கிட்டதட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், பாஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் விளையாடியது சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்தது சென்னை அணி. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய இளம் வீரர்கள் ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே இந்த முறையும் ஏமாற்றினர். இருவரில் யாராவது ஒருவர் ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ரஷீத் 11 ரன்களிலும், ஆயுஷ் மாத்ரே 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பவர் பிளே மந்தமாக இருந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா சில பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அவரும் 17 ரன்களில் ஆட்டமிழக்க, பவர் பிளே முடிவில் 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சென்னை அணி.
சரி, இன்றைக்கும் 120 ரன்கள் கூட வராது என்றே சிஎஸ்கே ரசிகர்கள் நினைத்திருந்த நேரத்தில், டெவால்ட் பிரேவிஸ் (Dewald Brevis) உடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை கையில் எடுத்தார் சாம் கரன். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய சாம் கரன், பின்னர் பவுண்டரிகளை பறக்கவிட்டார். பிரேவிஸ் அவருக்கு சிங்கிள்கள் எடுத்து நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த பிரேவிஸ் அதிரடிக்கு மாறி கடந்த போட்டியைப் போல் சிக்ஸர் மழை பொழிவார் என்று ரசிகர்கள் நினைக்க, அவரோ 26 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாம் கரன் 30 பந்துகளில் அரைசதம் விளாசிய கையோடு, அடுத்த ஓவரிலேயே இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளைப் பறக்கவிட்டார். அதனால் 16 ஓவர்களில் 160 ரன்களைத் தொட்டது சென்னை அணி. 80 ரன்களை கடந்த சாம் கரன் எப்படியும் சதம் விளாசுவார் என்று எதிர்பார்ப்பு எகிற, ஜான்சன் வீசிய 18 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரும் விளாசினார். ஆனாலும், அதே ஓவரில் கேட்ச் ஆகி 88 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதம் விளாசாமல் ஏமாற்றினார் சாம் கரன். சிறப்பாக விளையாடிய சாம் கரன் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகள் விளாசி முதல் இன்னின்ங்ஸை சென்னை அணிக்கு சாதகமாக மாற்றினார்.
பின்னர் வந்த கேப்டன் தோனி முதல் பந்திலே ஒரு பவுண்டரி விளாசினார். தோனியின் அதிரடியை எப்படியாவது கட்டுப்படுத்தலாம் என்று நினைத்த ஸ்ரேயாஸ் ஐயர் 19 ஆவது ஓவரை ஸ்பின்னரான சாஹலுக்கு கொடுத்தார். அதற்கு கையில் பலனும் கிடைத்தது. முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய தோனி மீண்டும் ஒரு சிக்ஸர் விளாச முயன்று எல்லைக்கோட்டில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார் தோனி. அத்தோடு அந்த ஓவரில் அதிர்ச்சி முடியவில்லை. அந்த ஓவரில் மற்றொரு சோகமும் நடந்தது . அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்க, அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த காம்போஜ் மற்றும் நூர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க, சாஹலுக்கு ஹாட்ரிக் விக்கெட் கிடைத்தது. அந்த ஓவரில் மொத்தம் 4 விக்கெட்டுகள் சரிந்து திருப்பு முனையாக அமைந்தது. கடைசி ஓவரிலாவது துபே ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்த்தால் முதல் பந்தில் பவுண்டரி விளாசி அடுத்த பந்திலே ஆட்டமிழந்து அவரும் ஏமாற்றம் அளித்தார். 220 ரன்கள் வரை எடுக்க வாய்ப்பிருந்த நிலையில் சென்னை அணியால் 200 ரன்களை எட்ட முடியாதது சோகத்திலும் சோகம்.
கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் மளமளவென விழுந்ததால் சென்னை அணி 19.2 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் சாஹல் 4 விக்கெட் சாய்க்க, அர்ஸ்தீப் சிங், ஜான்சன் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.
191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். சென்னைக்கு எதிரான கடந்தப் போட்டியில் அதிரடியாக விளாசி சதம் விளாசியிருப்பார் பிரியான்ஷ். இந்தப் போட்டியிலும் பிரியான்ஷ் பவுண்டரிகளாக விளாச சென்னை அணி வீரர்கள் கொஞ்சம் ஜர்க் ஆனார்கள். ஆனால் பிரியான்ஷ் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க சென்னை ரசிகர்கள் சற்றே பெருமூச்சுவிட்டனர். ஆனால், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து அதிரடி காட்டினார் பிரப்சிம்ரன். சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்ட அவர் 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் ஆட்டமிழந்த உடனே அவரது அதிரடியை கையிலெடுத்தார் ஸ்ரேயாஸ். அவரது அதிரடியால் சென்னை அணியில் கைகளில் இருந்து வெற்றி மெல்ல மெல்ல தூரம் போனது.
அடுத்து வந்த வதேரா 5 ரன்னில் ஆட்டமிழந்தாலும் சற்று நேரம் தாக்குப்பிடித்த ஷஷாங் சிங் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை தனது அசத்தலான கேட்ச் மூலம் எடுத்தார் பிரேவிஸ். நடப்பு ஐபிஎல் சீசனில் நிச்சயம் அது ஒரு சிறந்த கேட்ச் என்பதில் சந்தேகமே இல்லை. எல்லைக்கோட்டில் மூன்று முறை தாவி தாவி பந்தை மேலே போட்டு பிடித்து மிரட்டிவிட்டார் பிரேவிஸ். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தை முடிக்க நினைத்து சிக்ஸர் மழை பொழிந்தார். ஆனாலும், 41 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பதிரானா பந்தில் க்ளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை தொடக்கத்திலேயே பதிரானா எடுத்திருந்தால் சென்னைக்கு சாதகமாக ஆட்டம் அமைந்திருக்கும்.
ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்கும் போது பஞ்சாப் அணிக்கு 8 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனாலும் ஆட்டத்தின் கடைசியில் சின்ன பதட்டம் உருவானது. 19 ஆவது ஓவரை 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து பதிரானா முடிக்க, கடைசி ஓவரில் 2 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை கலீல் அஹமது வீசினார். முதல் பந்தில் ரன் எதுவும் விட்டுக்கொடுக்காத நிலையில் அடுத்த பந்தை ஒயிடாக வீசி ஒரு ரன் விட்டுக்கொடுத்தார். ஆனால், அடுத்தப் பந்தில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் கேட்ச் ஆகி அவுட் ஆக ஆட்டத்தில் கொஞ்சம் பரபரப்பு நிலவியது. அதற்கு ஏற்ப மூன்றாவது பந்தும் டாட் பால் ஆனதால் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களும் சற்றே உற்சாகம் ஆனார்கள். ஆனால் நான்காவது பந்தில் சிஎஸ்கேவின் கனவு கலைந்தது. ஜான்சனின் பேட்டில் எட்ஜ் ஆகி கீப்பர் தோனியை தாண்டி பவுண்டரிக்கு சென்றது. பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து தன்னுடைய 6வது வெற்றியை பதிவு செய்த கையோடு பாய்ண்ட் டேபிளில் இரண்டாவது இடத்திற்கும் ஜம்ப் ஆனது.
சென்னை அணி சொந்த் மைதானத்தில் ஐந்தாவது தோல்வியை சந்தித்து தன்னுடைய ரசிகர்களின் நெஞ்சில் மீண்டும் இடியை இறக்கியது. அத்துடன் முதல் அணியாக நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளது. எத்தனை தோல்விகளை தான் தாங்கிக் கொள்வது என்று ரசிகர்கள் சோகத்துடன் சோப்பாக்கம் மைதானத்தை விட்டு கிளம்பினார்கள். 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி தன்னுடைய 8 ஆவது தோல்வியை பதிவு செய்துள்ளது சோகத்திலும் சோகம்.