ராகுல் டிராவிட் எக்ஸ் தளம்
T20

IPL 2025 | இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் பெரிய சிக்கல்.. கடுமையாகச் சாடிய ராகுல் டிராவிட்!

“இம்பேக்ட் வீரர் விதிமுறை ஆல்ரவுண்டர்களை வளர்வதைத் தடுப்பதாக இந்திய முன்னாள் பயிற்சியாளரும், ராஜஸ்தான் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Prakash J

இந்தியாவில் நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இந்த தொடரில் மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்ட கடந்த 2020-ஆம் ஆண்டு 'இம்பேக்ட்' வீரர் விதிமுறை' கொண்டு வரப்பட்டது. இதன்படி ஆட்டத்தின் இடையே, அதாவது பிளேயிங் லெவலில் விளையாடும் 11 வீரர்களில் ஒரு வீரரை எடுத்துவிட்டு, அவருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்க முடியும். அந்த வீரர் பேட்டிங்கும் செய்யலாம். பந்தும் வீசலாம். இந்த விதிமுறையை, ஆரம்பம் முதலே சீனியர் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் கேப்டன்கள் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் கடந்த வருடம் அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக, ”இம்பேக்ட் வீரர் விதிமுறை ஒரு ஆல் ரவுண்டர் உருவாவதைத் தடுக்கிறது” என ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

rahul dravid

இந்த நிலையில், இம்பேக்ட் வீரர் விதிமுறை ஆல்ரவுண்டர்களை வளர்வதைத் தடுப்பதாக இந்திய முன்னாள் பயிற்சியாளரும், ராஜஸ்தான் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "இம்பேக்ட் வீரர் விதிமுறை வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது விளையாட்டை அதிக போட்டித்தன்மையுடன் மாற்றுகிறது. இது சிக்கலை ஏற்படுத்தி போட்டிகளை இறுதிவரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. புள்ளிவிவரப்படி, அணிகள் கூடுதல் பேட்டரைக் கொண்டிருப்பதால் அதிக ரன்கள் குவிக்கப்படுகின்றன.

நீங்கள் 8-வது அல்லது 9-வது இடத்தில் ஒரு பேட்ஸ்மேனை வைத்திருக்கும்போது 6 அல்லது 7 விக்கெட்டுகளை இழந்தபிறகும் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க இது அனுமதிக்கிறது. ஒரு பயிற்சியாளராக, நீங்கள் ஆல்ரவுண்டர்களை உருவாக்க விரும்புகிறீர்கள். மேலும் பழைய வடிவத்தில், சில வீரர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் பேட்டிங் செய்ய அல்லது பந்து வீச அதிக வாய்ப்புகளை பெற்றிருப்பார்கள். இம்பேக்ட் வீரர் விதி அதை மாற்றியுள்ளது. இது சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார்.