Rajasthan Royals lost to LSG by 2 runs in a thrilling match bcci
T20

2 ரன்னில் இதயம் உடைக்கும் தோல்வி.. கண்ணீர் விட்ட RR கேப்டன்! 9 ரன்னை Defend செய்த ஆவேஷ் கான்!

2025 ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

Rishan Vengai

2025 ஐபிஎல் சீசனில் கையிலிருக்கும் போட்டியை நழுவவிடும் அணியாக ராஜஸ்தான் சில இதயம் உடைக்கும் தோல்விகளை அடைந்துவருகிறது. அதிலும் கடைசி இரண்டு போட்டிகளில் கடைசி ஓவரில் எட்டக்கூடிய ரன்களை அடிக்க முடியாமல் சூப்பர் ஓவரிலும், 2 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்றிருக்கும் ராஜஸ்தான் அணி மீண்டு வரமுடியாத ஒரு வேதனையை அனுபவித்து வருகிறது. பேசவே முடியாமல் கண்ணீர் மல்க ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் இன்று பேசியது ரசிகர்களுக்கே வேதனையை கொடுக்கும் காட்சியாக அமைந்தது.

இதில் கொடுமை என்னவென்றால் எந்த இரண்டு வீரர்கள் வெற்றியை தேடித்தருவார்கள் என ராஜஸ்தான் அணி ரீடெய்ன் செய்ததோ, அந்த இரண்டு வீரர்களான ஹெட்மயர் மற்றும் சந்தீப் சர்மா இருவர் தான் இந்த இரண்டு இதயம் உடைக்கும் தோல்விகளை ராஜஸ்தானுக்கு பரிசாக அளித்துள்ளனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி, இன்றைய போட்டியில் லக்னோ அணியை எதிர்கொண்டு விளையாடியது.

ஒரேஓவரில் 27 ரன்கள்.. மரணஅடி கொடுத்த சமாத்!

கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக ரியான் பராக் அணியை வழிநடத்தினார். பரபரப்பாக தொடங்கிய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ராஜஸ்தான் பவுலர்கள், லக்னோ அணியின் அச்சுறுத்தும் வீரர்களான மிட்செல் மார்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரையும் 4 ரன்கள் மற்றும் 11 ரன்களில் வெளியேற்றி அசத்தினர். கூடுதலாக கேப்டன் ரிஷப் பண்ட்டும் 3 ரன்னுக்கு நடையை கட்ட, விரைவாகவே 3 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி தடுமாறியது.

ஒருபுறம் விக்கெட்டுகளாக சரிந்தாலும் மறுமுனையில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய இன்ஃபார்ம் வீரரான மார்க்ரம் அரைசதமடித்து அசத்தினார். உடன் இம்பேக்ட் வீரரான ஆயுஸ் பதோனியும் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி அரைசதமடிக்க 19 ஓவரில் 153 ரன்களை எட்டியது லக்னோ அணி.

கடைசி ஓவரில் மிஞ்சிபோனால் 13 ரன்கள் வரும் 167 ரன்களுக்கு மேல் தாண்டாது என நினைத்தபோது, ஆட்டத்தையே தலைகீழாக திருப்பும் இறுதிஓவரை வீசினார் சந்தீப் சர்மா. அவர் வீசிய கடைசி 6 பந்தில் 4 சிக்சர்களை பறக்கவிட்ட அப்துல் சமாத் 10 பந்தில் 30 ரன்கள் அடிக்க, கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்களை விட்டுக்கொடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதன் காரணமாக 180 ரன்கள் என்ற நல்ல டோட்டலை அடித்தது லக்னோ அணி.

வரலாற்றை மாற்றி எழுதிய 14 வயது வீரர்..

181 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ஐபிஎல் வரலாற்றில் குறைந்தவயது வீரராக 14 வயதில் அறிமுகம் பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் அறிமுக போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்ட சூர்யவன்ஷி எல்லோரையும் ஆச்சரியப்படவைத்தார். 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என வைபவ் வானவேடிக்கை காட்ட, 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என ரன்மழை பொழிந்த ஜெய்ஸ்வால் 30 பந்தில் அரைசதமடித்து அசத்தினார்.

இந்த இரண்டு தொடக்க ஜோடிகளை பிரிக்க முடியாமல் லக்னோ பவுலர்கள் விழிபிதுங்கி நிற்க, 8 ஓவரில் 82 ரன்களை அடித்தது ராஜஸ்தான் அணி.

விக்கெட்டை தேடிக்கொண்டிருந்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் ஒருவழியாக 14 வயது சூர்யவன்ஷியை ஸ்டம்ப் அவுட் மூலம் 34 ரன்கள் இருந்தபோது வெளியேறினார். அறிமுக போட்டியில் களமிறங்கி 20 பந்தில் 170 ஸ்டிரைக் ரேட்டுடன் 34 ரன்கள் அடித்த வைபவ் சூர்யவன்ஷி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் நல்ல இன்னிங்ஸ் விளையாடிய போதும் அவுட்டாகி வெளியேறிய சூர்யவன்ஷி கண்ணீர் மல்க வெளியேறினார். என்னதான் நன்றாக விளையாடினாலும் அவுட்டாகிவிட்டால் அழுதுவிடும் குழந்தை மனநிலையில் வைபவ் வெளியேறியது ‘எலேய் க்யூட்-ரா’ என்பதுபோலவே எல்லோருக்கும் இருந்தது.

வைபவ் வெளியேறினாலும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரியான் பராக் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை இறுதிவரை எடுத்துச்சென்றனர்.

5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் ஜெய்ஸ்வால் 74 ரன்கள் அடிக்க, 26 பந்தில் 39 ரன்கள் அடித்த ரியான் பராக் மிரட்டிவிட்டார். இருவரும் களத்தில் இருந்தபோது கடைசி 3 ஓவருக்கு 25 ரன்கள் மட்டுமே தேவை, கையில் 8 விக்கெட்டுகள் உள்ளது என்ற வலுவான நிலையிலேயே இருந்தது ராஜஸ்தான் அணி.

ஒரேஓவரில் ஆட்டத்தை திருப்பிய ஆவேஷ் கான்!

ஆனால் 18வது ஓவரை ஒரு தரமான ஓவராக வீசிய ஆவேஷ் கான், ஒரே ஓவரில் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இருவரையும் வெளியேற்றி போட்டியையே புரட்டிப்போட்டார். அதுமட்டுமில்லாமல் அந்த ஓவரில் வெறும் 5 ரன்களை மட்டுமே ஆவேஷ் கான் விட்டுக்கொடுக்க, கடைசி இரண்டு ஓவருக்கு 20 ரன்கள் தேவையென மாறியது போட்டி.

19வது ஓவரை பிரின்ஸ் வீச அதில் 2 பவுண்டரிகளை விரட்டிய ஹெட்மயர் 11 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதி 6 பந்தில் 9 ரன்கள் மட்டுமே தேவையென்ற இடத்தில் மீண்டும் பந்துவீசவந்த ஆவேஷ் கான், 1, 2 ரன விட்டுக்கொடுத்து 3வது பந்தில் ஹெட்மயரை அவுட்டாக்கி அசத்தினார். ‘அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே; இன்னைக்கும் ஒரு சூப்பர் ஓவர் வருமா’ என்ற எண்ணத்திற்கே ரசிகர்கள் சென்றனர். ஆனால் இறுதி 3 பந்தில் 6 ரன்களை வெற்றிகரமாக டிஃபண்ட் செய்த ஆவேஷ் கான், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

கடைசி ஓவரில் 9 ரன்களை அடிக்க முடியாமல் தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியில் இதயம் உடைக்கும் தோல்வியை சந்தித்தது ராஜஸ்தான் அணி. போட்டி முடிவில் பேசிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கண்களில் கண்ணீர் ததும்பியவாரு ‘நான் கடைசிவரை நின்று போட்டியை முடித்திருக்க வேண்டும், வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை’ என சோகமுகத்துடன் பேசினார்.

எங்களுக்கே கொஞ்சம் பாவமாத்தான் யா இருக்கு என்ற மனநிலையில் ரசிகர்கள் இருக்க, மறுமுனையில் ஆவேஷ் கானின் பிரிலியன்ஸை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர். 5வது வெற்றியை பதிவுசெய்த லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.