Ajinkya Rahane
Ajinkya Rahane  Kunal Patil
T20

“தோனி என்னை சுதந்திரமாக செயல்பட விட்டதுதான் இந்த அதிரடிக்கு காரணம்” - ரஹானே Open Talk!

Justindurai S

ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டு இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சாட்னர் மற்றும் துசார் தேஸ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Ruturaj Gaikwad and Ambati Rayudu

இதன்பின் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணிக்கு டீவன் கான்வே டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தாலும், 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரஹானே கைகொடுத்தார்! யாருமே எதிர்பாராத வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே, 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.1 ஓவரில் இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்த போட்டி குறித்து பேசியுள்ள ரஹானே, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மற்றும் கேப்டன் தோனி ஆகியோரே தனது இந்த அதிரடி ஆட்டத்திற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார். இது குறித்து ரஹானே பேசுகையில், “மொய்ன் அலிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் எனக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. டாஸின் போது தான் எனக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்ததே தெரியும். இதை தோனி தான் என்னிடம் கூறினார்.

பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கும், கேப்டன் தோனியும் அனைத்து வீரர்களையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கின்றனர், அதுவே சென்னை அணியின் பெரிய பலம்.
ரஹானே

இந்த தொடர் துவங்குவதற்கு முன்பே தோனி என்னிடம் என்னை முழுமையாக தயார்படுத்தி கொள்ள சொன்னார். அதே போல் இந்த போட்டிக்கு முன்பும் எதை பற்றியும் கவலையில்லாமல், உங்களுக்கு பிடித்தவாறு விளையாடுங்கள் என சொல்லிதான் என்னை களத்திற்குள் அனுப்பினார்” என்றுள்ளார்.

மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரஹானேவை ஐபிஎல் மினி ஏலத்தில் நம்பி எடுத்திருந்தது சிஎஸ்கே. அந்த நம்பிக்கையை நேற்று ரஹானே காப்பாற்றினார். 19 பந்துகளில் அரைசதம் அடித்து நடப்பு சீசனல் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை ரஹானே பெற்றார்.

இதனால் சிஎஸ்கே பவர்பிளேவில் 68 ரன்களை சேர்த்தது. 27 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே 61 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும்.