R Ashwin
R Ashwin Facebook
T20

“எங்களை கேட்காமலே அம்பயர் பந்தை மாற்றியது ஆச்சரியமாக இருந்தது”- போட்டிக்குப்பின் மனம் திறந்த அஷ்வின்

Justindurai S

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின், யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Ravichandran Ashwin

ராஜஸ்தான் அணிக்கு இது 3வது வெற்றியாக அமைந்தது. வெற்றியின் மூலம் அந்த அணி 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீசியபோது, பனியின் தாக்கம் இருந்ததால் ஈரமான பந்தை அம்பயர்கள் தாங்களாகவே மாற்றினர். இந்நிலையில் தங்கள் அணியிடம் கருத்து கேட்காமலேயே அம்பயர்கள் பந்தை மாற்றியது குறித்து அஸ்வின் போட்டி முடிந்தபின் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Ravichandran Ashwin

இதுகுறித்து போட்டி முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அஸ்வின், “மைதானத்தில் நிலவிய பனியின் தாக்கம் காரணமாக அம்பயர்கள் பந்தை தாங்களாகவே மாற்றியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இது இதற்கு முன்பு நடந்ததில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் களத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் என்னை கொஞ்சம் குழப்பிவிட்டன. அந்த நேரத்தில் என்ன சொல்வதென்றே தெரியாமல் போய்விட்டது. இது நல்லதுக்காகவும் இருக்கலாம், கெட்டதுக்காகவும் இருக்கலாமென தோன்றியது. எப்போதுமே எங்கள் எதிர்பார்ப்பு, எல்லா தரப்பும் பேலன்ஸ் ஆகும் வகையில் செயல்பட வேண்டும் என்பதுமட்டுமே.

போட்டியில் அந்த நேரத்தில் ஃபீல்டிங் செய்தது நாங்கள்தான். ஆனால் பந்துவீச்சாளர்கள் யாரும், பந்தை மாற்றுமாறு கேட்கவில்லை. இருந்தபோதிலும் நடுவரின் ஒப்புதலின் பேரில் பந்து மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து நான் அவர்களிடம் கேட்டபோது, ‘நாங்கள் அப்படி மாற்றலாம்’ என்றார். எனவே இனி ஒவ்வொரு போட்டியிலும் பனியின் தாக்கம் இருந்தால் பந்தை மாற்றிவிடுவார்கள் என்று நம்புகிறேன்

Ravichandran Ashwin

பந்து தொலைந்தாலோ அல்லது சேதம் அடைந்தாலோ தான் பந்தை மாற்றமுடியும் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் மாற்றப்பட்ட பந்தின் தேய்மானம், பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில்தான் மாற்று பந்து வழங்க வேண்டும். ஆனால் இப்போதுதான் பந்து ஈரமாகவோ அல்லது வழுவழுப்பாகாவோ மாறினாலே பந்தை மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. எனக்கும் இப்போதுதான் இது தெரிந்தது.

இந்த ஐபிஎல்-ஐ பொறுத்தவரை, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் அவை வரையறைக்குள் இருக்கவேண்டும்” என்றுள்ளார்.