KKRs first win against RR match PT
T20

'One Man Show' - வெளுத்து வாங்கிய டி காக்! சுழலில் வருண், மொயின் அலி மேஜிக்! RR-க்கு மீண்டும் சோகம்!

வெளுத்து வாங்கிய டி காக்! சுழலில் வருண், மொயின் அலி மேஜிக்! RR-க்கு மீண்டும் சோகம்! KKR-க்கு முதல் வெற்றி

Rajakannan K

ஐபிஎல் போட்டிகள் என்றாலே சுவாரஸ்யங்களுக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. ஆர்சிபி அணியின் அசத்தல் வெற்றி, ஹைதராபாத் அணியின் 286 ரன்கள் குவிப்பு என பல விஷயங்கள் தொடக்கம் முதலே ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது இந்த சீசன். அந்த வகையில் குவாஹத்தியில் நடைபெற்ற 6வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் முதல் வெற்றியை ருசிக்க கடும் போட்டி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் பேட்டிங் மட்டுமே செய்து வருவதால் ரியான் பராக் இந்தப்போட்டிக்கும் கேப்டனாக செயல்பட்டார். போட்டியில் என்ன நடந்தது வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஷ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே இந்த ஜோடி ரன் எடுக்க தடுமாறியது. ஒன்று இரண்டு ரன்கள் தான் எடுத்தார்கள். சிக்ஸர், பவுண்டரிகளே வரவில்லை.

ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 66 ரன்கள் விளாசியிருந்த சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியில் 11 பந்துகளை சந்தித்து 13 ரன்களில் க்ளீன் போல்ட் ஆகி ஏமாற்றினார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ரியான் பராக் 3 சிக்ஸர்களுடன் சற்று நேரம் அதிரடி காட்டி 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். அவரை தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த ஜெய்ஷ்வாலும் 29 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பிறகு வந்தவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். நிதிஷ் ரானா 8 ரன்கள், ஹசரங்கா 4 ரன்கள், சுபம் துபே 9 ரன்கள், ஷிம்ரன் ஹெட்மயர் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் மட்டும் 33 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 சிக்ஸர்களுடன் 16 ரன்கள் எடுத்ததால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அசத்தலாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும், 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மொயின் அலி 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதேபோல், ஹர்தித் ரானா, வைபவ் ஆரோரா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

152 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களான மொயின் அலியும், டி காக்கும் மிகவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். விக்கெட் வீழ்ந்து விடக்கூடாது என்பதில் இருவரும் கவனமாக இருந்தனர். டி காக் அதிரடிக்கு மாறிய நிலையில், மொயின் அலி 12 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ரஹானே 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு தனி ஆளாக ஆட்டத்தை தன்னுடைய தோளில் சுமந்தார் டி காக். சிக்ஸர் பவுண்டரிகளாக பறக்கவிட்டார். ரகுவன்ஷி அவருக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.

விக்கெட்டை வீழ்த்த ராஜஸ்தான் அணியினர் எவ்வளவு முயன்ற போதும் அது பலனளிக்கவே இல்லை. மிகவும் சிறப்பான ஒரு நாக்கை ஆடினார் டி காக். இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டி காக் 61 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகுவன்ஷி 17 பந்துகளில் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

முதல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியை தழுவிய நிலையில் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை ருசித்தது. முதல் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவிய ராஜஸ்தான் அணிக்கு மற்றுமொரு தோல்வி கிடைத்துள்ளது.