர் வீழ்த்திய முதல் விக்கெட்டாகவும் அது பதிவானது. தன் மகன் ஐபிஎல்லில் முதன்முறையாக விக்கெட் வீழ்த்தியதைக் கண்டு சச்சினும் பெருமைப்பட்டுக் கொண்டார். தவிர அர்ஜுன், மும்பை அணியாலும் பாராட்டப்பட்டார்.

ரோகித் சர்மா

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, ”அர்ஜுன் டெண்டுல்கர் 3 ஆண்டுகள் எங்கள் அணியோடு இருக்கிறார். அவர் திறமை மீதும், பந்து வீச்சு மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். பவர்பிளே ஓவர்களில் ஸ்விங் செய்வதோடு, டெத் ஓவர்களில் சிறப்பாக யார்க்கர்களை வீசுகிறார். அவரின் திட்டமும் சிறப்பாக உள்ளது. அணிக்கு ஏற்றவாறு அவர் தன்னைச் செயல்படுத்துகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை ரசிகர்களும் கிரிக்கெட் வல்லுநர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஹைதராபாத்துக்கு எதிராக முதல் ஓவரை வீசிய அர்ஜுன், 125 – 130+ கி.மீ வேகத்தில் தொடங்கி 6வது பந்தை சோர்ந்துபோய் வெறும் 107.2 கி.மீ வேகத்திலேயே வீசினார். இளம்வீரரான அவர் முதல் ஓவரிலேயே புதிய பந்தில் இவ்வளவு மெதுவாக வீசியதால் ரசிகர்கள் வெறுப்புற்றனர்.

குறிப்பாக ரசிகர்கள், ”பொதுவாக சாதாரண பவுலர்கள்கூட, லேசான பவர் கொடுத்து வீசினாலே புதிய பந்து அதிரடியான வேகத்தில் செல்லும். ஏன், பாகிஸ்தானின் முன்னாள் ஸ்பின்னர் ஷாஹித் அப்ரிடிகூட அசால்ட்டாக 134 கி.மீ வேகத்தில் வீசுவார். அப்படியிருக்கும்போது, இளம்வீரரான அர்ஜுன் முதல் ஓவரிலேயே புதிய பந்தில் இவ்வளவு மெதுவாக வீசியது ஜீரணிக்க முடியாததாக உள்ளது. புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக ரிங்கு சிங் போன்ற பேட்டர்கள் இருந்திருந்தால் சரமாரியாக அடித்திருப்பார்கள்.

Arjun tendulkar

இருப்பினும், ஆரம்பகட்ட நிலையில் மட்டுமே உள்ளே அர்ஜுன் நல்ல வேகமான ஆக்‌ஷன், லைன், லென்த் ஆகியவற்றை கொண்டுள்ளதால் மிக விரைவில் 10 – 20 கி.மீ வேகத்தைச் சேர்த்தால் மட்டுமே சிறப்பாக ஜொலிக்க முடியும்” என சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்களைப்போலவே பிரபல கிரிக்கெட் வல்லுநர்களும் அர்ஜுனுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி, ‘குறைவான அனுபவமும் வேகமும் கொண்டுள்ள அர்ஜுன் டெண்டுல்கர் மிடில் ஓவர்களில் பந்து வீசுவதற்கு சரியானவரே தவிர, டெத் ஓவர்களுக்கு சரியாக மாட்டார். இருப்பினும் இந்த அனுபவத்திற்கு அவர் சிறப்பாகவே செயல்பட்டார். இப்போட்டியில் கடைசி ஓவரை வீசியபோது அர்ஜுன் மற்றும் ரோஹித் ஆகிய இருவருக்குமே அழுத்தத்தை கொடுத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Arjun Tendulkar

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டரான ரஷித் லத்தீப், “தனது கிரிக்கெட் கேரியரின் தொடக்க நிலையில் அர்ஜுன் உள்ளார். அவர் கிரிக்கெட் சார்ந்து கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும். அவரது பவுலிங் ஆக்‌ஷனை மாற்ற வேண்டும். அவரது அலைன்மெண்ட் நன்றாக இல்லை. அதனால் பந்து வீச்சில் அவரால் வேகத்தை கூட்ட முடியாது. பயோ மெக்கானிக்கல் ஆலோசகர் அவரை வழிநடத்தினால் இந்த மாற்றத்தை அவரால் செய்ய முடியும். அதன் மூலம் பந்து வீச்சில் வேகத்தை கூட்ட முடியும். மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகம் வரை அர்ஜுன் பந்து வீசலாம்” எனத் தெரிவித்துள்ளார்.